தித்திக்கும் தீம் இசை... நடனத்தில் மலரும் காதல்: பூரிக்கவைக்கும் ‘புன்னகை மன்னன்’

பாலசந்தர், கமல், இளையராஜா, வைரமுத்து கூட்டணியின் இனிய வெற்றி
தித்திக்கும் தீம் இசை... நடனத்தில் மலரும் காதல்: பூரிக்கவைக்கும் ‘புன்னகை மன்னன்’
Updated on
5 min read

காதலனும் காதலியும் இறுதியில் தற்கொலை செய்துகொள்வார்கள் ‘மரோசரித்ரா’ படத்தில். கமலும் சரிதாவும் நடித்து கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படம் தெலுங்கு மொழியிலேயே தமிழகத்தில் வந்து, சென்னையில் 600 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர் கமலும் ரதியும் நடிக்க, ‘ஏக் துஜே கேலியே’ என்ற இந்திப் படத்தை பாலசந்தர் இயக்கினார். இந்தியில் கமலைக் கொண்டுசென்றார். இதிலும் காதலர்கள் க்ளைமாக்ஸில் தற்கொலை செய்துகொள்வார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது பாலசந்தருக்கு ஓர் யோசனை... காதலர்கள் தற்கொலை செய்துகொள்ள மலையிலிருந்து குதிக்கிறார்கள். காதலி இறந்துவிடுகிறாள். காதலன் பிழைத்துக் கொள்கிறான். அதன் பிறகு என்னவாகும் என்பதை வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தார். அப்படி உருவானவன்தான் ‘புன்னகை மன்னன்’.

ஏழை சமையற்காரரின் மகன் கமல். மிகப்பெரிய செல்வந்தரான செல்வாக்கு மிக்கவரின் மகள் ரேகா. இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்குக் கடும் எதிர்ப்பு. செல்வந்தரின் எதிர்ப்பைத் தாங்கமுடியவில்லை. நம்மைப் பிரித்துவிடுவார்கள் என பயப்படுகிறார்கள். ‘ஒன்றாகத்தான் சேர்ந்து வாழமுடியவில்லை. ஒன்றாகவே சாவோம்’ எனும் முடிவுக்கு வருகிறார்கள். அதன்படி காட்டுக்குள் வருகிறார்கள். கல்யாணம் செய்துகொள்கிறார்கள். தாம்பத்ய இணைப்பும் நிகழ்கிறது. கொட்டிக்கொண்டிருக்கும் அருவியின் உச்சிக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து ‘ஒன்... டூ...த்ரீ... ஜம்ப்...’ என்று சொல்லிவிட்டு இருவரும் குதிக்கிறார்கள்.

ஆனால் ரேகா இறக்கிறார். கமல் பிழைக்கிறார். ‘ரேகாவை கெடுத்தார்; கொலை செய்தார்’ என்று ரேகாவின் அப்பா கேஸ் போடுகிறார். போதாக்குறைக்கு தற்கொலை கேஸ் வேறு. தண்டனையை அனுபவிக்கிறார். சில வருடங்கள் கழித்து வருகிறார் கமல். நடனப் பள்ளி வைத்திருக்கும் ஸ்ரீவித்யா அவரை அரவணைத்து வேலையும் கொடுக்கிறார்.

ஒருநாள்... தற்கொலை செய்துகொண்ட இடத்துக்கு, காதலியின் நினைவுநாளில் வந்து மலர் தூவுகிறார் கமல். ‘இந்தப் புனிதப் பயணம் மற்றுமொரு சரித்திரம்’ என்று பாறையில் செதுக்கிய இடத்தில் நெகிழ்ந்து, உருகி, கண்ணீர் விடுகிறார். அப்போது ரேவதி தற்கொலை முயற்சியில் ஈடுபட முனைகிறார். அவரை கமல் காப்பாற்றுகிறார்.

‘பரிட்சையில் தோல்வி அடைந்ததுதான் இந்த முடிவை எடுக்கக் காரணம்’ என்கிறார் ரேவதி. பிறகு, கமலைப் பின்தொடர்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ரேவதிக்கு, கமலின் மீது காதல் வருகிறது. நடனப் பள்ளியிலும் சேருகிறார். எப்போதும் கடுகடுவென இருக்கிறார் கமல்.

கமலுக்கு ஒரு மாமா உண்டு. அவர் பெயர் சாப்ளின் செல்லப்பா. அவரும் கமல்தான். கமலின் மாமாவான சாப்ளின் செல்லப்பாவைச் சந்தித்து ரேவதி பேசுகிறபோதுதான் கமலைப் பற்றிய முந்தைய விஷயங்கள் அனைத்தும் தெரியவருகிறது. கமல் மீது இன்னும் காதல் அதிகமாகிறது.

ஒருகட்டத்தில், கல்லும் கரைகிறது. கமலும் ரேவதியைக் காதலிக்கத் தொடங்குகிறார். ரேவதி சிங்களத்துப் பெண். அவரின் தந்தை ஆரம்பத்தில் எதிர்க்கிறார். பின்னர் ஒருவழியாக இருவரின் காதலையும் ஏற்கிறார். ஆனால் இதையெல்லாம் தெரிந்துகொண்ட ரேகாவின் அப்பா, அவர்களைக் கொல்ல முடிவெடுக்கிறார். அதன் பிறகு என்னவானது என்பதுதான் ‘புன்னகை மன்னன்’.

நடனத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கியிருப்பார் கமல். கமலின் கதாபாத்திரப் பெயர் சேது. இந்த ‘சேது’ என்கிற பெயர் பாலசந்தருக்கு ரொம்பவே பிடிக்கும் போல! அவரின் முதல் இயக்கமான ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் கதாபாத்திரப் பெயர் ‘சேது’தான். தவிர, ராமேஸ்வரம், சேது சமுத்திரம், அடுத்து இலங்கை... ரேவதி சிங்களப் பெண் என்பதற்காகவும் கூட இந்தப் பெயரை வைத்திருக்கலாம் பாலசந்தர்.

முதல் கால்மணி நேரமே வந்தாலும் ரேகா மனதில் நிறைந்து நிற்பார். தற்கொலைக்கு குதிப்பதற்கு முன்னதான அந்த முத்தக் காட்சி ரொம்பவே பேசப்பட்டது. மிகவும் இயல்பான உணர்வாகவும் வெளிப்பட்டது. ரேகாவின் அம்மாவாக சிஐடி.சகுந்தலா நடித்திருப்பார். அதேபோல் கராத்தே ஹுசைனியும் சுந்தரும் இந்தப் படத்தில் அறிமுகமானார்கள். இயக்குநர் வஸந்த் ஒரு காட்சியில் வருவார்.

கமலின் அப்பா ‘மூணு சீட்டு முத்தப்பா’வாக, சமையல்காரராக டெல்லி கணேஷ். ஏகப்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்கிற கேரக்டர். குடி, சீட்டு என்று ஜாலியாக இருக்கும் கதாபாத்திரம். சிறையில் இருந்து வீட்டுக்கு வரும் கமல், ‘நான் என் ரூமிற்குப் போறேன்’ என்று டெல்லி கணேஷிடம் சொல்லுவார். அங்கிருந்து கர்ப்பத்துடன் ஒரு பெண் வருவாள். ‘நீங்க எப்போ?’ என்று கமல் கேட்க, ’’ ‘தாவணிக்கனவுகள்’ ரிலீஸ் ஆச்சு பாருங்க. அன்னிக்கிதான் சேத்துக்கிட்டாரு’’ என்பாள். இன்னொரு பெண் இருப்பார். ‘’அவளுக்குப் பிரசவம் பாக்க வந்தா. பாவம்... அவளோட சோகக்கதையையெல்லாம் சொன்னா. அதுவும் ராத்திரில. அதான் மனசு கேக்கல’’ என்பார் டெல்லி கணேஷ்.

ரேகாவின் அப்பாவாக சுதர்சன். நெற்றியில் விபூதியும் சிரிப்பில் வில்லத்தனமும் வைத்திருக்கும் விஷம வில்லன். ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரமும் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கும். மிகச்சிறப்பாக நடித்திருப்பார். ரேவதி மாடர்ன் பெண்ணாக, மாலினியாக, துறுதுறுவென வலம் வருகிற நாயகியாக கலக்கியெடுத்திருப்பார். அதேபோல் பரதத்திலும் வெஸ்டர்ன் நடனத்திலும் சிறப்புற திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

தமிழ்ப் படத்தில் இல்லாத புதுமை என்று சொல்லலாமா... வித்தியாசம் என்று சொல்லலாமா... தெரியவில்லை. ‘டபுள் ஆக்ட்’ என்றால் அண்ணன், தம்பியாக இருக்கும். அல்லது அப்பா, மகனாக இருக்கும். அல்லது பெரியப்பா, தம்பி மகனாக (கெளரவம்) இருக்கும். அல்லது அவர் யாரோ இவர் யாரோ என்றிருக்கும். இதில், நாயகன் சேதுவும் கமல்; அவருடைய தாய்மாமாவும் கமல் என்று காட்டியிருப்பார் பாலசந்தர். அதேபோல், ‘சாப்ளின் செல்லப்பா’ என்ற கதாபாத்திரத்துக்கு எத்தனை நியாயமும் கெளரவமும் சேர்க்கமுடியுமோ அதனை அசால்ட்டாகச் செய்திருப்பார் கமல்.

கமல் - ரேகா, கமல் - ரேவதி காதலெல்லாம் ஒருபக்கமிருக்க, ஸ்ரீவித்யாவும் சாப்ளின் செல்லப்பாவும் இத்தனை வயதாகியும் துணை இல்லாமல் இருக்க, ஒருகட்டத்தில் பரஸ்பரம் இணையும் இடம் கவிதையாகவும் கனமாகவும் அதேசமயம் குறும்புடனும் சொல்லப்பட்டிருக்கும்.

இந்தப் படத்துக்குப் பிறகுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’ வந்தது. ‘குள்ள கமல்’ வந்தார். அந்தக் குள்ள கமலின் டீஸர் போல, இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கமல் குள்ளமாக நடித்திருந்தார். பிறகு அதை டெவலப் செய்து ‘அப்பு’வாக வளர்த்துவிட்டாரோ என்னவோ?

பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்து எழுதினார். இசைஞானி இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற பாடலும் அதை ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி படமாக்கிய விதமும் நம்மை என்னவோ செய்யும். அதன் பிறகு வருகிற டைட்டில் பாடலாக ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ என்ற பாடலும் காதலின் அழகையும் அடர்த்தியையும் சொல்லி, நம் மனதை கனக்கச் செய்துவிடும். சித்ராவின் குரல் நம்மைக் கரைத்துவிடும்.

’வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்’ என்றொரு பாடல். மழைப் பாடல். இதேபோலான மழைப் பாடலாக ‘மெளன ராகம்’ படத்திலும் ஒரு பாடல் இடம்பெற்றது. அதிலும் ரேவதி நடித்திருந்தார். அப்போது இரண்டு மழைப் பாடல்களையும் ரசித்து வியந்தார்கள் ரசிகர்கள்.

‘காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்’ என்ற பாடலும் செட்டும் காஸ்ட்யூம் நடனமும் மிகச்சிறந்த முறையில் படமாக்கப்பட்டிருக்கும். கமலும் ரேவதியும் சிறந்த நடனத்தை வழங்கியிருப்பார்கள். ’சிங்களத்துச் சின்னக்குயிலே...’ என்ற பாடலும் ஹிட் டூயட் பாடலாக அமைந்தது.

’கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்’ எனும் கர்நாடக சங்கீத ஸ்டைலில் ஆரம்பித்து அசத்தும் பாடலை வாணி ஜெயராம் பாடினார். ‘மாமாவுக்கு குடும்மா குடும்மா’ என்ற பாடலில், இரண்டு கமலும் நடனத்தில் மோதிக்கொள்வார்கள். இரண்டு கமலுக்கும் மலேசியா வாசுதேவன் குரல் கொடுத்திருப்பார். பிரமாதம் பண்ணியிருப்பார் மலேசியா. தவிர இரண்டு கமலும் பின்னியிருப்பார்கள்.

சாப்ளின் செல்லப்பா
சாப்ளின் செல்லப்பா

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, படம் முழுக்க இளையராஜா தன் பின்னணி இசையால் புகுந்து விளையாடியிருப்பார். மேலும் படத்தில் ஒரு தீம் மியூஸிக் போட்டிருப்பார். அந்த இசை இத்தனை வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் வெகு பிரபலம். பலரும் இதை காலர் டியூனாகவும் டயலர் டியூனாகவும் வைத்திருக்கிறார்கள்.

முதல் காட்சியில் தற்கொலை செய்ய குதித்து, கமல் மரத்தில் தொங்குவார். பலத்த காயங்களுடன் உதடெல்லாம் கிழிந்து ஜெயிலில் இருப்பார். அந்தக் காட்சியில் நடிக்கும்போது தடக்கென்று வாய் வழியே நீர் சுரந்து முழுங்கமுடியாமல் இருப்பதையும் அதைத் துடைத்துக்கொண்டே பேசுவதையும் பார்த்து காட்சியை எடுத்து முடித்ததும் கமலை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு சிலிர்த்துப் பாராட்டினாராம் பாலசந்தர்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் புரியாத புதிர். ‘உங்க ஊர்ல கமலும் ரேவதியும் கடைசில இறந்துருவாங்களா மாப்ளே. ஆனா எங்க ஊர்ல சாகமாட்டாங்க. ஹேப்பி எண்டிங்தான் மச்சி’ என்றெல்லாம் ரசிகர்கள் குழம்பித் தவித்துப் பேசிக்கொண்டார்கள்.

‘புன்னகை மன்னன்’ படத்தில் கம்ப்யூட்டர் இசையையும் பயன்படுத்தினார் இளையராஜா.அதற்காக இளையராஜாவிடம் வேலை பார்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் உதவி இயக்குநர்களாக இயக்குநர் வஸந்த், எழுத்தாளர் பாலகுமாரன், இணை இயக்குநராக சுரேஷ் கிருஷ்ணா முதலானோர் பணியாற்றினார்கள்.

1986 நவம்பர் 1-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியானது ‘புன்னகை மன்னன்’. பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சில ஊர்களில் 150 நாட்களைக் கடந்தும் ஓடியது. பாடல்களுக்காகவும் பாலசந்தருக்காகவும் கமலுக்காகவும் திரும்பத்திரும்ப வந்து படத்தைப் பார்த்தார்கள் ரசிகர்கள்.

படம் வெளியாகி 36 ஆண்டுகளாகின்றன. ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலையும் ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ பாடலையும் இன்றைக்கும் இரவுகளில் கேட்டுக்கேட்டு ரசித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அந்த ‘சாப்ளின் செல்லப்பா’வை நினைத்து சிரித்துக்கொண்டேதான் இருக்கிறோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in