யூட்யூப் வீடியோக்களை இனி விரும்பிய மொழியில் ரசிக்கலாம்

வெள்ளோட்டம் தொடங்குகிறது யூட்யூப் இந்தியா
யூட்யூப் வீடியோக்களை இனி விரும்பிய மொழியில் ரசிக்கலாம்

யூட்யூப் நேயர்கள் தங்கள் விருப்பம்போல வீடியோவின் மொழியை மாற்றும் வசதியை யூட்யூப் இந்தியா அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கிறது. முதற்கட்டமாக இந்த வசதி மருத்துவம் சார்ந்த வீடியோக்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.

உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் இணையதளங்களில் கூகுளுக்கு அடுத்த இடத்தை யூட்யூப் பிடித்திருக்கிறது. வாசிப்புக்கு அப்பால் காட்சி வாயிலாக ஒன்றை உணரச் செய்வதிலும், வாசிப்பு வாசனையே அறியாதவருக்கும் அறிவூட்டுவதிலும் யூட்யூப் வீடியோக்கள் புரட்சி செய்து வருகின்றன.

பயனர்களுக்கு அப்பால், படைப்பாளிகளான யூட்யூபர்களுக்கும் வருமானத்தை வாரி வழங்கி வருவதிலும் யூட்யூப் கவனம் பெற்றிருக்கிறது. கரோனா காலத்தில் பணியிழந்த பலரை அவர்களின் படைப்பாற்றல் அடிப்படையில் பெரும் செல்வந்தர்களாக்கி இருக்கிறது யூட்யூப்.

யூட்யூப் பயன்பாடு அதிகரித்து வருவதன் மத்தியில், அவற்றை மென்மேலும் மெருகேற்றும் வகையில் புதிய வசதிகளை கூகுள் நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அவற்றில் இந்திய அளவிலான அண்மை மாற்றங்கள் கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக வீடியோக்களின் மொழியை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் வசதியை யூட்யூப் இந்தியா அறிமுகம் செய்கிறது. இவை யூட்யூபர் - பயனர் என இருதரப்பிலும் வரவேற்பை பெற இருக்கின்றன.

வெள்ளோட்ட அளவிலான இந்த முயற்சி முதல் கட்டமாக மருத்துவம் சார்ந்த வீடியோக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழிகளுக்கு இடையே பயனர் இனி, தங்கள் விருப்பத்துக்குரிய மொழியை தேர்ந்தெடுத்து வீடியோவை துய்க்கலாம். இதற்காக வெவ்வேறு ஆடியோ பதியும் தடங்களை ஒரே வீடியோவில் உள்ளடக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் புகுத்தியுள்ளது.

இந்த வசதியை தங்கள் வீடியோவில் ஏற்ற விரும்பும் யூட்யூபர்கள் ’அலௌட்’(Aloud) என்ற டப்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த வசதி முதல்கட்டமாக மருத்துவம் சார்ந்த தொழில்முறை பயன்பாட்டுக்கான வீடியோக்களில் மட்டும் அறிமுகமாகிறது.

அடுத்த கட்டங்களில் தமிழ் உள்ளிட்ட இதர மொழிகள் மற்றும் படைப்புகளில் இந்த வசதி விரிவாக்கம் காண இருக்கிறது. இப்போதைக்கு இந்த வசதி குறிப்பிட்ட வீடியோவில் வெளிப்படையாக காட்சியளிக்காது. செட்டிங்க்ஸ் பகுதியில் துழாவி, பயனர்கள் அவற்றை உறுதி செய்யும் அளவிலேயே உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in