
சினிமா தியேட்டர் வாசலில் அந்தப் பெண் தவிப்போடு காத்திருந்தார். அவர் நடித்த திரைப்படம் அந்த திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. அதையொட்டி விழா ஒன்றும் அன்றைய தினம் அந்த திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க அந்தப் பெண்ணுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி ஆவல் உந்த அவரும் அங்கே வந்து விட்டார்.
அந்தப் பெண்ணை பார்த்ததும், விருந்தினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த பெண் வெளியேறினால் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்போம் என்றார்கள். எனவே அந்த திரைப்படத்தின் நாயகியாக நடித்திருந்த பி.கே.ரோஸி என்ற அந்தப் பெண் அடுத்த காட்சிக்கு காத்திருந்து, தான் நடித்த திரைப்படத்தை தரிசித்து சென்றார்.
அந்த திரைப்படத்தின் பெயர் விகதகுமரன். மலையாளத்தின் முதல் திரைப்படம் அது. ரோசம்மா என்ற இயற்பெயருடைய அந்தப் பெண்ணை, தான் தயாரித்து இயக்கிய விகதகுமரனுக்காக பி.கே.ரோஸி என்று பெயரிட்டு அறிமுகப்படுத்தினார் ஜே.சி.டேனியல். மலையாள சினிமாவின் முதல் திரைப்படம் என்ற வரலாற்று சாதனையை விகதகுமரன் பெற்றது. முதல் நாயகி என்ற பெருமையை பெற்றபோதும் பி.கே.ரோஸி சார்ந்திருந்த சாதி, அவரது கால்விலங்காக கட்டிப்போட்டிருந்தது.
மலையாள சினிமாவின் முதல் சினிமாவை தயாரித்து இயக்க ஜே.சி.டேனியல் முன்வந்தபோது, அதில் பெண் பாத்திரத்தில் நடிக்க எவருமே முன்வரவில்லை. நாடகத்திலும், சினிமாவி்லும் நடிப்பதை மாற்றுக்குறைவாக அன்றைய ஆணாதிக்கம் வரையறுத்திருந்தது. வீட்டுப் பெண்களை அனுமதிக்க ஆண்கள் மறுத்தனர். வேறு வழியின்றி நாட்டுப்புற கலைகளில் ஈடுபாட்டோடு இருந்த ரோசம்மாவை தேடிக் கண்டடைந்தார் ஜே.சி.டேனியல். அப்படித்தான் பி.கே.ரோஸி உருவானார்.
பட்டியலினப் பெண்ணான ரோஸி, விகதகுமாரனில் அவர் சரோஜினி என்ற நாயர் குலத்துப் பெண்ணாக நடித்ததும் பெரும் பிரச்சினையானது. மேற்கண்ட திரையரங்க புறக்கணிப்பு மட்டுமல்ல, ரோஸியின் வீட்டில் கற்கள் மற்றும் சாணியை வீசினார்கள். நடிப்பது ரோஸம்மாவின் கனவுகளில் ஒன்று. ஆனால் அதற்கு விலையாக உயிரச்சத்துடன் வாழ வேண்டியிருந்தது. மேட்டிமை சாதியினரின் அச்சுறுத்தல் தாங்காது ஊரை விட்டு ஓடியவருக்கு லாரி ஓட்டுநர் ஒருவர் உதவினார். கேசவ பிள்ளை என்ற அந்த ஓட்டுநரையே மணந்துகொண்டு தமிழக எல்லைக்குள் ராஜம்மாவாக வாழ்ந்து மறைந்தார் பி.கே.ரோஸி.
1903ல் ரோசம்மாவாக பிறந்து, 1930ல் பி.கே.ரோஸியாக மலையாளத்தின் முதல் படத்தில் நடித்து, 1988ல் ராஜம்மாவாக தனது 85 வயதில் மறைந்தார். ஆனபோதும், இன்றைக்கும் கேரள பெண்கள் மற்றும் நடிகையர் மத்தியில் பி.கே.ரோஸி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். சாதிய பிற்போக்கும், பெண்ணடிமைத்தனமும் தலைவிரித்தாடிய காலத்தில், தனது சினிமா கனவை அரங்கேற்றிய ரோஸியின் நினைவாக மலையாள ஃபிலிம் சொஸைட்டி ஒன்றுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கேரள சினிமாவின் பெண்ணிய சினிமாக்களுக்கும், துணிச்சலான நடிகையரின் இயல்புக்கும் ஒருவகையில் வித்திட்டவர் பி.கே.ரோஸி எனலாம்.
பிப்.10 அன்று பி.கே.ரோஸியின் 120வது பிறந்த தினம். சர்வதேச பிரபலங்களை கவுரவிப்பதன் வரிசையில், கூகுள் டூடுல் இட்டும் சிறப்பித்திருக்கிறது.