ஆஸ்கர் விழாவை பார்த்த 15.36 மில்லியன் அமெரிக்கர்கள்

ஏபிசி நிறுவனம் தகவல்
ஆஸ்கர் விழாவை பார்த்த 15.36 மில்லியன் அமெரிக்கர்கள்

லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவை 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்துள்ளதாக ஏபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆரம்ப பார்வையாளர்களின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

கரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு பார்வையாளர்கள் இன்றி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்ததால், தொலைக்காட்சியில் விழாவைப் பார்த்தவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவில் சரிந்தது. கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை 9.85 மில்லியன் நேரடி பார்வையாளர்கள் பார்த்தனர். ஆஸ்கர் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பார்வையாளர்களை பெற்றதால் இந்தாண்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல ஆஸ்கர் குழு திட்டமிட்டது.

அதன்படி சிறந்த துணை நடிகருக்கான விருது, டியூன் படக்குழுவோடு உரையாடல் என பல விஷயங்கள் சுவாரஸ்யமாக நிகழ்ந்தன. அனைத்திற்கும் உச்சமாக நடிகர் வில் ஸ்மித், தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்தது இணையத்தில் வைரலானது. ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்றது.

இந்நிலையில் ஏபிசி நிறுவனம் வெளியிட்ட துவக்க பார்வையாளர் புள்ளிவிவரத்தில் நேற்றைய ஆஸ்கர் விழாவை 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறையைவிட 56% பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் 2019-ம் ஆண்டு ஆஸ்கார் விருது விழா நிகழ்ச்சி 23.6 மில்லியன் அமெரிக்கர்களால் பார்க்கப்பட்டது. இது தனியார் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரமாகும். அதிகாரப்பூர்வ பார்வையாளர் ரேட்டிங் இனிதான் வெளியாகும்.

Related Stories

No stories found.