சத்யராஜின் 100-வது படம் வெளியாகி 33 ஆண்டுகள்!

பி.வாசு - இளையராஜா கூட்டணியில் பிறந்த ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’
சத்யராஜின் 100வது படம்
சத்யராஜின் 100வது படம்

திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். ஓரிரண்டு காட்சிகளில் நடித்தார். முகம் தெரியும் விதமாக நடித்தார். வில்லனுக்கு அடியாளாக நடித்தார். வில்லனாகவே மிரட்டினார். பிறகு கதாநாயகனாக எத்தனையோ வேடங்கள்; ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்கள். ஒவ்வொரு படத்திலும் தனக்கென ஒரு ஸ்டைலை, முத்திரையை, வசன உச்சரிப்பைக் கொடுக்கத் தவறியதே இல்லை. அதனால்தான் ரங்கராஜ், சினிமாவில் சத்யராஜ் என்றானார். பின்னர் உங்கள் சத்யராஜ் என்று கொண்டாடியது திரையுலகம். அதையடுத்து புரட்சித் தமிழன் என்று ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

1978-ம் ஆண்டு ‘சட்டம் என் கையில்’ எனும் கமல் படத்தில் அறிமுகமான சத்யராஜ், படிப்படியாக முன்னுக்கு வந்தார். மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகராக மின்னினார். சத்யராஜின் டயலாக் டெலிவரிக்காகவே படம் பார்த்தார்கள். அதில் இயக்குநரும் அவருடைய நண்பருமான மணிவண்ணனுக்கு பெரும்பங்கு உண்டு. இதையடுத்து எண்பதுகளில் எல்லா இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். 1978-ம் ஆண்டு தொடங்கிய சத்யராஜின் பயணத்தில் 1989-ம் ஆண்டு மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. நடிக்கத் தொடங்கிய 11-வது ஆண்டில், 100-வது படத்தைத் தொட்டார்.

இதன் நடுவே ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள். வெள்ளிவிழாப் படங்கள். 100-வது படத்தை பி.வாசுவை இயக்கவைத்தார். தன் மேனேஜர் ராமநாதனைத் தயாரிப்பாளராக்கினார். ‘ராஜ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ எனும் பேனரில் நிறைய படங்களை பின்னாளில் தயாரிக்க, சத்யராஜ் நடித்துக் கொடுத்தார். அதற்கெல்லாம் ஆரம்பமாக, சத்யராஜின் 100-வது படம் அமைந்தது. அதுதான் ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’.

தமிழ் சினிமாவிலும் தமிழகத்திலும் எம்ஜிஆரைப் பிடிக்காதவர்கள் என எவரும் இருக்க முடியுமா என்ன?

எம்ஜிஆரையும் அவரின் பாணியையும் அவரின் புகைப்படங்களைக் கூட காட்டிக்கொண்டே இருந்தவர்கள்... நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ். இன்னொருவர் சத்யராஜ். ‘என் கலையுலக வாரிசு’ என்று எம்ஜிஆரே பாக்யராஜை அறிவித்தார். எம்ஜிஆரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவரின் நினைவாக எம்ஜிஆர் உடற்பயிற்சி செய்த கர்லாக்கட்டையைப் பரிசாக வாங்கிவந்தார் சத்யராஜ். ஆக இருவருக்கும் எம்ஜிஆரின் மீது மிகப்பெரிய அபிமானமும் பேரன்பும் மரியாதையும் உண்டு.

சத்யராஜ் ஜாலியான காட்சியில் எம்ஜிஆரைப் போலவும் சோகமான காட்சிகளில் சிவாஜியின் பாணியிலும் நடிப்பார். இதை அவரே பல பேட்டிகளிலும் மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் ‘எங்க வீட்டு பிள்ளை’ எடுத்தார். சத்யராஜ் தன் 100-வது படமாக ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’ படத்தில் நடித்தார். எம்ஜிஆரை எல்லோரும் ‘வாத்தியார்’ என்று அழைத்தது நினைவிருக்கிறதுதானே!

ஆக, பி.வாசு இயக்கத்தில், சத்யராஜின் 100-வது படமாக வந்தான் ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’. பள்ளிக்கூட வாத்தியார் ராஜேஷின் தம்பி சத்யராஜ். ராஜேஷின் மகள் ராசி. ராஜேஷின் மனைவி ஸ்ரீவித்யா. ராசிக்கு சத்யராஜ் சித்தப்பாதான் என்றபோதும், இருவரும் அண்ணன் தங்கையாகவே பழகுகிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். கிள்ளிக்கொள்கிறார்கள். ராசியும் சத்யராஜை அண்ணன் என்றுதான் அழைக்கிறார். ஊரில் பண்ணையாரின் ராஜாங்கம். ரசாயனத் தொழிற்சாலை அமைக்க பண்ணையார் போடும் திட்டத்துக்கு வேட்டு வைக்கிறார் சத்யராஜ்.

பண்ணையார்கள் கவுண்டமணி, பீமன் ரகு. பண்ணையாரின் மகன் நாசர். மகள் ஷோபனா. சத்யராஜ் செய்யும் காரியங்களால் ஆத்திரம் அடைந்த பண்ணையாரின் மகன் நாசர், ராஜேஷின் மகள் ராசியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்கிறார். இதனால் ராசியின் திருமணம் தடைபடுகிறது. ஆவேசமான சத்யராஜ், பண்ணையார் வீட்டுக்குச் சென்று, ஷோபனாவைக் கடத்திச் செல்கிறார் . இரவு முழுவதும் ஒரு இடத்தில் இருந்துவிட்டு, விடிந்ததும் வருகிறார்கள். ‘நேற்றிரவு நானும் பண்ணையார் மகளும் ஒன்றாகத்தான் இருந்தோம்’ என்று தெனாவெட்டாகச் சொல்லிச் செல்கிறார் சத்யராஜ்.

இப்படியொரு செயலைச் செய்ததால் ராஜேஷ், சத்யராஜை வீட்டை விட்டுத் துரத்துகிறார். அங்கே பண்ணையார் சதித்திட்டம் போடுகிறார். நாசருக்கும் ராசிக்கும் திருமணம். இதையடுத்து ஷோபனா, சத்யராஜின் குணத்தைப் புரிந்துகொண்டு காதலிக்கிறார். பண்ணையாரின் கொட்டம் ஒழிந்ததா, ரசாயனத் தொழிற்சாலை திறந்தார்களா, சத்யராஜ் - ஷோபனா இணைந்தார்களா, கிராம மக்கள் நிம்மதியானார்களா என்பதையெல்லாம் வழக்கமான பாணியில், ஆனால் விறுவிறு திரைக்கதையில் சொல்லியிருப்பார் பி.வாசு.

மணிவண்ணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஏ.சபாபதிதான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமிய மணத்துடன் அட்டகாசமாக இருந்தன. டைட்டில் பாடலை இளையராஜாவே பாடினார். ‘ஆந்திராவுல வாத்தியாரு அவரு என்.டி.ஆரு. நமக்குத் தெரிஞ்ச வாத்தியாரு எம்ஜிஆரு’ என்றெல்லாம் எழுதி, சத்யராஜ் இமேஜை உயர்த்தும் பாடலாக்கினார்கள்.

’ஏய் சிக்குன்னு இருக்குது சிட்டாஞ்சிணுக்கு வெக்கமும் விலகுது மிட்டாமினுக்கு’ என்றொரு பாடல். ’மணமாலையும் மஞ்சளும் சூடி புதுக்கோலத்தில் நீ வரும் நேரம்’ என்று அண்ணன் ஸ்தானத்தில் இருந்தபடியே பாடுவார் சத்யராஜ். இந்தப் பாடலை அப்போது அண்ணன்களும் தங்கைகளும் கேட்டுக்கேட்டு உருகிப் போனார்கள். ’அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா, சொந்தக் கண்களைக் கட்டி ஒரு ஊர்கோலமா?’ என்றொரு பாடல். இந்தப் பாடலும் அண்ணன் - தங்கை உறவின் அடர்த்தியைச் சொல்லும் பாடலாக அமைந்தது. எஸ்பிபி-யின் குரலும் சோகத்தை இன்னும் கூடுதலாக்கிக் கொடுத்தது.

கவுண்டமணி வில்லன். ஆனாலும் அவரின் லொள்ளு ஆங்காங்கே எட்டிப்பார்க்கும். சத்யராஜ் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார். ராஜேஷும் ஸ்ரீவித்யாவும் வழக்கம் போல தங்கள் சிறந்த நடிப்பை வழங்கினார்கள்.ஷோபனாவுக்குப் பெரிய வேலையில்லை. என்றாலும் ரசிகர்களைக் கவர்ந்திருப்பார். ஆனாலும் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. ‘ஓவர் சென்டிமென்ட் உடம்புக்கு ஆகவில்லையோ என்னவோ? படம் ரசிக்கப்பட்டதேயொழிய, மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.

1989அக்டோபர் 28-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியானது ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’. படம் வெளியாகி 33 வருடங்களாகிவிட்டன என்பதை விட, சத்யராஜின் 100-வது படம் வெளியாகி 33 வருடங்களாகிவிட்டன எனப் பெருமையுடன் சத்யராஜை வாழ்த்துவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in