‘வா வெண்ணிலா’ என்று அழைக்கும் ‘மெல்லத்திறந்தது கதவு!’

- 36 ஆண்டுகளாகியும் நெஞ்சில் நிற்கும் பாடல்கள்!
 ‘வா வெண்ணிலா’ என்று அழைக்கும் ‘மெல்லத்திறந்தது கதவு!’

கண்களில் இறங்கி இதயம் நுழைவது காதல் என்பார்கள். அப்படிக் கண்களை மட்டுமே பார்த்து, காதலில் இறங்கிய காதலையும் காதலியின் இழப்பையும் கவிதையாகச் சொன்ன விதத்தில், காதலின் மென்மையை மெல்லத் திறந்துவிட்டது... ‘மெல்லத் திறந்தது கதவு’.

பாட்டின் மீதும் நாட்டுப்புற இசையின் மீதும் ஆர்வம் கொண்ட நாயகன், தன் உறவுகள் இருக்கிற கிராமத்துக்கு வருகிறான். அந்தக் கிராமத்தில் சிறு வயதில் இருந்தே அவனுடைய நினைப்பாகவே வாழும் முறைப்பெண் இருக்கிறாள். அவன் வருகையின் அறிவிப்பு அறிந்தது முதல் உற்சாகக் குயிலெனப் பறக்கிறாள். நாயகனும் தன் முறைப்பெண்ணிடம் சகஜமாகப் பழகுகிறான்; பேசுகிறான். அவளின் குரல் பிரமாதம் என்று பாராட்டுகிறான். தன் லட்சியத் தேடலுக்கு அவளின் உதவியையும் நாடுகிறான். பிறகு ஊருக்குச் செல்கிறான்.

அவன் பேசியதையும் பழகியதையும் சிரித்ததையும் பாராட்டியதையும் வைத்துக் கொண்டு முறைப்படி பெண் கேட்க அவனுடைய ஊருக்குச் சென்றால், “இவளைத் திருமணம் செய்துகொள்ளமுடியாது” என்கிறான். “திருமணமே வேண்டாம்” என மறுக்கிறான். ஒருகட்டத்தில் கிராமத்தில் அவளுக்கு ஆதரவற்றுப் போக, சென்னைக்கு முறைப்பையன் வீட்டுக்கே வந்து தங்குகிறாள். நாயகனின் அப்பாவுக்கு, தன் பையனுக்கும் இவளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசை. ஆனால் அவன் விடாப்பிடியாக மறுக்கிறான்.

ஒருமுறை... தன் முறைப்பெண்ணிடம் நாயகன் சகலத்தையும் சொல்ல நேரிடுகிறது. ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. தன்னுடன் படித்த இஸ்லாமியப் பெண்ணின் கண்களைப் பார்த்துக் காதலிக்கத் தொடங்குகிறான் அவன். அவளும் காதலிக்கிறாள்.

ஆனால் முகம் காட்ட மறுக்கிறாள். நிறைவாக இருவரும் தங்களின் காதலைச் சொல்லிக் கொள்கிறார்கள். ஓரிடத்துக்கு வரச்சொல்கிறாள் அந்தப் பெண். அங்கே, ஆசை ஆசையாக வரும் நாயகன், அவளை நெருங்கி, தேடிக்கொண்டே வரும் வேளையில், அந்தக் காட்டில் உள்ள புதைகுழியில் விழுந்துவிடுகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக, அவளின் உடல் புதைகுழிக்குள் மூழ்கிக் கொண்டே இருக்க, அவளின் கூக்குரல் கேட்டு, ஓடோடி வந்து பார்க்கிறான் நாயகன். அவளின் முகமெல்லாம் மூடப்பட்ட நிலையில், எந்தக் கண்களைப் பார்த்து அவன் காதலித்தானோ, அந்தக் கண்களை மட்டுமே பார்க்க, அவள் மூழ்கி இறந்து போகிறாள். ஃப்ளாஷ்பேக் முடிகிறது. பிறகு நாயகனும் முறைப்பெண்ணும் இணைந்தார்களே என்பதுதான் படத்தின் முடிவு.

நாயகனாக மோகன். கிராமத்து முறைப்பெண்ணாக ராதா. இஸ்லாமிய காதலியாக அமலா. படத்தில் மோகனின் பெயர் சுப்ரமணி. ராதாவின் பெயர் துளசி. அமலாவின் பெயர் நூர்ஜஹான். அமலாவின் தந்தையாக நம்பியார் நடித்தார். ராதாவின் தந்தையாக விசு நடித்தார். மோகனின் தந்தையாக இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் நடித்தார். ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இவர். குறிப்பாக, கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய ரவுண்டு வந்த இசையமைப்பாளர். இன்னும் சொல்லப்போனால், ஜி.கே.வெங்கடேஷ் ஒருவிதத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு குருவும் கூட! அவரிடம் பல படங்களுக்கு வேலை பார்த்திருக்கிறார் இளையராஜா.

ஆர்.சுந்தர்ராஜன் படம் என்றாலே அருமையான கதை இருக்கும். அந்தக் கதையை அழகாக நகர்த்திச் செல்கிற திரைக்கதை இருக்கும். அதில் காமெடியும் கலந்திருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பாடல்கள் அனைத்தும் அமோகமாக இருக்கும். கோவையில் பாக்யராஜுடன் நண்பராக இருந்த காலத்திலிருந்தே, பாடல்களின் மீது தீரா மோகம் கொண்ட ஆர்.சுந்தர்ராஜனுக்கு, இயக்குநரான பிறகு, தன் கதைக்குத் தகுந்த பாடல்களை எப்படிக் கேட்டுப் பெறுவது என்பதெல்லாம் தெரியாதா என்ன?

ஏவி.எம்-மின் ‘முந்தானை முடிச்சு’ படத்தை கே.பாக்யராஜ் இயக்கினார். ‘புதுமைப்பெண்’ படத்தை பாரதிராஜா இயக்கினார். அந்த வகையில், ஏவி.எம் தயாரித்த ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார்.

எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜாவால், தமிழ்த் திரையுலகம் அவரின் பக்கம் சென்றது. கொஞ்சம்கொஞ்சமாக மெல்லிசை மன்னருக்கு படங்கள் குறையத் தொடங்கின. அதேவேளையில், சொந்தப் படங்களும் எடுத்து, கையைச் சுட்டுக்கொண்டார் எம்.எஸ்.வி. இதையெல்லாம் உணர்ந்த ஏவி.எம்., எம்.எஸ்.வி-க்கு ஏதேனும் செய்ய முன்வந்தது. இதை இளையராஜாவிடம் தெரிவிக்க, திரையுலகிற்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே, எம்.எஸ்.விஸ்வநாதன் மீது, மிகுந்த மரியாதையும் ‘ஏகலைவ’ குருபக்தியும் கொண்டிருந்த இளையராஜா சம்மதித்தார்.

பின்னாளில் எம்.எஸ்.வி. மறைவையடுத்து, இசை நிகழ்ச்சி நடத்தி, அந்த வருமானத்தை எம்.எஸ்.வி. குடும்பத்தாருக்கு இளையராஜா வழங்கினார் என்பதையும் நாம் அறிவோம். ஆக, ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்துக்கு முதன்முதலாக மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இணைந்து இசையமைத்தனர். இதன் பின்னர் சில படங்களுக்கு இதுபோல் இருவரும் இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

’காதலுக்கு மரியாதை’ படத்தில் எனக்குத் தெரிந்து மிகப்பெரிய சிறப்பாக நான் கருதுவது, ‘காதலன் இந்து; காதலி கிறிஸ்டின்’. ஆனால் படத்தில் இருவரும் சேருவதற்கு இது பிரச்சினையாகவே இருக்காது. அதேபோல், ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் இந்து நாயகன்; இஸ்லாமியப் பெண் நாயகி. ஆனால், இருவரும் சேருவதற்கு மதம் குறுக்கிடாது. இருவருக்கும் நிகழ்கிற சின்னவிளையாட்டுதான் குறுக்கீட்டுக்கும் இழப்புக்கும் காரணமாக இருக்கும். ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் விஜயனிடம் ரதி பொய் பொய்யாகச் சொல்லி மரணிப்பார். இங்கே, பொய் சொல்லாமல் அமலா மரணத்தைத் தழுவுவார். இரண்டுமே நம் மனதைக் கனக்கச் செய்துவிடும்.

பாடல்களை கவிஞர் வாலியும் கங்கை அமரனும் எழுதினார்கள். ஆர்.சுந்தர்ராஜன் என்றாலே செம பாட்டுகள் கிடைத்துவிடும். மோகன் படங்களென்றாலே நல்ல பாடல்கள் அமைந்துவிடும். இளையராஜா என்றாலே பாடல்கள் ஹிட்டாகிவிடும். மெல்லிசை மன்னர் என்றாலே பாடல்கள் அப்படியே மனதில் தங்கிவிடும். இந்தப் படத்தின் பாடல்களும் அப்படித்தான். எல்லாப் பாடல்களும் என்னவோ செய்தன. இன்னும் செய்துகொண்டே இருக்கின்றன.

சக்கரக்கட்டிக்கு சித்திரக் குட்டிக்கு’ என்ற கலகலப்பான பாடல். இதில் சித்ரா, சசிரேகா, ஷைலஜா என பலரும் சேர்ந்து பாடியிருப்பார்கள். கங்கை அமரன் எழுதிய பாடல் இது. கங்கை அமரனின் இன்னொரு பாடலான ’ஊருசனம் தூங்கிருச்சு’ பாடலை ஜானகி பாடினார். இந்தப் பாடல் இன்றைக்கும் நம் இரவுகளை ஈரமாக்கும் பாடல். அந்தக் குழலோசையே நம் மன பாரத்தை இறக்கிவைத்துவிடும்.

’மற்ற எல்லாப் பாடல்களும் கவிஞர் வாலி. ‘தேடும் கண் பார்வை’ பாடலை எஸ்பி.பி-யும் ஜானகியும் பாடி, நம் உயிரைக் கரைத்துவிடுவார்கள். எஸ்பி.பி-யும் சுசீலாவும் பாடிய ‘தில் தில் தில் மனதில்’ நம்மை உற்சாகப்படுத்திவிடும். எஸ்பி.பி-யும் ஜானகியும் கொஞ்சிக் குழையும் ’வா வெண்ணிலா’ பாட்டு, பாடும் நிலா பாலுவுக்கு மற்றுமொரு நிலாப்பாட்டு. சித்ரா பாடிய ‘குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா’ எனும் பாடலை ஒலிபரப்பிவிட்டு, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். எல்லாப் பாடல்களுமே நம் பயணங்களையும் குறிப்பாக, வாழ்க்கைப் பயணத்தையும் இனிமையாக்குகின்ற பாடல்களாகவே அமைந்தன.

மோகன் தன் இயல்பான நடிப்பால் அசத்தியிருப்பார். ‘வெள்ளிவிழா’ நாயகன் என்று பேர் சொல்லும் வகையில் இந்தப் படமும் அவருக்கு அமைந்தது. வெள்ளந்தித்தனம், ஆழமான காதலைச் சொல்லி ஏங்குவது என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ராதா. அமலா அப்படியே இஸ்லாமியப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். அவரின் கண்களும் புருவங்களும் அழகு கூடி அசத்திக் கொண்டே இருக்கும். வசனத்துக்குப் பதிலாக பல இடங்களில், அவரின் கண்கள்தான் பேசிப்பேசி கைத்தட்டல்களை வாங்கும்.

இங்கே ஒரு விஷயத்தையும் சொல்லவேண்டும். படத்தின் முதல்பாதி சில ஊர்களில் இரண்டாம் பாதியாகவும் இரண்டாம் பாதி முதல் பாதியாகவும் திரையிட்டு, ‘உங்க ஊர்ல அமலா கதைதான் முதல்லயா... எங்க ஊர்ல ராதா கதைதான் முதல்ல’ என்றெல்லாம் கடிதம் எழுதிப் பேசிக்கொண்டார்கள் ரசிகர்கள். ஏனிந்த மாற்றம்... தியேட்டர் ஆபரேட்டரின் தவறா இது... என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், அமலா கதை முதலில் வந்தாலும் ராதா கதை முதலில் வந்தாலும் கதை என்னவோ குழப்பமின்றி சீராகவே இருந்தது என்பதுதான், ஆர்.சுந்தர்ராஜன் எனும் பண்பட்ட இயக்குநரின் திறமைக்கான சான்று!

வழக்கம்போலவே ஆர்.சுந்தர்ராஜனின் ஆஸ்தான எடிட்டர் பாஸ்கரன், ஒளிப்பதிவாளர் ராஜராஜன் என அவரின் டீம், தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகவே செய்திருந்தது. 1986-ம் ஆண்டு, இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தார் ஆர்.சுந்தர்ராஜன். ‘அம்மன் கோயில் கிழக்காலே’வும் வெற்றிப்படமாக அமைந்தது. ‘மெல்லத்திறந்தது கதவு’ம் வெற்றி.

1986 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி வெளியானது ‘மெல்லத் திறந்தது கதவு’. படம் வெளியாகி, 36 வருடங்களாகின்றன. நம் மனக்கதவை மெல்லத் திறந்து, உள்ளே புகுந்துகொண்ட பாடல்கள் அப்படியே கல்வெட்டுகளாக பதிவாகிவிட்டன. இந்தப் பாடல்கள் எல்லாமே இதோ... இந்த நிமிடத்தில்கூட எங்கோ ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும்; யாரோ கேட்டுக்கொண்டே இருப்பார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in