பெங்களூருக்குத் தனி விமானத்தில் சென்ற ரஜினி: காரணம் இதுதான்!

பெங்களூருக்குத் தனி விமானத்தில் சென்ற ரஜினி: காரணம் இதுதான்!

நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று பெங்களூருவுக்குச் சென்றிருக்கிறார்.

கர்நாடக நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்காக ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். இந்தப் புகைப்படங்களும், காணொலியும் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். ராஜ்குமார் குடும்பத்துடன் நடிகர் ரஜினிகாந்துக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உள்ளது. புனித் ராஜ்குமாரின் அறிமுகப் படமான ‘அப்பு’வின் சில்வர் ஜூப்ளி நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இருந்தார்.

புனித் ராஜ்குமார் இறந்த சமயம், நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அப்போது அவர் அதிகம் பயணம் செய்யக்கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரை காரணமாக அந்த சமயத்தில் புனித்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல அவர் நேரில் செல்லவில்லை.

இந்த நிலையில் இன்றைய நிகழ்வில் பங்கேற்கும் ரஜினி, புனித் பற்றி என்னப் பேசப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர். ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் நடித்து வரக்கூடிய ‘ஜெயிலர்’ படத்தில் புனித்தின் அண்ணன் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in