எஸ்பிபி - ரஜினி: இணைபிரியாத பந்தம்!

எஸ்பிபி - ரஜினி: இணைபிரியாத பந்தம்!

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய ‘அண்ணாத்தே... அண்ணாத்தே’ பாடல், நேற்று வெளியாகியிருக்கிறது. இத்தனை வயதில் இத்தனை உத்வேகத்துடன் பாட முடியுமா என்று ரசிகர்கள் எஸ்பிபியைக் கொண்டாடிவருகிறார்கள். எப்பேர்பட்ட மேதையை இழந்துவிட்டோம் என்று கண்ணீர் சிந்துகிறார்கள். கூடவே, “இதுதான் எனக்கு எஸ்பிபி பாடும் கடைசிப் பாடல் என்று கனவில்கூட நினைக்கவில்லை” என ரஜினி உருக்கமாக ட்வீட் செய்திருக்கிறார். ரஜினியின் வார்த்தைகளில் இருக்கும் வருத்தம் மிக மிக ஆழமானது. ரஜினியின் திரை பிம்பத்தையும், அரசியல் பிம்பத்தையும் கட்டமைத்த அம்சங்களில் ஒன்றாக எஸ்பிபியின் கம்பீரக் குரல் இருந்தது. அதை இழந்துவிட்ட வேதனையைத்தான் ரஜினி வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக, ‘ஓப்பனிங் சாங்’ எனப்படும் தொடக்கப் பாடலை ரஜினியின் வேகத்துக்கும் கம்பீரத்துக்கும் ஈடுகொடுக்கும் வகையில் பாட இனி யாருமே இல்லை என்பது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் மட்டுமல்ல, இசை ரசிகர்கள் அனைவருக்கும் வேதனை தரும் விஷயம்.

பரஸ்பரப் பரிசு மழை

ரஜினியின் திறமை மீது மட்டுமல்ல, எளிமை மீதும் எஸ்பிபிக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. எஸ்பிபியின் குரலுக்கு ரஜினி பரம ரசிகர். இருவரும் இணைந்து ஏராளமான வெற்றிப் பாடல்களைத் தந்தனர். ‘விழியிலே மலர்ந்தது’ (புவனா ஒரு கேள்விக்குறி), ‘நம்ம ஊரு சிங்காரி’ (நினைத்தாலே இனிக்கும்), ‘மதனோற்சவம்’ (சதுரங்கம்) என்று தொடங்கி எத்தனையோ நூறு பாடல்களை இருவரும் இணைந்து நமக்கு வழங்கியிருக்கின்றனர். பெரிய சூப்பர் ஸ்டாராக வரப்போகிறார் என்று ரஜினியை கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியபோது அதைப் பெரிதாக நம்பவில்லை என்று பதிவுசெய்திருக்கும் எஸ்பிபி, அதன் பின்னர் ரஜினியின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கினார். கன்னடம் கலந்த தமிழில் ரஜினியின் விநோத உச்சரிப்பே அவரது விசேஷத் தன்மைக்கும் வழிவகுத்தது. அதைக் கச்சிதமாக உள்வாங்கி ரஜினியின் பாடல்களை மிளிரவைத்தார் எஸ்பிபி.

‘மன்மதன் வந்தானா... ஹாங்’ என்று எஸ்பிபி பாடும்போது, ரஜினியே தன் சொந்தக் குரலில் பாடுவதுபோல் இருக்கும். பாடல் முழுவதும் போக்கிரித்தனம் நிறைந்த குறும்பு இருக்கும். மீறல் இருக்கும்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘ஆனந்தத் தாண்டவமோ’ பாடல், எம்.எஸ்.வி பாடிய ‘ஜகமே தந்திரம்’ ஆகிய பாடல்களைத் தவிர ஆண் குரல் பாடல்கள் அனைத்தையும் எஸ்பிபிதான் பாடியிருப்பார். மற்ற எல்லா பாடல்களும் கமலுக்காகப் பாடியவை. அந்தப் பாடல்களில் காதல் இருக்கும், ஏக்கம் இருக்கும், காத்திருப்பின் வலி இருக்கும். ஆனால், ரஜினிக்காக எஸ்பிபி பாடிய ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலைக் கேளுங்கள். எஸ்பிபி அப்படியே ரஜினியாகக் குரலிலேயே அபிநயத்திருப்பார். ‘மன்மதன் வந்தானா... ஹாங்’ என்று எஸ்பிபி பாடும்போது, ரஜினியே தன் சொந்தக் குரலில் பாடுவதுபோல் இருக்கும். பாடல் முழுவதும் போக்கிரித்தனம் நிறைந்த குறும்பு இருக்கும். மீறல் இருக்கும். அதுதான், எஸ்பிபியின் தனித்திறனுக்கானச் சான்று!

‘தப்புத்தாளங்கள்’ படத்தின் ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’ பாடலில், ‘வாழ்க்கை’ எனும் வார்த்தையை ‘வாழ்க்கெ’ என்று உச்சரித்திருப்பார் எஸ்பிபி. வாழ்வின் மீதான விரக்தியும், தன் குற்றச்செயல்களுக்கு நியாயம் கற்பித்துக்கொள்ளும் மனநிலையும் கொண்ட பாத்திரத்தில் ரஜினி பாடும் அந்தப் பாடலில், அந்த ‘வாழ்க்கெ’ எனும் வார்த்தை விட்டேத்தியான மனப்போக்கை வெளிப்படுத்துவதுடன், ரஜினியின் அந்தத் தனித்துவமான உச்சரிப்பையும் பதிவுசெய்துவிடும். ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தின் ‘காத்தோடு பூவுரச’ பாடலில் ‘ஆறாதோ தாகம் வந்தா ஆசே(!) மோகம் வந்தா’ என்று பாடுவார் எஸ்பிபி. ரஜினியின் உச்சரிப்புப் பிழையை வைத்தே அவருக்குச் செய்த சிறப்பு அது. தனது அபாரத் திறமை மூலம் அந்தச் சிறப்பு உரிமையை எஸ்பிபி அடைந்திருந்தார்.

தெலுங்கு, கன்னடம் என ரஜினியின் மொழிமாற்றுப் படங்களுக்கும் எஸ்பிபி கணிசமாகப் பாடியிருக்கிறார். இந்தியில் ரஜினி நடித்த சில படங்களிலும் அவருக்காக எஸ்பிபி பாடியிருக்கிறார். குறிப்பாக, ‘மவுஸம் கா தகாஸா ஹே’ போன்ற பாடல்கள் இனிமையானவை. கமலுக்காக எஸ்பிபி பாடிய ‘ஏக் துஜே கே லியே’ படத்தின் பாடல்கள் அளவுக்கு இல்லையென்றாலும் தன்னளவில் சிறப்பானவை ரஜினி - எஸ்பிபி இந்திப் பாடல்கள். ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்துக்கு இசையமைத்த எஸ்பிபி, ரஜினியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் இசையை வழங்கி அற்புதமான பாடல்களையும் பாடியிருந்தார். ‘வாலிபம் பாடாத பூமாலை’ ஒரு சிறந்த உதாரணம். பப்பி லஹரி பாடல்களின் சாயலில் வெற்றிகரமான இசையை எஸ்பிபி அந்தப் படத்தில் தந்தார்.

நடிகர்களின் உடல்மொழி, உச்சரிக்கும் விதம் போன்றவற்றை உள்வாங்கிப் பாடும் திறனைப் பெற்றிருந்த எஸ்பிபி, அதைத் தன் குரலின் இனிமை கெடாமல் எப்படி சமன்படுத்தி வழங்குவது என்பதையும் அறிந்துவைத்திருந்தார். அந்தக் கலையை நட்சத்திர நடிகர்கள் முதல் வளர்ந்துவரும் நடிகர்கள் வரை அனைவருக்கும் வாரி வழங்கினார். அதில் ரஜினிக்குச் சிறப்புக் கவனம் செலுத்தினார்!

அரசியல் வருகைக்குக் கட்டியம்

ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாகப் பல ஆண்டுகளாகக் கட்டியம் கூறிவந்த பாடல்களில் வைரமுத்து, வாலி உள்ளிட்ட பாடலாசிரியர்களுக்கு எத்தனைப் பங்கு இருந்ததோ அத்தனைப் பங்கு எஸ்பிபிக்கும் இருந்தது. ‘மை நேம் இஸ் பில்லா’, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘ராஜாவுக்கு ராஜா நான்’, ‘கூவுங்கள் சேவல்களே’ தொடங்கி எத்தனையோ தொடக்கப் பாடல்கள் ரஜினியின் நேர்மையான, எளிமையான, துணிச்சலான பாத்திரங்களைப் பிரதிபலித்து அவரது பிம்பத்தைக் கட்டமைக்க உதவின. ‘தளபதி’படத்தின் ‘ராக்கம்மா கையைத் தட்டு’ வரையிலுமான ரஜினி ஓப்பனிங் பாடல்கள், ‘அண்ணாமலை’ படத்துக்குப் பின்னர் புதிய வடிவம் எடுத்தன. அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவுடன் ரஜினிக்கு இருந்த முரண், அவரது அரசியல் வருகை தொடர்பாக ரசிகர்களிடம் ஏற்பட்ட எதிர்பார்ப்பு என சூல்கொண்ட சூழல், அவரது அடுத்தடுத்த பாடல்களில் பெருமளவில் எதிரொலித்தது.

எம்ஜிஆருக்கு டிஎம்எஸ் பாடிய அரசியல் கொள்கைப் பாடல்கள் அளவுக்குச் சொல்ல முடியாவிட்டாலும், அந்த அந்தஸ்தை நோக்கிய நகர்வுகளாக ரஜினி - எஸ்பிபி பாடல்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது.

அதுபோன்ற பாடல்களை எஸ்பிபி பாடியபோது, அது ரஜினியின் உத்வேகத்தையும் வேகத்தையும் தமிழக மக்கள் மீதான பந்தத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. ‘நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா’ (பாட்ஷா), ‘அன்னைத் தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா’(அருணாச்சலம்), ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு தருவதும் தமிழல்லவா’ (படையப்பா) எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எம்ஜிஆருக்கு டிஎம்எஸ் பாடிய அரசியல் கொள்கைப் பாடல்கள் அளவுக்குச் சொல்ல முடியாவிட்டாலும், அந்த அந்தஸ்தை நோக்கிய நகர்வுகளாக ரஜினி - எஸ்பிபி பாடல்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது.

ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், அனிருத், இமான் என யார் இசையமைத்தாலும், டூயட் பாடல்களை யார் பாடியிருந்தாலும், ‘ஓப்பனிங் சாங்கு’கள் எஸ்பிபிக்குத்தான் பெரும்பாலும் வழங்கப்பட்டன (‘குசேலன்’, ‘கபாலி, ‘காலா’ போன்ற படங்களில் எஸ்பிபியின் குரல் ஒலிக்காதது எஸ்பிபி ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது!)

‘மரணம் மாஸு மரணம்’ (பேட்ட) என்று இளம் குரல்கள் கொண்டாட்டமாகப் பாடிக்கொண்டிருக்க, ‘எவண்டா மேலே எவண்டா கீழே’ என்று கம்பீரமும் கண்டிப்பும் நிறைந்த வாத்தியார் குரலில் எஸ்பிபி பாடத் தொடங்கும்போது, நம் மனதில் ரஜினியின் ஸ்டைல் பிம்பம் பிரசன்னமாகிவிடும். அதன் தொடர்ச்சியாகத்தான், ‘அண்ணாத்த’ படத்தின் பாடலிலும் மற்ற குரல்களைத் தாண்டி உயிர்ப்புடன் ஒலிக்கிறது எஸ்பிபியின் குரல்.

இறுதிவரை பயன்படுத்திக்கொண்ட ரஜினி

“கமலுக்கு மட்டும் நல்ல நல்ல பாடல்களைத் தருகிறீர்களே” என்று இளையராஜாவிடம் செல்லமாகக் கோபித்துக்கொண்ட ரஜினி, நல்ல பாடல்கள் எனச் சுட்டிக்காட்டியது எஸ்பிபி பாடிய பாடல்களைத்தான். அந்த அளவுக்கு எஸ்பிபியின் குரலை ஆழமாக நேசித்தார் ரஜினி. சொல்லப்போனால், 80-களின் யுகத்தைச் சேர்ந்த மற்ற எல்லா கலைஞர்களைவிடவும் ரஜினிதான் எஸ்பிபியுடனான பந்தத்தைத் தொடர்ந்துப் பேணிவந்தார்.

ரஜினி மட்டும்தான் ஓப்பனிங் சாங்குகள் மூலம், எஸ்பிபியின் குரலில் இறுதிவரை இருந்த உத்வேகத்தையும் இனிமையையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ரஹ்மான் வரவுக்குப் பின்னர் திரையிசைப் போக்கில் ஏற்பட்ட மாறுதல், புதிய நடிகர்களின் வரவு போன்றவற்றால், 80-களில் கோலோச்சிய எஸ்பிபி உள்ளிட்ட பாடகர்களுக்கான வெளி குறைந்தது. அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு நிறைய பாடல்கள் பாடினாலும் அதிக வாய்ப்புகள் எஸ்பிபிக்குக் கிடைக்கவில்லை. 80-களில் எஸ்பிபியின் குரலைத் தனது படங்களில் அதிகம் பயன்படுத்திய கமல்கூட, புதிய பாடகர்களின் குரலை அதிகம் நாடினார் அல்லது அவரே பாடினார். ரஜினி மட்டும்தான் ஓப்பனிங் சாங்குகள் மூலம், எஸ்பிபியின் குரலில் இறுதிவரை இருந்த உத்வேகத்தையும் இனிமையையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ரஜினிக்கு அமைந்த முதல் டூயட் பாடலான ‘விழியிலே மலர்ந்தது’ (புவனா ஒரு கேள்விக்குறி) பாடலைப் பாடியது எஸ்பிபிதான். அந்தப் படத்தில் ரஜினிக்காக முதன்முதலாக ஒலிப்பதிவுசெய்யப்பட்ட ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ பாடலையும் எஸ்பிபிதான் பாடியிருந்தார். இதோ, ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படப் பாடல்தான் எஸ்பிபி பாடிய இறுதிப் பாடல் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில், எஸ்பிபி - ரஜினி எனும் ஜோடியின் இணைபிரியா பந்தம் சிறப்பு வாய்ந்தது; இணையற்றது!

Related Stories

No stories found.