இயக்குநர் ஷங்கரிடம் 3 மணி நேரம் விசாரணை... வாக்குமூலம் பதிவு: என்ன காரணம்?

இயக்குநர் ஷங்கரிடம் 3 மணி நேரம் விசாரணை... வாக்குமூலம்  பதிவு: என்ன காரணம்?

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். ஷங்கர் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு ஊடகத்தினர் கண்ணில் படாமல் பின் வாசல் வழியாக வாடகை காரில் ஏறிச் சென்றார்.

ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி, எந்திரன் உட்பட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் நேற்று மதியம் தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை துணை இயக்குநர் மல்லிகா அர்ஜுனா முன் ஆஜரான இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அது என்ன வழக்கு என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர். மேலும் விசாரணைக்கு பின்னர் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரான தகவல் அறிந்து பல ஊடகத்தினர் அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். இயக்குநர் சங்கர் தனது இன்னோவா காரில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஊடகத்தினர் குழுமியிருந்ததை அறிந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் விசாரணை முடிந்த பிறகு ஊடகத்தினரின் கண்ணில் படாமல் அமலாக்கத்துறை அலுவலக பின்வாயில் வழியாக வாடகை காரில் புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் ஊடகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக இயக்குநர் சங்கரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in