‘ஆண்டவன் எந்த மதம்?’

25-ம் ஆண்டில் பாலுமகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’
‘ஆண்டவன் எந்த மதம்?’

உணர்வுகளை நமக்குக் கடத்துவது என்பது சினிமாவில் மிக மிக முக்கியம். அந்த மெல்லிய உணர்வுகளையும் சரி... ஹாஸ்ய உணர்வுகளையும் சரி... ஒரு படம் என்ன சொல்ல நினைக்கிறதோ, அதை நமக்கு வெகு இயல்பாகச் சொல்லுகிற படத்தை நாம் கொண்டாடத் தவறுவதே இல்லை. மிக முக்கியமானதொரு விஷயத்தை மிக இயல்பாகவும் காமெடியாகவும் சொன்ன விதத்தில் பாலுமகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’ மறக்க முடியாத படைப்பு!

’நல்லாசிரியர் விருது’ வாங்குவதாகக் கனவு காண்கிற ஒரு நாயகன் ராமன். டுடோரியல் காலேஜ் வாத்தியாராகவும் தனியே ஒரு பெண்ணுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பவராகவும் இருக்கிறார். அந்த டுடோரியல் காலேஜ் இடத்தை வாங்கி, ஒயின்ஷாப் வைக்க முடிவு செய்கிறார் டி.எஸ்.ராகவேந்தர். இதிலேயே நொந்துபோகிறார் ராமன். அடுத்து, டியூஷனையும் நிறுத்திவிடுகிறார் அந்தப் பெண். ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். அவ்வளவுதான். வேலை இல்லாமல் இருக்கிறார் ராமன்.

அவருடைய நண்பன் அப்துல்லாவுக்கு துபாயில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆசிரியருக்குப் படித்த பையனை ஆசிரியராக்கிப் பார்ப்பதுதான் அப்துல்லா அப்பாவின் விருப்பம்.

அவர்கள் வீட்டுக்கு இரண்டு தந்தி வருகிறது. ஒன்று... அப்துல்லாவின் வேலைக்கு துபாயிலிருந்து அழைப்பு. இன்னொன்று... அப்துல்லா அப்பா ஆசைப்பட்டபடி, ஊட்டியிலிருக்கும் ஹாஜியார், ‘பையனை ஆசிரியர் வேலைக்கு அனுப்பிவையுங்கள்’ என்று. ’துபாய்தான்’ என்கிறார் பையன். ‘ஊட்டிதான்’ என்கிறார் அப்பா.

‘பாருடா வாழ்க்கையை. உனக்கு ரெண்டு வேலை கிடைச்சிருக்கு. ஆனா எனக்கு எங்கேயுமே வேலை கிடைக்கல. இருந்த வேலையும் போயிருச்சு’ என்று நண்பன் அப்துல்லாவிடம் ராமன் புலம்புகிறான். ‘உங்க அப்பாகிட்ட சொல்லி ஊட்டில வாத்தியார் வேலையை எனக்கு வாங்கிக் கொடுக்கச் சொல்லுடா’ என்கிறான். அப்போது அப்துல்லாவுக்கு வருகிறது அந்த யோசனை. அதாவது, ‘எங்க வாப்பா ஆசைப்பட்டபடி ஊட்டி வாத்தியார் வேலைக்குப்போறதா சொல்லிட்டு, நான் நினைச்சபடி துபாய் வேலைக்குப் போறேன். ஊட்டி வேலைக்கு நீ போய் சமாளிச்சிக்கோ’ என்று சொல்லி ராமனை அனுப்புகிறான்.

ஒரு இந்து, முஸ்லிமாக ஆசிரியர் வேலைக்குப் போய் அங்கே என்னவெல்லாம் நிகழ்கின்றன என்பதை ஜாலியாகவும் ரசனையாகவும் அதேசமயம் கவிதையாகவும் சொல்லியிருப்பார் பாலுமகேந்திரா. என்ன ஒன்று... பாலுமகேந்திராவுக்கு வரவே வராத, கள்ளக்கடத்தல், நாட்டாமை, கடத்தி வைப்பது, சண்டைக் காட்சி என்று ஏகப்பட்ட அதகளங்கள் நடந்துதான் படம் முடியும்.

ராமனாக விக்னேஷ். அப்துல்லாவாக கரண். கரணின் தந்தையாக கிட்டி. அம்மாவாக சிஐடி சகுந்தலா. ஊட்டி ஹாஜியாராக சிவக்குமார். அவரின் மகளாக ருத்ரா. அந்த ஊர் நாட்டாமை பாலாசிங். அவரின் தங்கை ஈஸ்வரி ராவ். எல்லோருமே அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். சார்லி, வையாபுரி, ஆகாஷ், பப்லு என பலரும் அவரவர் பங்கைச் சிறப்பாகவே செய்திருப்பார்கள்.

கரணுக்கு ருத்ரா ஜோடி. விக்னேஷுக்கு ஈஸ்வரிராவ் ஜோடி. இறுதியில் களேபரங்களும் கலாட்டாவுமாக நடந்து, ஒருவழியாக சுபமாக முடியும். பாலுமகேந்திரா படம் என்றாலே ஊட்டி நினைவுக்கு வரும். ஒளிப்பதிவு ஞாபகத்துக்கு வரும். ஹீரோவும் ஹீரோயினும் பாடலில் இயல்பாக நடந்துகொண்டே, பேசிக்கொண்டே இருப்பார்கள். இவை எல்லாமும் இருக்கும். நம்மையும் ஈர்க்கும்.

முக்கியமாக, பாலுமகேந்திரா என்றால் இளையராஜா இல்லாமலா? எல்லாப் பாடல்களுமே ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர் என்று ஜில்லென்று கொடுத்திருப்பார்.

வழக்கமாக டைட்டில் பாடலைப் பாடுவது இளையராஜாவின் வழக்கம்தானே. ஆனால், ‘உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?’ என்கிற பாடலைப் பாடியவர் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.ஹனீபா.

அடுத்து வருகிற எல்லாப் பாடல்களும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டே நம்மையும் மனதையும் ஜெயித்துவிடும். ’மச்சான் உன் மச்சினி’ பாடலை மால்குடி சுபா பாடியிருப்பார். இந்த இரண்டு பாடல்களையும் வாலி எழுதியிருப்பார். கவிஞர் காமகோடியன் எழுதிய ‘செம்பருத்திப் பெண்ணொருத்தி’ என்ற பாடலை எஸ்பிபி-யும் சித்ராவும் அசத்தியிருப்பார்கள். அறிவுமதி எழுதிய ‘முத்தமிழே முத்தமிழே’ பாடல் அழகிய மெலடி. எஸ்பிபி-யும் சித்ராவும் கொஞ்சியிருப்பார்கள். கவிஞர் மு.மேத்தா எழுதிய, ‘என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே?’ என்ற பாடலை அருண்மொழியும் பவதாரிணியும் பாடியிருப்பார்கள். அந்த வருடத்தில் வந்த பாடல்களில், இந்தப் பாடல் தனி தினுசாகவும் இருந்தது. புது ரகமாகவும் இருந்தது. முக்கியமாக, பவதாரிணியின் குரல், இந்தப் பாடலை இன்னும் ஹிட்டாக்கியது.

1997 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது ‘ராமன் அப்துல்லா’. படம் வெளியாகி 25 ஆண்டுகளாகின்றன. இன்னமும் ராமனையும் அப்துல்லாவையும் மறக்கவில்லை. முக்கியமாக, பவதாரிணியின் ‘கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு’ என்கிற குரலை மறக்கத்தான் முடியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in