‘ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே’ என்று சொன்ன ‘திருமதி ஒரு வெகுமதி!’

‘திருமதி ஒரு வெகுமதி’
‘திருமதி ஒரு வெகுமதி’

இன்றைக்கு அத்திப்பூத்தது போலத்தான் குடும்பப் படங்கள் வருகின்றன. உறவுகளின் உன்னதத்தைச் சொல்லும் படங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் புத்தாயிரத்துக்கு சற்று முன்பு வரை குடும்பப் படங்கள் ஏராளமாக வந்தன. அப்படியான படங்களை எடுத்தவர்களில் பீம்சிங் முதல் வி.சேகர் வரை கொண்டாடப்பட்டார்கள். இந்த வரிசையில், தன் வசனங்களாலும் காமெடி கதைசொல்லல் உக்திகளாலும் தனி பாணி தந்தவர் விசு. அப்படி திருமதிகளுக்கான வெகுமரியாதையுடன் விசு சொன்ன அறிவுரைகள்தான் ‘திருமதி ஒரு வெகுமதி’ திரைப்படம்!

அக்கா, 2 சிறிய தம்பிகள். வேறு எவரும் இல்லாத நிலையில் வேலைக்குப் போய் தம்பிகளைப் படிக்கவைக்கிறார். அவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் நமசிவாயம், அவரை விரும்புகிறார். திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தைத் தெரிவிக்கிறார். ‘நாளைக்கு நமக்குன்னு ஒரு குழந்தை பொறந்துட்டா, என் தம்பியை இதேபோல பாத்துக்குவீங்களா?’ என்கிற கேள்விக்கு, ‘நமக்கு கல்யாணமாகாமலேயே ரெண்டு பசங்க இருக்காங்க. உன் தம்பிகளைத்தான் சொல்றேன்’ என நமசிவாயம் சொல்ல, நல்லபடியாக திருமணம் நடக்கிறது.

அக்கா, மாமா அரவணைப்பில் வளருகிறார்கள் பலராமனும் கிருஷ்ணனும். மூத்தவன் பலராமன் அரசுத்துறையில் வேலை. இளையவன் கிருஷ்ணன், கல்லூரி மாணவன். கொஞ்சம் முன்கோபி. சக மாணவியைக் காதலிக்கிறான். ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறொருவனுடன் நிச்சயம் நடக்கிறது. அதைத் தடுத்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறான். இப்படித்தான், கல்லூரி நிர்வாகத்தில் அவன் செயல்களுக்கு கெட்டபெயர் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

அந்த ஊரில் மிகப்பெரிய பணக்காரர் நாகர்கோவில் நாதமுனி. அவரின் ஒரே மகள் நந்தினி. வெளிநாட்டுப் பயணம் முடித்து திரும்பியவர். ‘’இந்தியாலாம் ஒரு நாடா. நான் வெளிநாட்டில்தான் செட்டிலாகப் போகிறேன்’’ என்று அலட்டிக்கொள்கிறாள். இது அவளின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. இந்த சமயத்தில், நந்தினியும் கிருஷ்ணனும் ஒரு விஷயத்தில் மோதிக்கொள்கிறார்கள். தன் மகளை அடக்கி ஆளும் குணம் கிருஷ்ணனுக்கு இருப்பதை உணர்ந்து, அந்த மோதலை ஊதிப்பெரிதாக்குவார் நாதமுனி. இதன் விளைவாக, இருவருக்கும் திருமணமும் செய்துவைத்துவிடுவார் .

மூத்தவன் பலராமன், வீடு ஜப்தி செய்கிற துறையில் பணிபுரிபவன். அங்கே, அவனுடன் வேலை பார்ப்பவர்கள் சம்பளத்தோடு, கிம்பளத்திலும் கொழித்திருக்கிறார்கள். அப்படிக் கிம்பளம் தரமுடியாததால், தாயும் மகளும் இருக்கிற வீடு ஜப்தி செய்யப்படுகிறது. இதில் வருந்துகிற பலராமன், அவர்களுக்கு பலவகையிலும் உதவுகிறான். ஏழ்மை நிலையிலும் படாடோப கனவுகளுடன் வளரும் அந்தப் பெண்ணுக்கும் பலராமனுக்கும் காதல் திருமணம் நடக்கிறது.

நல்லவன் என்று பேரெடுத்த பலராமனை, மனைவியின் பேராசை லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. கெட்டவன் என்று பட்டம் வாங்கிய கிருஷ்ணன் ‘’அடுத்த வேளை சோத்துக்கே அக்காவையும் மாமாவையும் எதிர்பாக்கற நீ, முதல்ல உழைச்சிட்டு வா. அதுவரைக்கும் உன் வீட்ல பச்சைத்தண்ணி கொடுக்கமாட்டேன்’’ என்ற மனைவியால் வேலைக்குச் செல்கிறான். நல்லவனாகிறான்.

அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதில் கில்லாடியான சத்தியமூர்த்தி, பலராமன் மனைவியின் ஆடம்பர ஆசைக்குத் தூபம் போடுகிறான். அவளும் கணவனுக்குக் குடைச்சல் கொடுக்க பலராமனும் லஞ்சம் வாங்கி, அவளுக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறான்.

கிருஷ்ணன் வங்கி உதவியுடன் சொந்தத் தொழில் செய்யத் தொடங்குகிறான். ஆரம்பத்தில் அடாவடித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தபோது, ‘’ஒருநாள்... நான் பெரியாளா வருவேன். சொந்தமா கார் வாங்குவேன். காரை நான் ஓட்டுவேன். பக்கத்துல மாமாவை உக்கார வைச்சிக்குவேன். அக்கா... பின் சீட் முழுக்க உனக்குத்தான். ஒய்யாரமா வரணும்’’ என்று அவன் சொல்ல, ‘’அப்படீன்னா நான் எங்கே டிக்கிலயா உக்கார்றது?’’ என்று பலராமன் கேட்க... எல்லோரும் சிரிப்பார்கள்.

ஆனால், விதி அப்படித்தான் நிகழ்த்தும். வாழ்க்கையில் முன்னேறிய கிருஷ்ணன், சொந்தமாக கார் வாங்க நிற்பான். அங்கே, பலராமனின் மனைவி, கணவரின் அக்காவையும் மாமாவையும் அசிங்கமாகப் பேசிவிட்டதாலும் தம்பி பலராமன் லஞ்சம் வாங்குகிறான் என்பது தெரிந்ததாலும் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள். அக்கா நெஞ்சுவலியால் நடுரோட்டில் அவதிப்படுவாள். நமசிவாயம் மருந்து வாங்கிக் கொண்டு ஓடிவருவார். ஆஸ்பத்திரிக்குச் செல்ல, போகிற வருகிற கார்களை நிறுத்தி உதவி கேட்பார். எந்தக் காரும் நிற்காது. எவரும் உதவிக்கு வரமாட்டார்கள்.

லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கும் பலராமனின் வீடு ரெய்டுக்கு ஆளாகும். அப்போது வீட்டை விட்டு ஓடும் கிருஷ்ணன், கார் ஒன்றின் டிக்கியில் ஒளிந்துகொள்வான். அது அவன் தம்பி கிருஷ்ணன் வாங்கிய கார். அந்தக் காரை வாங்கிக் கொண்டு வரும்போது, நடுரோட்டில் தவிக்கும் மாமாவைப் பார்ப்பான். காரை நிறுத்துவான். அக்காவைப் பார்ப்பான். அவர் இறந்துவிடுவார். கிருஷ்ணன் கார் ஓட்ட, மாமா முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, அக்காவின் சடலத்தை பின் சீட்டில் போட்டிருக்க, இவர்களுக்குத் தெரியாமல், டிக்கியில் இருப்பான் பலராமன். பார்க்கும்போது கலங்கிக் கதறினார்கள் ரசிகர்கள்.

பலராமனைக் கைது செய்வார்கள். அவன் மனைவியும் திருந்துவாள். அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டு, ‘’என் புருஷன் ஜெயில்லேருந்து வரும் வரைக்கும் இதான் எனக்கு ஜெயில். இது எனக்கு நானே கொடுத்துக்கற தண்டனை’’ என்பாள். ‘ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே’ என்று படத்துக்கு நடுநடுவே வருகிற பாடல், இறுதியில் வரும்; படமும் நிறைவுபெறும்.

விசு படமென்றால் நாயகியின் பெயர் உமாதானே. இதில் அக்காவாக வரும் கல்பனா கேரக்டரின் பெயரும் உமா. அவரின் கணவராக நிழல்கள் ரவி. பலராமனாக எஸ்.வி.சேகர். கிருஷ்ணனாக பாண்டியன். எஸ்.வி.சேகருக்கு ஜோடி கோகிலா. பாண்டியனுக்கு ஜோடி ஜெயஸ்ரீ. கோகிலாவின் அம்மா எம்.என்.ராஜம். ஜெயஸ்ரீயின் அப்பா விசு.லஞ்சம் வாங்கும் சத்தியமூர்த்தியாக கிஷ்மு. விசு வீட்டு வேலைக்காரப் பெண்ணாக, பிந்துகோஷ். இவர்களைக் கொண்டு, இரண்டரை மணி நேரப் படத்தை சிறப்பாக எடுத்தார் நடிகரும் கதாசிரியரும் வசனகர்த்தாவும் இயக்குநருமான விசு.

இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில், ’திருமதி ஒரு வெகுமதி’ படத்தை இயக்கினார் விசு. படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்தார்கள்.

‘ஒரு பெண் நினைத்தால், கெட்ட கணவனை நல்லவனாகவும் உயர்ந்தவனாகவும் மாற்றமுடியும்’ என்பதற்கு உதாரணமாக ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தையும் ‘ஒரு பெண் பேராசைப்பட்டால், அவள் தன் கணவனை எந்தத் தப்பான எல்லைக்கும் செல்லவைப்பால்’ என்பதை கோகிலா கேரக்டர் மூலமாகவும் நமக்கு உணர்த்தியிருந்தார் விசு. இன்றைக்கு எல்லோராலும் கொண்டாடப்படுகிற யதார்த்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இந்தப் படத்தில் மாணவனாக நடித்திருந்தார். அநேகமாக, நாடகங்களில் நடித்து வந்தவருக்கு இதுவே முதல் படமாக இருக்கும்.

அக்கா - தம்பிகள் சப்ஜெக்ட் புதிதாக இருந்தது. தியாகம் செய்யும் மாமா கதாபாத்திரம் நெகிழ்வை ஏற்படுத்தியது. வெளிநாட்டு மோகம் கொண்ட, பணக்கார பெண்ணின் பண்பாடும் கலாச்சாரமும் பார்ப்பவர்களை உத்வேகப்படுத்தியது. ‘ஒருகட்டம் வரைதான் துக்கிரித்தனமெல்லாம். பிறகு வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும்’ என்பதை பாண்டியன் கதாபாத்திரம் பாடம் நடத்தியது. ‘மனைவியின் சந்தோஷத்துக்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தவறு செய்யக் கூடாது’ என்பதை எஸ்.வி.சேகர் கேரக்டர் அறைந்து சொன்னது. ஆனால் இவற்றையெல்லாம் போதனையாக இல்லாமல், ஒரு அழகிய பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்ததுதான் இயக்குநர் விசுவின் அசாத்திய வெற்றி!

’வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்’ என்றொரு பாடல். ஜேசுதாஸ் பாடினார். ‘பார்த்துச் சிரிக்குது பொம்மை’ என்ற பாடலை வாணி ஜெயராம் பாடினார். ’கட்டிப்புடி சாமி தரிசனம் காமி’ என்ற பாடலை சித்ரா பாடினார். ’அக்கா அக்கா நீ அக்கா இல்ல, மாமா மாமா நீ மாமா இல்ல’ என்ற பாடலை எஸ்.பி.பி.யும் மலேசியா வாசுதேவனும் பாடினார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் அடிக்கடி துண்டு துண்டாக வருகிற ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற பாடலைப் போல, இதில், ‘ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே’ என்ற பாடல் இதில் அமைந்தது. இந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடினார். எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார்.

விசுவின் வசனங்களும் காட்சி அமைப்புகளும் சற்றே நாடகத்தனத்துடன் இருந்தாலும், ரசிக்கவும் சிலிர்க்கவும் வைத்தன. காட்சியின் கனத்தாலும் வசனங்களின் அழுத்தத்தாலும் ரசிகர்கள், படத்தைப் பாடமாக உணர்ந்து பூரித்தார்கள்.

1987ம் ஆண்டு வெளியான இயக்குநர் விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படம் வெளியாகி 36 ஆண்டுகளாகின்றன. தெலுங்கிலும் கன்னடத்திலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு, அங்கேயும் வெற்றியைப் பெற்றன. உலகில் கணவனும் மனைவியும் வாழ்கிற எந்த மூலையில் ரீமேக் செய்தாலும் நிச்சயம் வெற்றிதான். சரியான கதையை மையமாக்கி ’திருமதி ஒரு வெகுமதி’ தந்ததில் விசுவும் தனித்து இடம்பிடித்தார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in