சந்தான பாரதிக்கும் பாண்டுவுக்கும் முதல் படம் வெளியாகி 35 ஆண்டுகள்!

’என் உயிர் கண்ணம்மா’ டைட்டிலில்...
’என் உயிர் கண்ணம்மா’ டைட்டிலில்...

திரையுலகில் ஒருவரின் முதல் படம் என்பது மறக்கமுடியாத படமாக அமைந்துவிடுவது உண்டு. நாயக வேடங்களில் நடித்தவர்கள் என்றில்லாமல், கேரக்டர் ரோல்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர்களுக்கும் முதல் படம் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்!

உதவி இயக்குநராக திரைத்துறைக்குள் நுழைந்து, இயக்குநராகவும் அடியெடுத்து வைத்து பல படங்கள் இயக்கிக் கொண்டிருந்த நிலையில், சந்தான பாரதி நடிகராக அறிமுகமானார். அதேபோல், ஒரு படத்துக்கு டைட்டில் எழுத்துகளை டிசைன் செய்து, அந்த டிசைன் மூலமே படத்தை வெற்றிப் படமாக்கும் சூத்திரத்தை அறிந்து வைத்துக் கொண்டு, அதில் வெற்றிப் பெற்ற நிலையில், நடிகராகவும் வலம் வந்து நமக்கு அறிமுகமானார் பாண்டு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதலான பல நடிகர்களுடன் நடித்தவர் சந்தானம். சிவாஜியை வைத்து ‘பாசமலர்’ முதலான படங்களைத் தயாரித்தவர் இவர். இவருடைய மகன் பாரதி, இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். அதேபோல், இளமைப் பருவத்திலிருந்தே டுடோரியல் காலேஜில் படிக்கும்போது, கமல்ஹாசனுடன் பழக்கம் ஏற்பட்டது. பிறகு அதுவே, மிகச்சிறந்த நட்பானது.

ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக பாரதி பணியாற்றிக் கொண்டிருந்தார். எம்ஜிஆர், என்டிஆர். முதலான திரைப்பிரபலங்களுக்கு மேக்கப் மேனாகப் பணிபுரிந்தவர் பீதாம்பரம். இவருடைய மகன் வாசுவும் அந்த சமயத்தில் உதவி இயக்குநராக ஸ்ரீதரிடம் பணியாற்றினார். பிறகு இருவரும் பாரதிராஜா தயாரிப்பில், ‘மெல்லப் பேசுங்கள்’ மூலம் ‘பாரதி வாசு’ என்ற பெயரில் இரட்டை இயக்குநர்களாக அறிமுகமானார்கள். இதன் பின்னர் சில படங்களை சேர்ந்து இயக்கினார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது... ‘பன்னீர் புஷ்பங்கள்’.

சிவசந்திரன்
சிவசந்திரன்

கங்கை அமரன் இந்தப் படம் உருவாவதற்கு முழு முயற்சிகள் மேற்கொண்டு உதவினார். இயக்குநர் ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார். அப்படி இசைஞானி இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, ஸ்ரீதரிடம் இளையராஜாவை எடுத்துச் சொன்னவர்கள், பாரதியும் வாசுவும்! ஆகவே, அவர்கள் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தை இயக்கும் வேளையில், இளையராஜாவிடம் இசையமைத்துக் கொடுக்கும்படி கேட்டார்கள். இளையராஜா சம்பளமே வாங்காமல் இசைத்துக் கொடுத்தார்.

இதன் பின்னர், பாரதி, சந்தான பாரதி என்றும் வாசு, பி.வாசு என்றும் தனித்தனியே படங்களை இயக்கினார்கள். கமல், பிரபு முதலான பல நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார் சந்தானபாரதி. 1988-ம் ஆண்டு, நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம்தான் ‘என் உயிர் கண்ணம்மா’.

இயக்குநர் கே.பாலசந்தரால் ‘பட்டினப்பிரவேசம்’ மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் சிவசந்திரனும் டெல்லி கணேஷும். பிறகு, பல படங்களில் இருவரும் நடிக்கத் தொடங்கினார்கள். டெல்லி கணேஷ் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார். காமெடி ரோலாக இருந்தாலும் குணச்சித்திர வேடங்களாக இருந்தாலும் டெல்லி கணேஷ் தன் முத்திரையை அதில் பதித்துவிடுவார்.

அதேபோல், நடிகர் சிவசந்திரன், ‘அவள் அப்படித்தான்’, ‘பொல்லாதவன்’ முதலான பல படங்களில் நடித்து வந்தார். சிவகுமார் நடிக்க உருவான ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் அருமையான பேராசிரியர் கேரக்டரில் அசத்தினார். அதேசமயம், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் வில்லனாக மிரட்டினார். பிறகு, 1988-ம் ஆண்டு, பிரபு, லட்சுமி, ராதா முதலானோரைக் கொண்டு ‘என் உயிர் கண்ணம்மா’ படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கினார்.

பாண்டு, சிவசந்திரன், சந்தானபாரதி
பாண்டு, சிவசந்திரன், சந்தானபாரதி

நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் தம்பிதான் பாண்டு இளம் வயதிலேயே ஓவியங்களில் முழு ஈடுபாடு கொண்டவர், வெளிநாட்டுக்குச் சென்று ஒரு எழுத்தை எப்படிக் கையாண்டு எழுதுகிறோமோ அதைக் கொண்டே நம் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது எனும் பாடத்தைப் படித்துத் தெரிந்துகொண்டார். அந்தக் காலத்தில், இடிச்சபுளி செல்வராஜ் பல படங்களுக்கு உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அவருடைய வேலைகளில் பிடித்துப் போன எம்ஜிஆர், தான் நடிக்கும் பல படங்களுக்கு அவரை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

மிகுந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ எடுத்துக் கொண்டிருந்தபோது, எம்ஜிஆருக்குள் லேசான பதற்றம். இந்தப் படம் சாதாரணமாக இல்லாமல் மிகப்பெரிய அளவுக்கு ஓடவேண்டும் என நினைத்தார். அதை அறிந்துகொண்ட இடிச்சபுளி செல்வராஜ், தன் தம்பியைப் பற்றிச் சொல்ல, அதன்படி பாண்டு உருவாக்கிக் கொடுத்த டிசைன் தான்... ‘உலகம் சுற்றும் வாலிபன்.’ இந்தப் படம் முதலான பல படங்களில், ‘டைட்டில் டிசைன் - பாண்டு’ என்று டைட்டிலில் இடம்பெற்றது. ஆக, திரைத்தொடர்புடன் இருந்த பாண்டுவுக்கும் சிவசந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் முதன்முதலாக இயக்கிய ‘என் உயிர் கண்ணம்மா’ படத்தில் பாண்டுவை நடிகராக்கினார். அதேபோல் சந்தான பாரதியையும் அறிமுகப்படுத்தினார் சிவசந்திரன்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘கரகாட்டக்காரன்’ முதலான படங்களில் வில்லனாகவும் கேரக்டர் நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கும் சந்தான பாரதி, சமீபத்தில் வெளியான கமலின் ‘விக்ரம்’ படத்தில் கூட ஏஜென்ட் உப்பிலியப்பனாக நடித்து அப்ளாஸ் அள்ளினார்.

அதேபோல், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல இயக்குநர்களின் படங்களில் பாண்டு தொடர்ந்து நடித்து வந்தார். சில படங்கள் அண்ணன் இடிச்சபுளி செல்வராஜும் தம்பி பாண்டுவும் சேர்ந்தும்கூட நடித்தார்கள். கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் பாண்டு.

நடிகரும் இயக்குநருமான சிவசந்திரனிடம் இதுகுறித்து கேட்டோம். ‘’பிரபு எனக்கு நல்ல நண்பர். ‘வெள்ளை ரோஜா’ முதலான படங்களில் நடிக்கும் போது, இன்னும் நல்ல நெருக்கமானோம். சிவாஜி சார் குடும்பத்துடனே நல்லதொரு பந்தம் இருந்தது எனக்கு. சிவாஜி சாருக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டு. அங்கே சந்தான பாரதியின் நட்பும் கிடைத்தது. அதேபோல பாண்டுவுடனும் நட்பு ஏற்பட்டது. இரண்டுபேரையும் பார்க்கும் போது, நடிப்பில் ஜொலிக்கக் கூடிய திறமை இருப்பதாக இருவரையுமே உணர்ந்தேன். பாண்டுவின் மேனரிஸம் வித்தியாசமானதாக இருக்கும். அதேபோல், சந்தான பாரதியின் முகத்திலும் குரலிலும் ஒரு ஈர்ப்பு தென்பட்டது. அதனால்தான், என் முதல் இயக்கமான ‘என் உயிர் கண்ணம்மா’ படத்தில் இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்தினேன்.

இதன் பிறகு பாண்டு ஏராளாமான படங்களில் நடித்தார் என்பதும் சந்தான பாரதியும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து வருகிறார் என்பதும் இன்றைக்கும் எனக்குப் பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது’’ என்றார் சிவசந்திரன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in