காதல் தேசம் ரீ-ரிலீஸ்: தெலுங்கில் பலத்த வரவேற்பு

காதல் தேசம் ரீ-ரிலீஸ்: தெலுங்கில் பலத்த வரவேற்பு

25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான காதல் தேசம் திரைப்படம் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

1996-இல் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், கதிர் இயக்க அப்பாஸ், வினீத், தபு உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ’காதல் தேசம்’. காதலுக்கும் நட்புக்கும் இடையிலான மெல்லிய கோட்டைத் தீண்டிய இந்த திரைப்படம், அதன் பிரம்மாண்டம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காகவும் கொண்டாடப்பட்டது. அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவிலும் பெருவெற்றி பெற்றது.

பழைய திரைப்படங்கள் மறு வெளியீடு காணப்படுவதன் வரிசையில் அண்மையில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனும் இணைந்திருக்கிறார். இவர், காதல் தேசம் திரைப்படத்தை ’பிரேம தேசம்’ என்ற தலைப்பில், மெருகேற்றப்பட்ட வெளியீடாக ஆந்திரா மற்றும் தெலங்கானா தியேட்டர்களில் திரையிடச் செய்திருக்கிறார். நூற்றுக்கும் மேலான திரையரங்குகளை ஆக்கிரமித்த பிரேம தேசம், அதன் முதல் சுற்று வரவேற்பில் திருப்தி அளித்திருக்கிறது.

ஜென்டில்மேன், காதலன் என மெகா ஹிட் படங்கள் தந்த கே.டி.குஞ்சுமோன் தற்போது ஜென்டில்மேன்-2 தயாரிப்பு பணிகளில் மும்முரமாக உள்ளார். காதல் தேசம் வரிசையில் தனது தயாரிப்பிலான இதர படங்களை, மறு வெளியீடு செய்யவும் இவர் உத்தேசித்துள்ளார்.

ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படமும் மறு வெளியீடு காண இருக்கிறது. திரைத்துறையை பீடித்திருக்கும் ரீ-ரிலீஸ் மோகம் காரணமாக,2013-ஆம் ஆண்டில் புதிய திரைப்படங்களுக்கு போட்டியாக பழைய வெற்றிப் படங்களை தூசு தட்டுவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in