மதுரை மண்ணில் ‘விருமன்’ பட ஆடியோ விழா!

மதுரை மண்ணில் ‘விருமன்’ பட ஆடியோ விழா!

கிராமியப் பின்னணியில் ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘கொடிவீரன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘விருமன்’. நடிகர் சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூரி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘கஞ்சா பூ கண்ணால’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் இப்பாடல் யூடியூபில் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. படத்தின் இன்னொரு பாடலான ‘மதுரை வீரன்’ பாடலின் முன்னோட்டமும் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in