‘மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்’ - முஸ்தபாவுக்கு வயது 26

இளைஞர்கள் மனதில் கொடி நாட்டிய ‘காதல் தேசம்’
‘மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்’ - முஸ்தபாவுக்கு வயது 26

காதலைச் சொன்ன எத்தனையோ படங்கள் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல் நட்பின் உன்னதத்தையும் மேன்மையையும் அன்பையும் ஆழத்தையும் நமக்குள் நுழைத்து, நம் நட்பையும் நண்பர்களையும் சிந்திக்கவைத்த படங்களும் ஏராளமாகவே வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் சரிவிகிதத்தில் குழைத்துக் கொடுத்த படங்களில் இளைஞர்களின் தேசங்களில் இன்றைக்கும் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கிறது ‘காதல் தேசம்’.

ஒவ்வொருவரின் வாழ்விலும் கல்லூரிக் காலம் என்பது அப்படியே பச்சக்கென பச்சைக்குத்தப்பட்டு, மனதில் அப்படியே இருக்கும். அன்றைக்குப் பூத்த பூவாக மலர்ந்திருக்கும். கல்லூரி வாழ்வைச் சொல்லும் இந்தப் படத்துக்கு ‘காதல் தேசம்’ என்று பெயர் வைத்து, இளைஞர்களை தியேட்டருக்குள் இழுக்கிற உத்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கதிர். ‘இதயம்’ படத்தின் மூலம் நம் இதயங்களைத் தொட்ட அதே இயக்குநர் கதிர்.

‘இதயம்’ படமும் கல்லூரி, நட்பு, காதல், மெளனம் என்று சொல்லி இளையராஜாவின் துணையுடன் நம் இதயம் கனக்கச் செய்த இயக்குநர், இந்த ‘காதல் தேசத்துக்கு’ ஏ.ஆர்.ரஹ்மானின் துணையுடன் அந்த உலகுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார்.

சென்னைப் பெருநகரத்தின் இரண்டு கல்லூரிகள். அந்தக் கல்லூரியும் இந்தக் கல்லூரியும் முட்டிக்கொள்வதென்பது என்பது இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் இந்தப் படத்திலும்! ஏழ்மைக்கு வாக்கப்பட்ட இளைஞனும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இளைஞனும் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்க, அங்கே நடக்கும் சண்டையில் இருவரும் முட்டிக்கொள்கிறார்கள். காதலும் சரி, நட்பும் சரி... மோதலிலிருந்துதானே ஆரம்பமாகின்றன. அப்படியான மோதல் இங்கே நட்பாகிறது. ஏழை வினீத்தும் பணக்கார அப்பாஸும் புரிதலுக்குப் பின் இணைபிரியா தோழர்களாகிறார்கள். ஆட்டமும் பாட்டமுமாக, சேட்டைகளும் குறும்புமாகக் கல்லூரி வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

அந்த தருணத்தில் அங்கே புதிதாக வரும் தபுவை இருவருமே பார்க்கிறார்கள். இருவருமே ஈர்க்கப்படுகிறார்கள். இருவருமே காதலிக்கிறார்கள்.

நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணைக் காதலிப்பது ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் தெரியவர, போட்டியும் பொறாமையும் குரோதமுமாக நட்பு விரிசலாகிறது. நட்பைவிட காதல் பெரிதுதான் போல... என்று நாம் உணர்ந்து மலைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ‘நட்புதான் உயர்ந்தது. நான் உங்களிருவரையும் நண்பர்களாகத்தான் பார்த்தேன்; பழகினேன்’ என்று நாயகி சொல்ல, தியேட்டரில் நிறைந்திருந்த ரசிகர்கள் விசிலடித்து, கரவொலி எழுப்பி, அந்தப் புதிய க்ளைமாக்ஸை ஆராதித்தார்கள். விளைவு... ‘காதல் தேசம்’ அதிரிபுதிரி ஹிட் லிஸ்ட் படங்களில் தனியிடம் பிடித்தது.

காதல் தேசம்
காதல் தேசம்

வினீத்துக்கு தமிழில் இது மூன்றாவது படம். பிரதாப் போத்தன் மலையாளத்தில் செய்த கதாபாத்திரத்தை ‘ஆவாரம்பூ’வில் மிக அருமையாகச் செய்து நமக்கு அறிமுகமாகியிருந்தார். அடுத்து வந்த ‘மே மாதம்’ படமும் இவரின் நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஒரு கண்ணில் கவலையும் இன்னொரு கண்ணில் ஏக்கமுமாக, சென்னை மாநகரைப் பார்க்கிற பார்வையிலும் முகபாவனைகளிலும் தன் ஏழ்மை நிலையின் மூலமாக ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் வினீத்.

‘சாக்லேட் பாய்’ அப்பாஸ் அறிமுகப்படம். முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தார். குறிப்பாக, பெண் ரசிகைகள் ‘அப்பாஸ் அப்பாஸ்’ என உருகினார்கள். ‘கமல் மாதிரியான மாப்பிள்ளை வேணுமா?’ என்று கேட்ட காலம் போய், ‘அஜித் மாதிரி மாப்பிள்ளை இருக்கணுமா?’ என்று கேட்ட காலமும் கடந்து, ‘அப்பாஸ் மாதிரி மாப்பிள்ளைதான் வேணும்’ என்கிற மனநிலையில் பெண்கள் கூட்டம் மாஸ் காட்டி, அப்பாஸை பாஸ் செய்யவைத்தது.

நாயகியரை கண்ணியமாகக் காட்டவும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கவும் பல படங்கள் தவறிவிடுகின்றன. ஆனால், மும்பையில் இருந்து வந்த தபுவை, அப்படியொரு பாந்தமாகவும் கண்ணியமாகவும் அதேசமயம் முக்கியத்துவத்துடனும் காட்டியிருக்கிற இயக்குநருக்கு சபாஷ் சொல்ல வேண்டும்.

தபு நடிப்பதெல்லாம் சிறப்பு என்பதிருக்கட்டும். ஒரு பாட்டு முழுக்க அப்படியொரு நடை நடப்பார். அந்த நடையில், கூந்தல் அசைவில், மெல்லியச் சிரிப்பில், நாம் ஸ்தம்பித்து நின்றோம். படம் முழுக்க சுடிதார் விளம்பரத்துக்கு வருவது போல், அழகழகான, ஆளை அப்படியே மறைக்கிற சுடிதாரை அணிந்தபடி வந்து, நம்மை அசரடித்திருப்பார் தபு.

படம் முழுக்க காமெடிக்குக் கைத்தட்டல் கிடைத்துக்கொண்டே இருந்ததென்றால் அதற்கு வடிவேலுதான் காரணம். படம் முழுக்க அப்படி லந்து பண்ணியிருப்பார்.எஸ்பிபி., ஸ்ரீவித்யா, சின்னி ஜெயந்த் என பலரும் நடிப்பில் தங்களின் பங்களிப்பைச் செவ்வனே செய்திருப்பார்கள்.

கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு ’காதல் தேசம்’ என்ற தலைப்புக்கு ஏற்றவாறு, சென்னையை புதிய தேசமாகக் காட்டியது. காட்சிக்குக் காட்சி, ‘சென்னை இத்தனை அழகா... இவ்வளவு ரம்மியமா?’ என்று தெக்கத்திப் பக்க இளைஞர்கள் மட்டுமின்றி, சென்னை இளைஞர்களே அசந்துதான் போனார்கள். கல்லூரி, இளைஞர்கள், பெண்கள், அவர்களின் காஸ்ட்யூம்கள், அவர்களுக்கே உண்டான பாஷைகள், கல்ச்சுரல் விழாக்கள், விழாக்களில் நடக்கின்ற போட்டி ஈகோக்கள் என 90-களின் நகரத்துக் கல்லூரியை அப்படியே ஸ்கேன் செய்து தந்திருப்பார் இயக்குநர் கதிர். இந்தப் படம் வந்த பிறகு, வினீத் மாதிரியும் அப்பாஸ் மாதிரியும் ‘ஹேர் ஸ்டைல்’ வைத்துக்கொண்ட இளைஞர்கள் ஏராளம்.

லெனின் - வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் நேர்த்தி. வினீத், அப்பாஸ் என இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும், மூன்றாவது ஹீரோவாக இருந்து முதல் ஹீரோவாகிப்போனவர் ஏ.ஆர்.ரஹ்மான்!

படத்தின் அத்தனைப் பாடல்களிலும் இளமை கொப்புளிக்கும். வாலிபம் குத்தாட்டம் போடும். காதல் ததும்பி வழியும். கவிதையாய் இசை புகுந்து, நமக்குள் அதிரச் செய்யும்.

நடுத்தர வயதின் நட்புக்கு ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’ என்று ‘தளபதி’யில் இளையராஜா நட்பின் உன்னதத்தைக் கொண்டாடினார். ‘முஸ்தபா முஸ்தபா’ என்று டீன் ஏஜ் நட்பைப் பாடி தோழமையின் உயிருக்குள் ஊடுருவினார் ரஹ்மான். நண்பர்கள் தினம் என்றாலும் நண்பனுக்குப் பிறந்தநாள் என்றாலும் முகநூலிலும் டிவிட்டரிலும் இன்ஸ்டாவிலும் ‘முஸ்தபா’ பாடலின் ஏதேனும் நான்கு வரிகளை எடுத்து எடிட் செய்து, வாழ்த்துகளைப் பரிமாறி, ஷேர் செய்கிறார்கள். அத்தனைப் பாடல்களையும் குறும்பு மாறாமல், வாலிபம் மீறாமல் எழுதியிருப்பார் வாலிபக் கவிஞர் வாலி.

‘எனைக் காணவில்லையே நேற்றோடு’ என்ற பாடல் காதலின் கதகளி ஆடி அசரடித்தது. 'ஓ வெண்ணிலா... இரு வானிலா’ என்ற பாடல் காதலின் வலியையும் நட்பின் எதிர்பார்ப்பையும் ஏக்கமாகவும் துக்கமாகவும் சொல்லும். மனோவும் உன்னிகிருஷ்ணனும் பாடியிருப்பார்கள். ’காலேஜ் ஸ்டைலு’ என்ற பாடல் நம்மை ஆடவைக்கும். ’ஹலோ டாக்டர்’ என்ற பாடலும் ‘லவ் ஹாஸ்பிடல்’, ‘லவ் சர்ஜரி’ என்று செட்டுகளும் ஏராளமான கம்ப்யூட்டர்களில், கம்ப்யூட்டர்களில் ஒளிரும் ‘லவ் லவ் லவ்...’ எனும் ஆங்கில வாசகங்களும் பிரம்மாண்டத்தை உணர்த்தும்.

ஷங்கரை ‘ஜென்டில்மேன்’ மூலம் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், ‘இதயம்’ படத்தில் ஏற்கெனவே நமக்கு அறிமுகமாகியிருந்த இயக்குநர் கதிரை, ‘காதல் தேசம்’ மூலம் மீண்டும் நமக்கு அறிமுகப்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும் (இடையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபு - பானுப்ரியாவை வைத்து ‘உழவன்’ என்றொரு படத்தை இயக்கியிருந்தார் கதிர்!). கணக்குப் பார்க்காமல், காஸ்ட்லி காலேஜையும் கல்ச்சுரல் விழாக்களையும் நண்பர்கள் நின்று பேசுகிற இடங்களையும் பிரம்மாண்டமாகச் செலவு செய்து காட்டினார் குஞ்சுமோன்.

1996 ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியானது ‘காதல் தேசம்’. வினீத், அப்பாஸ், தபு என மூவரையும் இயக்குநர் கதிரையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் ‘புத்தம்புது ஈஸ்ட்மென் கலர்’ காப்பியாக இந்த டிஜிட்டல் யுகத்திலும் நமக்குள் அப்படியே பதிவேற்றி வைத்திருக்கிறது. மனதுக்குள் ‘காதல் தேசம்’ இன்னமும் குடிகொண்டிருக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, கவிஞர் வாலியின் ‘முஸ்தபா முஸ்தபா... டோண்ட் ஒர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா’ என்று தொடங்கும் ஒவ்வொரு வரியும் நட்பின் மேன்மையை, உண்மையை, உன்னதத்தை உயிர்ப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ‘மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப்தான்’ என்று கொண்டாடவைத்துக்கொண்டே இருக்கிறது.

கல்லூரிப் படிப்பெல்லாம் முடிந்து, இன்றைக்கு எங்கோ வேலை, திருமணம், மனைவி, குழந்தைகள் என்று செட்டிலானவர்கள், படத்தின் மாணவர்களின் கலாட்டாக்களைப் பார்த்துவிட்டு, தங்கள் நினைவுகளுக்குள் மூழ்கிப்போவார்கள்.

படம் வெளியாகி 26 ஆண்டுகளாகின்றன. ‘என்றும் பதினாறாக’ இளமையும் வாளிப்புமாக அப்படியே இருக்கிறது ‘காதல் தேசம்’!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in