”நீயே அந்த தலைப்பாக நிலைத்து நிற்பாய்!”

மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு எழுத்தாளர் தமிழ்ப்பிரபா அஞ்சலி
”நீயே அந்த தலைப்பாக நிலைத்து நிற்பாய்!”
பிரான்சிஸ் கிருபாவின் நாவல், ‘கன்னி’

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் திடீர் மறைவு இலக்கிய ஆர்வலர்கள் பலரைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ‘பேட்டை’ நாவலாசிரியரும் ’சார்பட்டா’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவருமான தமிழ்ப்பிரபா தனது முகநூல் பக்கத்தில் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு எழுதிய அஞ்சலி குறிப்பு:

எழுத்தாளர் தமிழ்ப்பிரபா
எழுத்தாளர் தமிழ்ப்பிரபா


’கன்னி’ வாசித்து முடித்ததும் உன்னைச் சந்திக்க வேண்டுமென நிறையப் பேரிடம் விசாரித்தேன். நீ எங்கு இருக்கிறாய் என்றே தெரியாது என்றார்கள். நான் சந்திக்க விரும்பிய முதல் எழுத்தாளன் என்னை அலைக்கழிப்பது மேலும் ஆவலை அதிகரிக்கவே செய்தது. காலம் உன்னை வைத்திருந்த நிலையை அறிந்தபோது கன்னியில் அலைக்கழிக்கப்பட்ட அதே பாண்டியை நேரில் காணும் துணிவு எனக்கு இல்லை என்பதால் உன்னைச் சந்திக்கும் தருணத்தை நானாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன்.

உன் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு நீ காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறாய் என்றறிந்ததும் அங்கு வந்து உன் கரங்களைப் பற்றிக் கொள்ள வந்தேன். உன்னை அழைத்துச் சென்று விட்டதாகச் சொன்னார்கள். உன்னைக் காண முடியவில்லை என்கிற வருத்தத்தைவிட நீ அந்த குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டாய் என்கிற ஆறுதலே எனக்குப் போதுமானதாக இருந்தது.

இப்போது, நீ இறந்த செய்தியை அறிந்ததும் என் மனதில் தோன்றிய பிம்பம் இதுதான். அந்த பாண்டி, அமலா அக்காவின் கைகளில் கூடடைந்து விட்டான். மாதாவின் கைகளில் குழந்தை இயேசு அணைந்திருப்பதைப் போல.

‘ஏறக்குறைய இறைவன்’ என உன் அடுத்த நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாய். உன் படைப்புகளின் வழியாக நீயே அந்த தலைப்பாகத்தான் என்றும் எம் மனதில் நிலைத்து நிற்பாய். போய் வா கவிஞனே.

Related Stories

No stories found.