சினிமாவில் 20 ஆண்டுகள்: த்ரிஷாவுக்கு பாராட்டு விழா!

சினிமாவில் 20 ஆண்டுகள்: த்ரிஷாவுக்கு பாராட்டு விழா!

நடிகை த்ரிஷா திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பாராட்டு விழா எடுக்க திரைத்துறை நண்பர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 1999-ல் 'மிஸ் சென்னை' பட்டம் வென்ற நடிகை த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் குயின். 1999 வருடத்தில் 'ஜோடி' படத்தில் கதாநாயகி சிம்ரனின் தோழியாக ஒரு சில காட்சிகளில் அவர் வந்து போனாலும், 2002-ம் ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த 'மெளனம் பேசியதே' படமே அவருடைய முதல் திரைப்படம்.

'சாமி', 'கில்லி', 'ஆறு' என கமர்ஷியல் ஹிட் படங்களின் கதாநாயகியாக வலம் வந்தவர் 'அபியும் நானும்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸி, '96' என தமிழ் சினிமாவின் முத்திரை கதாபாத்திரங்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகை த்ரிஷா, 'மெளனம் பேசியதே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகின்றன.

அவர் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி அவரது திரைத்துறை நண்பர்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவின் 80-களின் கதாநாயகிகள் மற்றும் கதாநாயகிகள் ஒன்று கூடி சந்திப்பு நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில் த்ரிஷாவுக்கான பாராட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதில் த்ரிஷாவின் நெருங்கிய தோழிகளான நடிகை ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா, ஆடை வடிவமைப்பாளர் சிட்னி உள்ளிட்ட திரைத்துறை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது த்ரிஷாவின் நெருங்கிய தோழிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த நட்சத்திரங்கள் சந்திப்பு சென்னையில் நடக்குமா அல்லது கோவாவில் நடத்த திட்டமா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in