நட்பின் மேன்மையை ரத்தமும் சதையுமாகச் சொன்ன ‘தளபதி’!

மணிரத்னம், ரஜினி, இளையராஜாவின் கூட்டணியில் கம்பீரம் காட்டிய கலைப் படைப்பு
நட்பின் மேன்மையை ரத்தமும் சதையுமாகச் சொன்ன  ‘தளபதி’!

திரைப்பயணத்தில், எத்தனையோ படங்கள் சரித்திரம் போல் தடம் பதித்திருக்கின்றன. காலங்கள் கடந்தும் அந்தப் படங்கள் பேசுபொருளாக இருந்துகொண்டிருக்கின்றன. அப்படி இன்றைக்கும் பேசப்படும் ’தளபதி’ மிக மிக முக்கியமானவன்!

’ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இல்லாத கதையா’ என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உள்வாங்கி, இன்றைய நவீன உலகுக்குள் அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலவவிடும் மாயவித்தைக்காரர் மணிரத்னம்.

தமிழ் சினிமாவை மணிரத்னம் இயக்கிய ’நாயகன்’ படத்துக்கு முன்பு, பின்பு எனப் பிரித்துப் பார்க்கவேண்டும். அது கமல் எனும் நாயகனுக்குக் கிடைத்த அடுத்தகட்ட அசுர வளர்ச்சியாக இருக்கட்டும். சினிமாவின் நவீன பாஷையாக இருக்கட்டும். மணிரத்னம் ஸ்டைல் என உருவானதாக இருக்கட்டும். இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தொழில்நுட்பத்திலும் புதுப்புது உத்திகளைக் கையாள்வதில் வல்லவர் மணிரத்னம்!

1987-ல் கமலை வைத்து ’நாயகன்’ எடுத்தார். வேலுநாயக்கராகவே கமல்ஹாசனை உருமாற்றினார். அதேபோல் 1991-ல் ’தளபதி’ எடுத்தார். சூர்யாவாகவே ரஜினியை மாற்றி களமிறக்கினார்.

சாதாரண சட்டை, மிகச்சாதாரணமான செருப்பு என இயல்பு மீறாமல் இருக்கிற சூர்யா கேரக்டர், ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, ரஜினிக்கே கூட புதுசுதான். ரஜினியின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பெரிய பட்டியலில் கம்பீரத்துடன் நிற்கிறான் ‘தளபதி’.

சிறுவயதில், பள்ளிப்பருவ வயதில், யாரோ ஒருவனின் வார்த்தைக்கு மயங்கி தன்னையே ஒப்படைத்த ஓர் அபலை அழகான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். போகிப் பண்டிகை அன்று எல்லோரும் பழசைத் தூக்கிப்போட்டுக்கொண்டிருக்க, புதுசாய் இந்த பூமிக்கு வந்த குழந்தையை, ஒரு ரயிலுக்குள் வைத்து அனுப்பிவிட்டு, வீட்டுக்கு வந்துவிடுகிறாள். அந்தக் குழந்தைதான் கதையின் நாயகன். அந்த நாயகன்தான் சூர்யா என்கிற ரஜினி. அந்த ரஜினிதான் ’தளபதி’.

கெட்டதை தட்டிக் கேட்கிறவன் சூர்யா. ஊருக்கு நல்லது செய்கிறவன். ’நாலுபேருக்கு உதவும்னா எதுவும் செய்யலாம், தப்பில்ல’ என்கிற வெளிப்பாட்டின் இன்னொரு வெர்ஷன் கேரக்டர். பெண்ணிடம் வம்பு செய்தவனை அடிக்கிறான் சூர்யா. அதில் அவன் செத்தேபோகிறான். இதனால் சூர்யா, கைதாகிறான். செத்தவன் சாதாரண ஆளில்லை. மிகப்பெரிய அடியாள். மிகப்பெரிய நபரின் அடியாள். அந்த மிகப்பெரிய தாதா தேவா. அவன் தேவாவின் ஆள். அங்கே... அந்த ஊரில் தேவாவின் ராஜாங்கம்தான். தன்னுடன் இருந்தவனை அடித்ததற்காக, சூர்யாவை வந்து மிரட்டிச் செல்வார் தேவா. ஆனால், தன்னுடைய அடியாள் செய்த தவறு தேவாவுக்குத் தெரியவரும். சூர்யாவைப் பற்றியும் புரிந்துகொள்வார். சூர்யாவை தேவாவுக்கு ரொம்பவே பிடித்துப் போகும். சிறையிலிருந்து அவனை விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்வார் தேவா. அப்போதிருந்து சூர்யா... ‘தளபதி’யாகிவிடுகிறான். தேவாதான் மம்முட்டி.

சூர்யாவுக்கும் தேவாவுக்கும் நட்பு வேர் விடுகிறது. கிளை பரப்புகிறது. பெருமரமாக வளர்கிறது. மெல்ல மெல்ல, தேவாவின் ராஜாங்கத்துக்கு தளபதியாகவும் உயிர்த்தோழனாகவும் உயர்ந்து நிற்கிறான் சூர்யா.

இதனிடையே, அடிதடியும் வம்பும்தும்புமாக இருக்கும் சூர்யா, ஐயர் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறான். சொல்லப்போனால் அந்தப் பெண் தான், சூர்யாவை முதலிலிருந்தே காதலிக்கிறாள். இதைத் தெரிந்துகொள்ளும் தேவா தன் மனைவியை அழைத்துக்கொண்டு, பெண் கேட்பார். ’அவன் என்ன ஜாதி, என்ன குலம்’ என்றெல்லாம் சொல்லி காதலை ஏற்க மறுத்துவிடுவார் பெண்ணின் அப்பா. ஆத்திரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு தேவா கிளம்பி வருத்தத்துடன் வருவார். அவரை சமாதானப்படுத்தி, தன்னையும் சமாதானப்படுத்தி தேற்றிக்கொள்வார் சூர்யா. அங்கே காதல் மறக்கப்படுகிறது.

சூர்யா கையால் அடிபட்டுச் செத்துப்போனவனுக்கு மனைவியும் குழந்தையும் உண்டு. அவர்களைப் பார்த்து பதைபதைத்துப் போகிறான் சூர்யா. ஒருகட்டத்தில், அவர்களுக்கு துணையாக இருக்கிறான். அவளை ஏற்றுக்கொள்ளச் சொல்லி தேவா சொல்ல, தட்டாமல் ஏற்கிறான். ‘வெறும் காவல்’ என்கிறான். அப்படியொரு உறவு. அப்படியொரு பந்தம். அதுவொரு கவிதை.

தேவாவின் ராஜாங்கம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில், அங்கே அந்த ஊருக்கு புதிய கலெக்டர் வருகிறார். அவர் பெயர் அர்ஜூன் (அரவிந்த்சாமி). அந்த அர்ஜூனுடன் அப்பாவும் அம்மாவும் உடன் வருகிறார்கள். அர்ஜுனின் அம்மா வேறு யாருமில்லை. சிறுமியாக இருக்கும் போது, போகித் திருநாளன்று, ரயிலில் குழந்தையை விட்டாளே… அவள்தான். ஆக... அர்ஜுனின் அம்மாதான் சூர்யாவின் அம்மா!

இப்போது, தேவாவின் ராஜாங்கமும் சூர்யாவின் வெறியாட்டமும் அர்ஜுனுக்குத் தெரியவருகிறது. அவர்களை ஒடுக்குவதில் இருக்கிறார்.

அதேபோல், ஒருகட்டத்தில், இவர்தான் அம்மா, இவன்தான் தம்பி என்பது சூர்யாவுக்குத் தெரியவருகிறது. தன் தம்பியே தன்னையும் தன் நண்பனையும் ஒடுக்கப் பார்ப்பதை எதிர்க்கிறான் சூர்யா. நண்பனின் பக்கமே நிற்கிறான். இதனிடையே, சூர்யாவின் காதலிக்கும் கலெக்டர் அர்ஜுனுக்கும் திருமணம் நடக்கிறது.

அர்ஜுனின் அப்பாவுக்குத் தன் மனைவியின் கடந்தகாலம் தெரியும். அதை முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவருக்கு, சூர்யாதான் அந்தப் பிள்ளை என்பதும் தெரியவரும். சூர்யாவிடம் அம்மா பற்றி சொல்வார். மனைவியிடம் சூர்யா குறித்தும் விளக்கிவிடுவார்.

இந்த முடிச்சுகளை வைத்துக்கொண்டு, குருக்ஷேத்திர யுத்தத்தையே நடத்தியிருப்பார் மணிரத்னம். சூர்யா – ரஜினி. தேவா – மம்முட்டி. அர்ஜுன் – அரவிந்த்சாமி. அம்மா – ஸ்ரீவித்யா. அப்பா - ஜெய்சங்கர். அந்தக் காதலி ஷோபனா. குழந்தையுடனும் ரஜினியின் துணையுடனும் இருக்கும் பானுப்ரியா. ரஜினி – ஷோபனா, ரஜினி – மம்முட்டி, ரஜினி – பானுப்ரியா, ரஜினி – ஸ்ரீவித்யா என்ற களங்களில், நம்மைக் கதறடித்து, உருகவைத்து, சிலிர்க்கவைத்து, கரவொலியை எழுப்பச் செய்து, மனம் கனக்கச் செய்திருப்பார் மணிரத்னம். மம்முட்டியின் மனைவியாக கீதாவும் சரி, அரவிந்த்சாமியும் சரி, ஷோபனாவும் சரி பிரமாதமான நடிப்பை வழங்கியிருந்தார்கள். நாகேஷும் அம்ரீஷ்பூரியும் சாருஹாசனும் கலக்கியெடுத்தார்கள். பானுப்ரியாவுக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.

’‘தேவா பொழச்சுக்குவான்’’, ’‘டாக்டர் சொன்னாரா?’’, ‘’தேவாவே சொன்னான்’’.

’‘அந்தக் கலெக்டரைக் கொன்னுரு’’, ‘’முடியாது’’, ’’ஏன்’’, ’’முடியாது’’, ’’அதான் ஏன்’’, ’’ஏன்னா அவன் என் தம்பி.’’

’’பாரு… என் சூர்யாவைப் பாரு. என் நண்பனைப் பாரு. என் தளபதியைப் பாரு. எப்படி நிக்கிறான் பாரு...’’

‘’உன் குடும்பம்னா அது எனக்கும் குடும்பம்தான் சூர்யா. கலெக்டர் உன் தம்பின்னா, அவன் எனக்கும் தம்பிதான்!’’

இப்படி படம் நெடுக மணிரத்ன வசனங்கள், ரத்தினச்சுருக்க வசனங்கள். ஆனால், நீண்டக் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டே இருந்தன. எல்லோரின் நடிப்பிலும் அப்படியொரு இயல்பு. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, மிரட்டியெடுக்கும். காட்சிக்குக் காட்சி மம்முட்டி கம்பீரமான நடிப்பை வழங்கியிருப்பார். ரஜினியோ, அடக்கி வாசித்தபடியே தன் நடிப்பு ஆளுமையை அழகுறக் காட்டியிருப்பார். இந்தப் படத்தில் ரஜினி அணிந்திருக்கும் சட்டைகள் எல்லாமே அழகாக இருக்கிறது என்றும் அவரின் தலைமுடி புதுவித ஸ்டைலுடன் இருப்பதாகவும் நண்பர்கள் படம்பார்த்துவிட்டு சிலாகித்துக் கொண்டே இருந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மம்முட்டிக்கு ரஜினிதான் தளபதி என்றால், தளபதிக்கே தளபதி இளையராஜாதான்.

போகி கொண்டாட்டத்துக்கு ஒரு பாட்டு. ’மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஹோய்’... நம்மையே கொண்டாட வைத்துவிடும். ரஜினி – ஸ்ரீவித்யா வரும் காட்சிகளிலெல்லாம் ’சின்னத்தாயவள்’ பாடலும் அந்த பிஜிஎம்மும் நம்மைக் கரைத்து உருக்கிவிடும். ’யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே…’ பாடல், மெல்லிய காதலை அடர்த்தியாகச் சொல்லும். காதலுக்கு ஏங்கவைக்கும். ’இந்தக் காதல் ஜெயிக்க வேண்டுமே...’ என்று நம்மை வேண்டச்செய்யும்.

’அடி ராக்கம்மா கையத் தட்டு’ பாடலும் பின்னணி இசையும் அதகளம் பண்ணும். தாளமிட வைத்துவிடுவார் இசைஞானி. அந்தக் காட்சியின் இருளும் ஒளியும் இணைந்துகொண்டு, நம்மை ஏதோவொரு லோகத்துக்குக் கூட்டிச் செல்லும். ’காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’ பாடலும் அதில் ரஜினியும் மம்முட்டியும் நட்போடு ஆடுவதையும் பார்த்து... அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து நம்மையும் ஆடச் செய்துவிடுவார் இசைஞானி. எஸ்பிபி-யும் ஜேசுதாஸும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

’பந்தம் என்ன சொந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்ன/ உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லை

’பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க/ அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே

’உள்ள மட்டும் நானே உசிரைக் கூடத்தானே/ என் நண்பன் கேட்டால்

வாங்கிக்கன்னு சொல்லுவேன்/ என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு/ நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்/ சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு/ ராகம் இட்டு தாளம் இட்டு/ பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்’ என்ற வரிகளில் நட்பின் ஆழமும் அன்பும் சொல்லியிருப்பார் கவிஞர் வாலி.

எல்லாவற்றையும் விட அந்த ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி…’ எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு சேதியை புதிதுபுதிதாகச் சொல்லிக் கொண்டே இருக்கும். பாடலை மும்பையில் ஆர்.டி.பர்மனின் இசைக்குழுவை வைத்து ரெக்கார்டிங் செய்தார்களாம். எல்லோருக்கும் இளையராஜா நோட்ஸ் எழுதிக் கொடுக்க, எல்லோரும் சேர்ந்து அவற்றை, அந்த ஆரம்ப இசையை வாசிக்க...வாசித்து முடித்ததும் அப்படியே கையிலிருந்த இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, சில நிமிடங்கள் வரை இளையராஜாவின் இசைத்திறனைக் கண்டு வியந்து, கைதட்டிக்கொண்டே இருந்தார்களாம்.

மறைந்த எஸ்.பி.பி. இதை பல மேடைகளில், பல முறைச் சொல்லிச் சொல்லி தன் நண்பனை மனதாரப் புகழ்ந்துகொண்டே இருந்தார். கவிஞர் வாலியின் வரிகளினுள்ளே காதல் தேன் தடவப்பட்டிருக்கும். இன்றைக்கும் ஆகச்சிறந்த காதல் பாடல். காட்சியும் மிரட்டலாக இருக்கும். அந்தப் பாடலும் அப்படியொரு பிரம்மாண்டத்தைத் தந்திருக்கும். எஸ்பிபி-யின் குரல் குழைந்துகுழைந்து வித்தை காட்டும். ஜானகியம்மாவின் தேன் தடவிய குரல், காதலைச் சொட்டுச்சொட்டாக நம் செவிகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

’சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்/ பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்/ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்/ வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்/ கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்/ காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்/ உடனே வந்தால் உயிர் வாழும்/ வருவேன் அந்நாள் வரக் கூடும்/ சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி/ என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக/ நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்/ சேர்ந்ததே நம் ஜீவனே’ என்ற வரிகளில் காதல் பொங்கித் ததும்பி பிரவாகமெடுத்து ஜில்லிடச் செய்யும் நம்மை!

படத்துக்கு இளையராஜாவின் பின்னணி இசை எந்த அளவுக்கு வலு சேர்த்தது என்பதை இப்போது பார்க்கும்போதும் உணரமுடியும். மணிரத்னத்தின் மெளனத்தையும் அந்த ரெண்டுவரி ரெண்டுவரியான வசனங்களையும் தாண்டி, அந்தக் கதாபாத்திரங்களையெல்லாம் நமக்குள் பதித்திருப்பார் தன் இசை வழியே!

1991 நவம்பர் 5-ம் தேதிதான் தீபாவளி. அன்றைய வெளியானதுதான் ‘தளபதி’. ரஜினிகாந்த், ‘தளபதி’யாக இன்னொரு கர்ணனாக உருவெடுத்து நின்று, இதோ இன்றுடன் 31 ஆண்டுகளாகிவிட்டன.

இந்தப் படம் பற்றி எழுதும்போதே, இன்னொரு ஆசையும் உள்ளே வந்துபோகிறது. நண்பர்கள் நாங்களாக அடிக்கடிப் பேசிக்கொள்வோம். அந்த ஆசையும் விருப்பமும் இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்கும் வரலாம். மீண்டும் இளையராஜாவும் மணிரத்னமும் இணைந்து படம் கொடுத்தால் எப்படியிருக்கும்? இப்படி ஏங்காத ரசிகர்கள் இருக்கிறீர்களா என்ன?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in