அப்பாவி கமல், அதட்டல் சத்யராஜ்: சபதம் போட்டு சாதித்த மங்கம்மா!

அப்பாவி கமல், அதட்டல் சத்யராஜ்: சபதம் போட்டு சாதித்த மங்கம்மா!

இரட்டை வேடப் படங்கள் என்றாலே இரண்டு இலக்கணங்கள் அடிப்படையாகவே இருக்கும். ஒன்று... ஒருவர் அப்பாவியாகவும் இன்னொருவர் வீரசூரராகவும் இருப்பார். இன்னொன்று... அப்பா - மகனாகவோ, அண்ணன் - தம்பியாகவோ இருப்பார்கள். மூன்றாவதாக இன்னொரு விஷயமும் உண்டு. அதுதான் பழிக்குப் பழி. இவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பார். அல்லது குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் இன்னொருவர் பழிவாங்குவார். அல்லது இருவரும் சேர்ந்து பழிவாங்குவார்கள். ஒரு தோசையைத் திருப்பித் திருப்பிப் போடுவது மாதிரிதான் ‘டபுள் ஆக்‌ஷன்’ கதைகளும்!

இது ஏதோ நம் தமிழ்ப்பட இரட்டை வேடப் படங்களுக்கும் மட்டும் பொருந்தும் என்று நினைத்துவிடாதீர்கள். உலகம் முழுக்க இதே கதைதான். இந்தியில் இப்படியொரு கதையை எடுக்க, மெனக்கெட்டு அதைத் தமிழுக்குக் கொண்டு இங்கே உலவவிட்டார்கள். அதுதான் ‘மங்கம்மா சபதம்’.

இந்தியில் மிதுன் சக்கரவர்த்தி, ஸ்மீதா பாட்டீல், அம்ரீஷ் புரி நடிப்பில் 1984-ல் வெளிவந்த படம் ‘கசம் பைதா கர்னேவாலே கி’. ரீமேக் படங்களின் ஜாம்பவான் என்று பேரெடுத்த தயாரிப்பாளர் கே.பாலாஜி, இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி, தமிழில் எடுத்ததுதான் ‘மங்கம்மா சபதம்’.

மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சுகுமாரி. அவரின் கணவர் இறந்துவிடுகிறார். இவர்களுக்கு ஒரு மகன். சுகுமாரியின் தம்பி சத்யராஜ். சிறுவயதில் இருந்தே, அக்காவின் மகனை அடித்தும் உதைத்தும் அடிபணியச் செய்தும் வளர்க்கிறார். கோழையாக, பயந்தாங்கொள்ளியாக, அப்பாவியாக, அரைலூசு போல் வளர்க்கிறார்.

தண்ணீரில் தள்ளிவிட்டு கொடுமைப்படுத்துவார். ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’ என்று சொல்லி பாடம் நடத்துவார். பாம்பைக் கையில் வைத்துக்கொண்டு, ‘நான் பைத்தியம்னு சொல்லு. இல்லேன்னா உம்மேல பாம்பைப் போட்ருவேன்’ என மிரட்டுவார். தினமும் நூறு தடவை ‘நான் பைத்தியம் நான் பைத்தியம் நான் பைத்தியம்’ என்று சொல்லச் சொல்லி உதைத்து ஒரு பீதியிலேயே வைத்திருப்பார். அந்த அக்கா பையன்தான் கமல்.

சுஜாதாவும் பாலன் கே.நாயரும் திருட்டுக் கூட்டம். அவர்களின் பங்களாவுக்கு ஒரு டிராமாவைப் போட்டு திருட வருவார்கள். சொத்துகள் அனைத்தும் கமல் பெயரில் இருப்பதால், சுஜாதாவைத் திருமணம் செய்துவைத்து, சொத்தை அபகரிக்கலாம் எனத் திட்டமிடுவார் சத்யராஜ். இப்படித் திருடுவதற்காக வந்த சுஜாதாவுக்கு கமலைக் கொடுமைப்படுத்தும் உண்மையெல்லாம் தெரியவரும். அவர் மீது உண்மையாகவே காதல் கொள்வார். உறவும் வைத்துக்கொள்வார்.

திருமணமான மறுநாள், கமலை அழைத்துக் கொண்டு ஊரை விட்டே ஓடிப்போவார் சுஜாதா. ஆனால் வழியில் மடக்கி, கமலைக் கொன்றுவிடுவார் சத்யராஜ். சுஜாதா தப்பிவிடுவார். கமலின் அம்மா சுகுமாரியும் இறந்துவிடுவார்.

சுஜாதாவைத் தேடுதேடு என தேடுவார்கள். கர்ப்பமாக இருப்பார். குழந்தை பிறக்கும். ஆண் குழந்தை. படிக்கிறபோது பள்ளியில் சிறுவனாக இருக்கும்போது, உடன் படிக்கும் பையன் அடித்துவிடுவான். சிறுவன் அழுதுகொண்டே வந்து விஷயம் சொல்லுவான் அம்மாவிடம். சுஜாதாவும் பையனை அடிப்பார்... ‘’இப்படி அடிவாங்கிட்டு வந்திருக்கியே வெக்கமா இல்ல?!’’ என்பார். அன்று முதல் கராத்தே உட்பட சகல வீரதீர செயல்களையும் கற்றுக்கொடுப்பார். பிறகு வளர வளர கமலாகிவிடுவார் என்பதுதான் நமக்குத் தெரியுமே!

உள்ளூரில் வம்பு செய்யும் அடியாட்களை அடித்து விரட்டுகிற வேலையெல்லாம் செய்வார் கமல். ‘இவங்களை அடிச்சு விரட்டுறதுக்கு இவ்ளோ நேரமா’ என்று அம்மா கேட்பார். இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றுவார். அங்கே மாதவியைப் பார்ப்பார். காதல் மலரும்.

இதனிடையே சுஜாதா, அப்பா கமல் பற்றியும் அவருக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் அவரை கொலை செய்துவிட்டார்கள் என்றும் சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படி செய்தார்கள் அந்தச் சொத்தை மீட்க வேண்டும் என்றும் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்றும் மகன் கமலிடம் சொல்லுவார்.

‘அப்படி மீட்பதாகவும் பழிவாங்குவதாகவும் சபதம் போட்டிருக்கிறேன்’ என்று தெரிவிப்பார். ‘அதை நான் நிறைவேற்றுகிறேன் அம்மா’ என்று கமல் புறப்படுவார். இப்போது தெரிந்திருக்குமே... சுஜாதாவின் கேரக்டர் பெயர் ‘மங்கம்மா’ என்று! இதுதான் ‘மங்கம்மா சபதம்’.

அப்பா கமல் அப்பாவி. மகன் கமல் சூரன். அப்பாவியாக, தொளதொள ஜிப்பாவும் வகிடு எடுத்த ‘விக்’கும் மூக்குக் கண்ணாடியுமாக பயந்து பயந்து பேசுகிற அப்பா கமல் நம் மனசை அள்ளிவிடுவார். சத்யராஜுக்கு பயந்து நடுங்குகிற ஒவ்வொரு காட்சியிலும் கமலின் நடிப்பால் தியேட்டரில் கரவொலிக்குப் பஞ்சமே இருக்காது. அதேபோல் உருட்டலும் மிரட்டலுமாக சத்யராஜின் விஷமத்தனங்களையும் வில்லத்தனத்தையும் பார்ப்பதற்கு நமக்கே கோபம் வரும்.

‘எங்க வீட்டு பிள்ளை’யில் அப்பாவி எம்ஜிஆர். அவரின் அம்மா பண்டரிபாய். அவருடைய தம்பி நம்பியார். தாய்மாமா நம்பியார் அக்கா பையனை இப்படித்தான் வெளுத்தெடுப்பார். தெலுங்கில் ‘ராமுடு பீமுடு’ என்று என்டிஆர் நடித்த படத்தைத்தான் ‘எங்க வீட்டு பிள்ளை’யாக எடுத்தார்கள். இந்த தோசையைத்தான் தமிழில் ஒரு திருப்பு, இந்தியில் ஒரு திருப்பு, தமிழில் மீண்டுமொரு திருப்பு என இந்தியாவின் பல மொழிகளிலும் போட்டுப்போட்டுத் தாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

மகன் கமல், சென்னை பாஷை பேசுகிறவர். அதெல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ஏற்கெனவே, ‘சட்டம் என் கையில்’, ‘சவால்’ முதலான படங்களில் சென்னை பாஷையில் கலக்கியவர் இதிலும் அசத்தியிருப்பார். கண்ணழகி மாதவியும் அவர் நடனமும் கொள்ளை கொள்ளும்.

கே.பாலாஜியின் தயாரிப்பு. ஆரூர்தாஸின் வசனங்கள் பல இடங்களில் சபாஷ் சொல்லவைக்கும். சங்கர் - கணேஷ் இசை. ‘சொர்க்கத்தின் வாசல்’ என்றொரு பாடல், எஸ்பிபி பாடியிருப்பார். ’அடேய் ஒடம்பெல்லாம்...’ என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியிருப்பார். ’ஊத்திக்க ராசா’ என்ற பாடலில் எஸ்.பி.பி. பட்டையைக் கிளப்பியிருப்பார். கமல் நடனத்தில் வெளுத்துவாங்கியிருப்பார். ’கோலாகோலா கோகோ கோலா சோடா சோடா விஸ்கி சோடா’ என்றொரு பாடலும் இசையும் செட்டுகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். திவாரியின் ஒளிப்பதிவும் கே.விஜயனின் இயக்கமும் கச்சிதமாக இருக்கும்.

இந்தச் சமயத்தில் இன்னொரு தகவலையும் சொல்ல வேண்டும். 1943-ல் நம்மூரில், அதாவது தமிழ் சினிமாவில், ‘மங்கம்மா சபதம்’ என்ற படம் வெளியானது. ரஞ்சன், வசுந்தராதேவி. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்திருந்தார்கள். ஜெமினி வாசன் தயாரித்த இந்தப் படத்தை ஆச்சார்யா என்பவர் இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ’எம்.டி.பார்த்தசாரதி, எஸ்.ராஜேஸ்வர ராவ்’ இருவரும் இசையமைத்தார்கள். படத்தில் மொத்தம் 15 பாடல்கள். அனைத்துமே மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தன என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும்.

1985 செப்டம்பர் 21-ம் தேதி, கே.பாலாஜி தயாரிப்பில், கமல், சுஜாதா, மாதவி, சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘மங்கம்மா சபதம்’ வேண்டுமானால் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஆனால் முந்தைய ‘மங்கம்மா சபதம்’ போல் படம் மிகப்பெரிய வெற்றியையெல்லாம் பெறவில்லை.

எனினும், கமலின் அப்பாவித்தன நடிப்பாலும் சத்யராஜின் அதட்டல் உருட்டலான நடிப்பாலும் ‘மங்கம்மா சபதம்’ இன்னும் ஞாபக அலமாரியில் பத்திரமாக இருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in