இதயம் எனும் இசைக் கோயில்!

இளையராஜா, மணிரத்னம், மோகன், கோவைத்தம்பி கூட்டணியின் சூப்பர்ஹிட் பாடல்கள்!
இதயம் எனும் இசைக் கோயில்!

சில படங்கள் பூஜை போடப்பட்டு அறிவிக்கும்போதே, படத்தின் நாயகனுக்கு என்ன வேலையாக இருக்கும் என்று சொல்லிவிடுவார்கள் ரசிகர்கள். தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்ஜிஆர் கோட்டும் சூட்டும் கூலிங்கிளாஸும் அணிந்துகொண்டு நடித்தால், ‘ஏதோ சிஐடியாக நடிக்கிறாப்ல வாத்தியார்’ என்பார்கள். ஜெய்சங்கரும் மாடர்ன் தியேட்டர்ஸும் இணைந்தால், துப்பறியும் அதிகாரி என்பார்கள். ஒளிப்பதிவு மேதை கர்ணனுடன் ஜெய்சங்கர் இணைந்தால், ‘கெளபாய் படம்’ என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள்.

அதேபோல், கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்க, இளையராஜா இசையமைக்க, மோகன் நடிக்கிறாரென்றால், ‘அப்புறமென்ன... மோகன் அநேகமா பாடகரா இருப்பார். ராஜா இசையில பாட்டெல்லாம் பட்டையைக் கிளப்பப் போவுது’ என்று சொல்லி, படத்துக்காகக் காத்திருக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படி, எல்லா தரப்பினரும் ஏகோபித்த ஆதரவுடன் காத்திருந்த அந்தப் படம், நடிப்பாலும் பாடல்களாலும் நம் இதயங்களில் இன்றைக்கும் குடிகொண்டிருக்கிறது. அந்தப் படம்... ‘இதயகோயில்’.

மிகப்பெரிய பாடகர் கெளரி சங்கர். ஆனால் ஏனோ சில ஆண்டுகளாகப் பாடாமல் இருக்கிறார். தாடியும் மீசையுமாக சோகமாகவே இருக்கிறார். தன் மன வேதனையைப் போக்க, குடியுடன் குடித்தனம் நடத்துகிறார். அப்படிப்பட்ட நிலையில், கல்லூரி மாணவி ராதா, பல போராட்டங்களுக்குப் பிறகு கல்லூரி விழாவுக்கு மோகனை விருந்தினராகப் பங்கேற்கச் செய்கிறார். அங்கே, சோகமும் துக்கமுமாக மோகன் பாடுகிறார். அதன் பின் மோகன் மீது இரக்கமும் அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ராதாவுக்கு வருகிறது. அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் இவரும் செல்கிறார்.

அப்படி ஒருநாள் செல்லும் இடம்... ஒரு கல்லறை. அந்தக் கல்லறையில் குடிகொண்டிருப்பவர்தான், மோகனின் இதயத்தில் குடிகொண்டிருக்கிறார். அப்படி குடியிருக்கும் அம்பிகாவுக்கு இதயத்தில் கோயிலை எழுப்பி அவரையே நினைத்து, அவர் பிரிவையே நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார். ராதாவிடம், மோகன் தன் கடந்தகாலத்தைச் சொல்கிறார்.

கிராமத்தில் பாட்டும் காதலுமாக இருக்கிற மோகன், ஒருகட்டத்தில் சென்னைக்கு வாய்ப்புத் தேடி வருகிறார். அலைஅலையாய் அலைந்த பின்னர் பல மாதங்கள் கழித்து வாய்ப்பு கிடைக்கிறது. அன்றுதான் ஒலிப்பதிவு. அந்தநேரத்தில், அம்பிகா மோகனைத் தேடி சென்னைக்கு வருகிறார். கயவர்களிடம் சிக்குகிறார். சின்னாபின்னமாகிறார். தற்கொலையும் செய்துகொள்கிறார்.

இத்தனை விவரங்களையும் அறியும்போது, ராதாவுக்கு மோகன் மீது இன்னும் காதல் கூடுகிறது. ‘உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்கிறார். ஆனால் அவரோ மறுக்கிறார். கல்லூரியில் ராதாவுடன் படிக்கும் கபில்தேவ், ராதாவைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். இறுதியில், மோகனின் விருப்பப்படி, கபிலுக்கும் ராதாவுக்கும் திருமணம். அங்கே பாடுகிறார் மோகன். இறுதியில் என்னானது என்பதை காதலும் உணர்ச்சியுமாக, இசையும் ராகமுமாகச் சொல்லியிருப்பதுதான் ‘இதயகோயில்’.

மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி, செந்தில், கபில்தேவ், சின்னி ஜெயந்த், சார்லி, ஜி.சீனிவாசன், தியாகு எனப் பலரும் நடித்திருந்தார்கள். படத்தில் மோகனின் பெயர் சங்கர். அம்பிகாவின் பெயர் கெளரி. அதனால் பாடகர் கெளரிசங்கர் என்றாகிறார் மோகன். ராதாவின் பெயர் சூர்யா.

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கினார். மணிரத்னம் இயக்கிய முதல் படம் ‘பல்லவி அனுபல்லவி’ எனும் கன்னடப் படம். அந்தப் படத்தில் இளையராஜா தந்த பாடல்களும் தீம் இசையும் இன்றும் வெகு பிரபலம். படமும் வெகுவாகப் பேசப்பட்டது.

‘இவர் நிறைய படிச்சிருக்கார். சினிமா பத்தி புதுசுபுதுசா சிந்திக்கிறார். இதுவரை சினிமால வேலை பாத்ததில்ல. ஆனாலும் இளம் வயசு. என்னவோ பெருசா பண்ணுவார்னு தோணுது, ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன்’ என்று மணிரத்னத்தை சத்யஜோதி பிலிம்ஸிடம் பரிந்துரை செய்தார் இளையராஜா. ‘பகல்நிலவு’ படத்தை இயக்கும் வாய்ப்பு மணிரத்னத்துக்குக் கிடைத்தது. அதேபோல் கோவைத்தம்பியிடம் ‘பகல்நிலவு’ பற்றி இளையராஜா சொல்ல, ‘இதயகோயில்’ பண்ணினார் மணிரத்னம்.

அது மணிரத்னம் தனக்கென இன்றைக்கு இருக்கிற அடையாளங்களை திரையுலகில் வெளிக்காட்டாத காலம். ’மெளனராகம்’ மற்றும் ‘நாயகன்’ வந்த பிறகுதான் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் காட்டினார் மணிரத்னம். ‘பல்லவி அனுபல்லவி’ ஒரு மாதிரி. ‘பகல் நிலவு’ வேறொரு மாதிரி. ‘இதயகோயில்’ இன்னொரு மாதிரி. ஆனால் இளையராஜா எப்போதுமே, எல்லோருக்குமே ஒரே மாதிரி! இந்தப் படத்தின் கதாசிரியர் ஆர்.செல்வராஜ். திரைக்கதையையும் வசனங்களையும் எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். நகைச்சுவைப் பகுதிக்கான காட்சிகளை ஏ.வீரப்பன் எழுதியிருந்தார்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் வெகு அழகாக தன்னைப் பொருத்திக்கொள்பவர் நடிகர் மோகன். அதிலும் பாடகர் கதாபாத்திரம், மைக்கைப் பிடித்துப் பாடவேண்டும், மெளனமாக, அளந்தே பேச வேண்டும் என்றால் திண்டுக்கல் ஜிலேபியே சாப்பிடுவது மாதிரி. மனிதர் கெளரிசங்கராகவே வாழ்ந்திருப்பார். அக்கா அம்பிகா, கிராமத்தில் பாவாடையும் தாவணியுமாக வந்து அசத்தினாரென்றால், தங்கை ராதாவோ, சென்னையில், கல்லூரி மாணவியாக, மாடர்ன் உடைகளில் வந்து நம்மை ஈர்த்திருப்பார். பாட்டும், இசையும்தான் கதை என்பதால், கவுண்டமணியும் செந்திலும் கூட பாடலையும் இசையையும் வைத்துக்கொண்டே ரவுசு பண்ணியிருப்பார்கள்.

இளையராஜா, கோவைத்தம்பி, மோகன் என்றால் பாடல்களுக்குச் சொல்லவா வேண்டும்? கவிஞர் வாலி எழுதிய ‘ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு’ பாடலை இளையராஜா பாடியிருப்பார். இன்றைக்கும் ஆட்டம்போடவைக்கிற பாடல் இது. கவிஞர் முத்துலிங்கம் எழுதிய ‘கூட்டத்திலே கோயில்புறா’ பாடலும் கிராமத்துக் கோயிலில் படமாக்கப்பட்ட விதமும் அழகு. ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்பிபி விளையாடியிருப்பார்.

கவிஞர் வைரமுத்துவின் ‘நான் பாடும் மெளனராகம் கேட்கவில்லையா?’ என்ற பாடல், இன்றைக்கும் நம் இரவுகளுடன் உறவாடும் பாட்டு. தலையணை நனைக்கும் பாட்டு. கவிஞர் மு.மேத்தாவின் ‘யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ?’ என்ற பாடலும் காட்சிதான் கதையின் திருப்புமுனை. பாடலைக் கேட்கும்போதே, அப்போது நிகழும் சம்பவங்கள் நம் மனதை இன்னும் அழுத்தி, கனக்கச் செய்துவிடும். பாவலர் வரதராஜன் எழுதிய ‘வானுயர்ந்த சோலையிலே’ பாடலும் ஒளிப்பதிவு நேர்த்தியும் கவிதையென இருக்கும். வாலியின் ‘பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்’ என்ற பாடலும் குதூகலம் கொடுத்தது. க்ளைமாக்ஸில் வருகிற ‘இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்’ நம்மை என்னவோ செய்துகொண்டே இருக்கிறது இன்னமும்! பாடலின் ஆரம்ப ஆலாபனையும் இடையிடையே வருகிற மங்கல இசையும் வயலினும் அடிவயிறு வரை சென்று, மொத்தக் கதையின் தாக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்திவிடும்.

‘அன்னக்கிளி’யில் முதன்முதலாக இசையமைத்த, ‘16 வயதினிலே’ படத்தில் ‘சோளம் வெதக்கையிலே’ என்று முதன்முதலாகப் பாடினார். ‘இதயக்கோயில்’ படத்தில் இன்னொரு முதல் விஷயத்தையும் அரங்கேற்றினார். ‘இதயம் ஒரு கோயில் அதில் உதயமொரு பாடல்’ என்ற பாடலை இளையராஜாவே எழுதி, இசையமைத்துப் பாடினார்.

87895274

மோகன் - அம்பிகாவுக்கு ஒரு பின்னணி இசை. மோகன் - ராதாவுக்கு ஒரு பின்னணி இசை. மற்ற தருணங்களிலெல்லாம் மற்றுமொரு பின்னணி இசை என்று பிஜிஎம்மில் கதையின் கனம் கூட்டிக்கொண்டே வருகிற ராஜ ஜாலத்தை இதிலும் நிகழ்த்தினார் இளையராஜா.

இளையராஜா - கோவைத்தம்பி, இளையராஜா - மோகன், இளையராஜா - மணிரத்னம் என்று எல்லாக் கூட்டணிக்குமான படமாகவும் அற்புதப் பாடல் கொண்ட காதல் காவியமாகவும் வந்திருந்தது ‘இதயக்கோயில்’. 1985 செப்டம்பர் 14-ம் தேதி வெளியானது இந்தப் படம்.

’இதயகோயில்’ வெளியாகி, 37 ஆண்டுகளாகின்றன. ‘கூட்டத்திலே கோயில் புறா’ நம் மனதில் பறந்துகொண்டேதான் இருக்கிறது. ‘நான் பாடும் மெளனராகம்’ என்பது கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ‘இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்’ என்று இதயத்தில் அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த நூற்றாண்டு என்றில்லாமல் இதயத்தில் கோயில் கொண்ட பாடல்கள், சாகாவரம் பெற்ற பாடல்களாக இருந்து, அடுத்தடுத்த தலைமுறையினரையும் ஏதோ செய்துகொண்டுதான் இருக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in