என்றும் கம்பீரம் குறையாத ‘நாட்டாமை’!


என்றும் கம்பீரம் குறையாத ‘நாட்டாமை’!

’கிராமத்துப் படங்களென்றாலே ஊருக்கு நடுவே ஒரு மரம் இருக்கும். ஒரு மேடை இருக்கும். பஞ்சாயத்து அங்குதான் நடக்கும்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், எல்லாக் கிராமங்களிலும் அப்படியொரு பஞ்சாயத்து மேடை இருக்கும். பஞ்சாயத்துகளும் நடக்கும். வழக்குகள் கோர்ட்டுக்குச் சென்று இழுபறியாகிக் கொண்டே இருக்கும் நிலை போல் இல்லாமல், ‘வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு’ என்று தீர்ப்புகள் வழங்கப்படும். அப்படி தீர்ப்பு சொல்லுபவரை ‘நாட்டாமை’ என்பார்கள். அந்த நாட்டாமையை எல்லோரும் மரியாதையுடன் பார்ப்பார்கள். தமிழ் சினிமாவில் ‘நாட்டாமை’ எனும் பெயரில் வந்த படத்தையும் அப்படியொரு மரியாதையுடன் ரசித்து ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள்.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சரத்குமாரின் நடிப்பில் உருவானதுதான் ‘நாட்டாமை’.

ஊர் நாட்டாமை ஒரு சரத்குமார். அவர் பெயர் சண்முகம். அவருக்கு இரண்டு தம்பிகள். தம்பிகளில் ஒருவர் இன்னொரு சரத்குமார். அவருடைய தம்பி சரத்குமாரின் பெயர் பசுபதி. மற்றுமொரு தம்பியாக ராஜா ரவீந்தர். நாட்டாமை சரத்குமாருக்கு ஜோடி குஷ்பு. பசுபதி கேரக்டரில் நடித்திருக்கும் சரத்குமாருக்கு ஜோடி மீனா. சரத்குமாரின் தந்தை விஜயகுமார். இவர் அந்தக் காலத்தில் நாட்டாமை.

அதே ஊரில் இருக்கிறார் பொன்னம்பலம். அந்தக் காலத்திலிருந்தே சரகுமார் குடும்பத்துக்கும் பொன்னம்பலம் குடும்பத்துக்கும் ஜென்மப் பகை. அதனால் சரத்குமார் குடும்பத்தை சந்தி சிரிக்கவைக்க சூழ்ச்சிகளைப் பின்னுகிறார் பொன்னம்பலம்.

ஊருக்குப் புதிதாக வருகிறார் டீச்சர். அந்தப் பெண்ணுக்கும் தம்பி சரத்குமாருக்கும் தொடர்பு என்று கதைகட்டிவிடுகிறார்கள் பொன்னம்பலம் கோஷ்டியினர். அடுத்த கட்டமாக, அந்த டீச்சரைக் கொலையும் செய்து அதையும் சரத்குமார் மீது பழி போடுகிறார்கள்.

அடுத்து என்ன நடந்தது என்பதற்கு முன்னதாக அப்படியென்ன நடந்தது? ஏனிந்த பழிவெறி?

அப்போது நாட்டாமையாக இருப்பவர் விஜயகுமார். பொன்னம்பலம் ஒரு பெண்ணைச் சீரழித்துவிட, விஷயம் பஞ்சாயத்துக்கு வரும். பொன்னம்பலத்தின் தந்தை, “பையன் ஏதோ தப்புப் பண்ணிட்டான். ஆனாலும் எங்களுக்கு சாதகமா தீர்ப்பைச் சொல்லுங்க” என்று விஜயகுமாரிடம் மன்றாடுகிறார். ஆனால் நியாயப்படி பொன்னம்பலத்துக்குத் தண்டனை வழங்குகிறார் விஜயகுமார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னம்பலத்தின் அப்பா, விஜயகுமாரைச் சுட்டுவிடுகிறார்.

“நீதிதான் முக்கியம். நேர்மைதான் முக்கியம். சொந்தபந்தமெல்லாம் பாக்காம தீர்ப்பு சொல்லு. அந்தக் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைக்கிறேன்” என தீர்ப்பு சொல்லிவிட்டு விஜயகுமார் இறந்துவிடுகிறார். இதையடுத்துதான் மூத்த மகன் சரத்குமார் நாட்டாமை பொறுப்புக்கு வருகிறார். அதன் பிறகுதான், தம்பி சரத்குமார் மீது இப்படியொரு குற்றப்பழி சுமத்தப்படுகிறது.

ஆனால் ஆதாரங்கள் தம்பி சரத்குமாருக்கு எதிராக வலுவாக ஜோடிக்கப்பட்டிருப்பதால், அண்ணன் சரத்குமார் தம்பிக்குத் தீர்ப்பு வழங்கி தண்டிக்கிறார்.

இந்தநிலையில் நாட்டாமை குடும்பத்தில் இருக்கும் ராஜா ரவீந்தருக்கும் பொன்னம்பலத்தின் மகள் சங்கவிக்கும் காதல் மலர்கிறது. இது இன்னும் ஆத்திரத்தைக் கிளப்ப, ‘இந்தக் காதலை சேர்த்துவைக்கிறேன்’ என்று நாட்டாமை சரத்குமார் பொன்னம்பலம் வகையறாக்களுடன் மோதுகிறார். இருவரையும் சேர்த்துவைக்கிறார். அதேசமயம், தம்பி சரத்குமார் மீது எந்தத் தவறுமில்லை. தவறாக தண்டனை கொடுத்திருக்கிறோம் எனும் உண்மையும் தெரியவர, தம்பியை ஏற்கிறார். அந்த அதிர்ச்சியில் இறக்கிறார். விஜயகுமார், மூத்த சரத்குமார், அடுத்ததாக மற்றொரு சரத்குமார் நாட்டாமையாக வருகிறார் என்பதுடன் படம் நிறைவடைகிறது.

குடுமி, காதில் கடுக்கன், நெஞ்சு நிறைய சந்தனம். தோரணையும் மிடுக்குமாக சாரட் வண்டி. கம்பீரமாக வந்து இறங்கும் விஜயகுமார் என ‘நாட்டாமை’யாகவே அதகளம் பண்ணியிருப்பார். ஒவ்வொரு காட்சியிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார். அதேபோல் சரத்குமார் இரண்டு கேரக்டர்களிலும் பிரமாதப்படுத்தியிருப்பார். குஷ்பு கொசுவம் வைத்த புடவையில் வந்து, அச்சுஅசல் கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். மீனாவும் தன் நடிப்பால் எல்லோரையும் கவர்ந்திருப்பார்.

‘அண்ணாமலை’ படத்தில், ‘குஷ்பு குஷ்பு’ என்ற பாடல் வந்தது போல், இதில் ‘மீனாப்பொண்ணு’ என்கிற பாடல், மீனாவைக் கொண்டாடும் வகையில் அமைந்தது.

கவுண்டமியும் செந்திலும் சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கும் படத்திற்குள் அழகாகப் புகுந்துகொண்டு, தனி ராஜ்ஜியம் நடத்துவார்கள். கவுண்டமணியின் லொள்ளு கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போகும். முக்கியமாக, அந்த ‘மிக்சர் காமெடி’ இன்றைக்கு வரை பல அரசியல் தலைவர்களை ‘மீம்ஸ்’ வழியே கிண்டல் செய்வதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கோவை பாஷை கேட்கக் கேட்க எப்போதுமே இனிக்கும். இந்தப் படத்தில் ஈரோடு செளந்தரின் வசனங்களும் பிரமாதமாக இருக்கும். கோவை பாஷையும் அமர்க்களமாக இருக்கும். பொன்னம்பலத்துக்கு இது வாழ்நாள் கதாபாத்திரம். மனிதர் நடிப்பில் மிரட்டியிருப்பார். பார்க்கிற நமக்கு அவர் மீது அப்படியொரு கோபம் பொத்துக்கொண்டு வரும்.

ராஜாரவீந்தர், சங்கவி, மனோரமா, வினுசக்ரவர்த்தி, ராணி, ஈரோடு செளந்தர், வைஷ்ணவி என எல்லோரும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடித்திருப்பார்கள். மனோரமா பல இடங்களில் தன் நடிப்பால் நெகிழவைத்திருப்பார்.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த ‘நாட்டாமை’ கே.எஸ்.ரவிக்குமாருக்கு மிகப்பெரிய உயரத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான், ரஜினி அழைத்து, ‘முத்து’ படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார்.

மோகன்பாபு நடிப்பில் ‘பெத்தராயுடு’ எனும் பெயரில் ‘நாட்டாமை’ தெலுங்கில் பேசியபோது, தன் நண்பர் மோகன்பாபுவுக்காக விஜயகுமார் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து ஸ்டைல் காட்டி அசத்தினார் அங்கே... என்பது கொசுறுத் தகவல்.

அதேபோல், சரத்குமாருக்கு இந்தப் படத்துக்குப் பிறகு மார்க்கெட் வேல்யூ மிகப்பெரிய அளவுக்கு எகிறியது.

சிற்பி இசைமைத்திருந்தார். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். ’ஒறவுக்காரன் ஒறவுக்காரன் ஒறவுக்காரன்’ என்ற பாடல் இனிமை சேர்த்தது. ‘மீனாப்பொண்ணு மீனாப்பொண்ணு’ மிகப்பெரிய ஹிட்டடித்தது. முக்கியமாக, ‘கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்’ பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை. தமிழ்த் திரையுலகில் சிற்பி எனும் அற்புத இசையமைப்பாளரை இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

1994 நவம்பர் 2-ம் தேதி வெளியானது ‘நாட்டாமை’. 28 வருடங்களாகின்றன. வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் முதலான பல ஊர்களில் 150 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிக அதிக வசூலைக் குவித்த படம் என்று தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் இன்றைக்கும் படத்தைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சில படங்கள், வெளியான காலகட்டத்தில் வெகுவாக ஈர்க்கும். ஆனால், பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது சுவாரசியம் இல்லாத படங்களாகவே மிஞ்சும். வலுவான திரைக்கதை அம்சம் பொருந்திய படங்கள், காலத்தைத் தாண்டியும் ரசிக்கப்படும். அந்த வகையில், இன்று பார்த்தாலும் ‘நாட்டாமை’யின் கம்பீரம் குறையவே இல்லை!

‘நாட்டாமை’யின் பாடலாக ‘கொட்டப்பாக்கு’ பாடலையும் காமெடியில் ‘மிக்சர் காமெடி’யையும் மறக்கவே முடியாது. முக்கியமாக... இன்னும் எத்தனை வருடங்களானாலும் அந்த ‘நாட்டாமை... தீர்ப்பை மாத்திச்சொல்லு’ வசனத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in