சண்டைக்கோழி மண்ணில் புறாவுக்கு இடம் ஏது?

19-வது சென்னை சர்வதேச திரை விழா
படத்தில் அகமது
படத்தில் அகமது

மனித மனத்தின் மெல்லிய உணர்வுகளைத் திரைக்காவியமாகப் படைப்பதில், ஈரானிய திரைப்படங்களுக்குத் தனி இடமுண்டு. உலக சினிமா ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் ஈரானிய படங்கள் பல. இந்த ஆண்டு அவற்றில் ஒன்றாக மாறியது ‘வர்ள்ட், நார்தன் ஹெமிஸ்ஃபியர்’ (World, Northern Hemisphere).

புத்தாண்டின் 2-வது நாளன்று, 19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சத்யம் திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டது. 30-த்துக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கிய ஹுசைன் டெஹ்ரானி எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் முதல் புனைவுத் திரைப்படம் இது.

ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது குஜெஸ்தான் மாகாணம். இது இராக்குக்கும் ஈரானுக்கும் இடையிலான எல்லையோரப் பகுதி. கடந்த காலத்தில் இங்கு போர் நிகழ்ந்ததால், அகற்றப்படாத கண்ணிவெடிகளும் வெடிகுண்டுகளும் இன்றும் அவ்வப்போது வெடித்துச் சிதறி அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்படி ஈரான் - இராக் நாடுகளுக்கு இடையிலான பகுதியில் போர் விட்டுச்சென்ற பாதிப்புகளை, 14 வயது சிறுவனான அகமதின் பார்வையிலிருந்து படம் பேசுகிறது.

தனது குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தவன் அகமது. தாய் மற்றும் 2 சகோதரிகளுக்காக குடும்ப பாரத்தைச் சுமக்கிறான். தனது வீட்டில் புறாக்களைப் பிரியத்தோடு வளர்த்து வரும் அகமது, சந்தைக்குச் சென்று அவற்றை விற்று குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட முயல்கிறான். மறுபுறம் பள்ளிக்கும் சென்று வருகிறான்.

மண்டை ஓடு ஈரானியருடையதல்ல!

அகமதின் தாய், வீட்டில் மாடுகளை வளர்க்கிறார். தங்களுக்குச் சொந்தமான தரிசு நிலத்தைச் செப்பனிட்டு அதை குத்தகைக்கு விட்டு குடும்பத்தை காப்பற்ற முயல்கிறார். புதர் மண்டிக்கிடக்கும் அந்த நிலத்தை தோண்டும்போது சிதிலமடைந்த மண்டை ஓடு ஒன்று அகமதுக்குத் தட்டுப்படுகிறது. திகைத்து நிற்கும் அவனிடம், “இது ஈரானியருடையதல்ல” என்று சொல்லி அந்த மண்டை ஓடைப் பிடுங்கி வீசியெறிந்துவிடுகிறார் தாய். இந்தச் சம்பவம் அகமதை சஞ்சலப்படுத்துகிறது. எல்லா மனித உயிர்களும் ஒன்றுதானே. அதில் இராக்கியராக இருந்தால் என்ன, ஈரானியராக இருந்தால் என்ன என்று மனிதநேயத்தை கோரும் அறச்சீற்றம் கொள்கிறான்.

இதற்கிடையில், இந்த நிலத்தில் வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் புதைந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் அகமதுக்கும் அக்கம்பாக்கத்தாருக்கும் எழுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் ஈரான் அரசு தங்களது நிலத்தைக் கைப்பற்றும் என்ற அச்சுறுத்தலும் உள்ளது.

நிலமா, மகளா?

இதற்கிடையில் அகமதைப் போலவே 14 வயதேயான அவனது ஒரு சகோதரியை 30 வயதைக் கடந்த முறைப் பையன் ஒருவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். 9 வயதிலேயே சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் நிலை இன்னமும் ஈரான் நாட்டின் சில பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அகமதின் தாய் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். வீடு தேடி பெண் கேட்டு வரும் ஊர் பெரியவர்களை விரட்டியடிக்கிறார். ஊர் பெரியவர்களையும் அரசு அதிகாரியான முறைப்பையனையும் பகைத்துக் கொண்டதால், தங்களது நிலத்தைப் பறிகொடுக்கும் பரிதாப நிலைக்கு அகமதின் குடும்பம் தள்ளப்படுகிறது. தங்களையும் தங்களது நிலத்தையும் பாதுகாக்க அகமதின் குடும்பத்தினரால் முடிந்ததா என்பதே படம்.

இயக்குநர் ஹுசைன்
இயக்குநர் ஹுசைன்

’வர்ள்ட், நார்தன் ஹெமிஸ்ஃபியர்’ படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புகூட, ஈரானின் சுஷ் என்ற ஊரில் கண்ணிவெடி வெடித்து, உள்ளூர் வாசி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனக்கு 6 வயது இருக்கும்போதே சொந்த ஊர், ஏவுகணை தாக்குதலால் நாசமானதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ஹுசைன். இவற்றுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுதும் உள்ள மனித இனத்தின் உச்சபட்ச பிரச்சினையாக யுத்தம் நீடிப்பதால், யுத்தத் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று உளமார நினைத்திருக்கிறார்.

நான் கேட்ட போர் கதைகள்!

அதேநேரம் படப்பிடிப்பின்போது, தனக்கும் தனது குழுவினருக்கும் எந்நேரமும் மரணம் சம்பவிக்கும் அபாயம் உள்ளதையும் உணர்ந்திருக்கிறார். இந்நிலையில் படக்குழுவினருக்குச் சிறப்புக் காப்பீடு செய்து கொடுத்திருக்கிறார். கண்ணிவெடி வழிகாட்டிகளின் துணையையும் பெற்றிருக்கிறார். படத்துக்கு முதலில், ‘ஸ்டோரீஸ் ஐ ஹேவ் ஹேர்ட் ஆஃப் வார்’ (Stories I’ve heard of war) என்றுதான் பெயர் சூட்டத் திட்டமிட்டிருக்கிறார். பிறகு, போர் குறித்துக் கேள்விப்பட்டவர்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைப் போக்க நினைத்துப் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் கதைப்படி அகமதுக்கு முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை கதாபாத்திரம் இருந்துள்ளது. ஆனால், தாய் கதாபாத்திரத்தில் நடித்த பெண் உள்ளூர்வாசி. அவர், தங்களது கலாச்சாரப்படி அந்நியர் ஒருவருக்கு மனைவியாக நடிக்க அனுமதி கிடையாது என்று வாதம் செய்திருக்கிறார். அதனால் வேறு வழியின்றி திரைக்கதையை மாற்றி எழுதி, அகமது தந்தை கதாபாத்திரத்தை இயக்குநர் ஹுசைன் கொல்ல வேண்டிவந்தது. அந்த அளவுக்கு மதக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஈரான் தேசத்தில், இப்படியொரு திரைப்படத்தைப் புனையப் படக்குழுவினர் பட்டிருக்கும் சிரமங்கள், புனைவுக்குள்ளும் பல இடங்களில் தொனிக்கவே செய்கிறது.

குறிப்பாகப் படத்தின் தொடக்கக் காட்சியில், அகமது புறாக்களை விற்க சந்தையில் உட்கார்ந்திருக்கிறான். அவன் அருகில் சண்டைக்கோழிகளை விற்கும் வியாபாரி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் கூவிக்கூவி தனது சண்டைக்கோழிகளை விற்றுக் கொண்டிருக்கிறார். அகமது அமைதியாக கூண்டில் வைத்திருக்கும் புறாக்களில் ஒன்றை கையில் ஏந்துகிறான். வெள்ளை நிறமான அந்தப் புறாவைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். சட்டென அருகில் இருக்கும் வியாபாரி, இவனிடம் வந்து புறாவின் விலையை விசாரித்து தன் கையில் அந்த வெள்ளைப் புறாவை எடுக்கிறார். அகமது அதற்கு விலை பேசுவதற்கு முன்பே, புறாவின் கழுத்தை கையாலேயே திருகி முண்டமாகத் தரையில் வீசியெறிகிறார். புறா பரிதாபமாகத் துடிதுடித்து இறந்துபோகிறது.

அகமதைப் போலவே நம்மை திடுக்கிட வைக்கும் அந்த காட்சிக்கும் படத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், திரைக்கதை நகர நகர முதல் காட்சிக்கான அர்த்தம் நமக்குப் புலப்படத் தொடங்குகிறது. சண்டைக்கோழிகளைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கத் துடிக்கும் சமூகத்தில், அமைதிப் புறாக்களுக்கு இடமில்லை என்பதைக் கதையோட்டம் உணர்த்துகிறது.

‘யுத்தம் முடிந்த பின்பும் அது ஏற்படுத்திவிட்டுச் சென்ற வடுக்கள் அவ்வளவு எளிதில் மறைவதில்லை’ என்பதை, நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது ‘வர்ள்ட், நார்தன் ஹெமிஸ்ஃபியர்’.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in