2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!

2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!

2023 ஆம் வருடம் முடிய இன்னும் சில தினங்களே இருக்கிறது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல நல்ல விஷயங்கள் நிகழ்ந்திருந்தாலும், பிரபலங்களின் எதிர்பாராத மரணங்களும் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மாரிமுத்து:

இயக்குநர், நடிகராக சினிமாவில் வலம் வந்தவர் மாரிமுத்து. ‘எதிர்நீச்சல்’ சீரியல் மிகப்பெரிய புகழைத் தேடித் தந்த நிலையில், ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேச சென்ற போது கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் எதிர்பாராத மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 'ஏய்...இந்தாம்மா' என இவரது பேச்சு அழகுக்கே லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கிறது திரையுலகமும், சின்னத்திரை உலகும்.. அவர் குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க, மீளாத்துயரில் ரசிகர்களை ஆழ்த்தியுள்ளார் மாரிமுத்து.

மனோபாலா:

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வந்த மனோபாலா, தனது நடிப்பின் மூலமாக இன்றும் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். ஒடிசல் தேகமும், அப்பாவி முகமும், சன்னமான குரலும் இவரது நடிப்புக்கு மேலும் உரமூட்டியது. யூடியூப் சேனலில் பிரபலங்களை இவர் எடுத்த நேர்காணல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது. 69 வயதான நடிகர் மனோபாலா, கடந்த மே மாதம் 3ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வர இருக்கும் படம் 'இந்தியன்2'. இதற்கு முன்பு இந்தப் படத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்டப் பிரபலங்கள காலமாக, அவர்கள் வரிசையில் மனோபாலாவும் இணைந்தது பெரும் சோகம்.

மயில்சாமி:

தனது நகைச்சுவை நடிப்பிற்கு பெயர் போனவர் நடிகர் மயில்சாமி. 57 வயதே ஆன நடிகர் மயில்சாமி, திடீரென மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி மறைந்தார். நடிப்பையும் தாண்டி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, பொதுமக்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து வந்தார். இந்த மழைக்கால பெருவெள்ளத்தின் போது, மயில்சாமி மட்டும் இருந்திருந்தா... என்கிற குரல்கள் சாலிகிராமம், விருகம்பாக்கம் மக்கள் மத்தியில் மீண்டும் எதிரொலித்தது.

சரத்பாபு:

குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் சரத்பாபு. ’சட்டம்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’ என தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக ‘போர் தொழில்’ படத்தில் நடித்தார். உடல் உறுப்புகள் செயலிழந்து போனதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, சிகிச்சை பலனின்றி கடந்த மே 22ஆம் தேதி உயிரிழந்தார்.

டிபி கஜேந்திரன்:

இயக்குநர், நடிகர் டிபி கஜேந்திரன் தன்னுடைய 68 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதி காலமானார். தனது நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்ததற்காக நடிகராகப் பெயர் பெற்றவர் கஜேந்திரன். தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் வகுப்புத் தோழரான டிபி கஜேந்திரன், எந்த இடத்திலும் அதை பெரிதாக பதிவு செய்ததேயில்லை. பட்ஜெட் படங்களை ஹிட் ஆக்குவதில் பெரும் வித்தகர் டிபி கஜேந்திரன். தான் இயக்கிய படங்கள் அனைத்தின் தயாரிப்பாளர்களும் இதுவரை நஷ்டமே அடைந்ததில்லை என்கிற சாதனைக்கு சொந்தக்காரர்.

தமிழகத்தின் ‘அன்பு மகள்’ மீரா:

‘அன்பு காட்ட மொத்த தமிழகமும் இருக்கையில் ஏன் பிரிந்தாய் மகளே?’ என்று தமிழகத்தைத் தாண்டியும் மக்கள் மீராவின் மறைவுக்கு கதறி உருகினார்கள். சாகுற வயசா அது?

இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவியான மீரா மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என சொல்லப்பட்ட நிலையில், திரையுலகம் மட்டுமல்லாமல், தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

குழந்தை முகம் மாறாதா மீரா, படிப்பிலும் விளையாட்டிலும் படுசுட்டி. இவரின் இந்த எதிர்பாராத மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இனிமேல் தான் செய்யப்போகும் நல்ல காரியங்களில் எல்லாம் மீரா இருப்பாள் என உருகினார் விஜய் ஆண்டனி. உனக்காக அம்மா காத்திருக்கிறேன் என விஜய் ஆண்டனி மனைவி ஃபாத்திமா சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஒவ்வொரு விஷயம் ரசிகர்களை சோகத்தில் உலுக்கியது.

இவர்கள் மட்டுமல்லாது, பின்னணிப் பாடகி வாணிஜெயராம், ஜூனியர் பாலைய்யா, ஆர்.எஸ். சிவாஜி, கே.விஸ்வநாத், சங்கரன் போன்ற திரையுலக பிரபலங்களின் மறைவு ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகிற்கும் பேரழிப்பு தான்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in