டிஸ்லைக் பட்டனை ஒளித்துவைக்கும் யூட்யூப்

வெறுப்பாளர்களுக்கு கடிவாளம்
டிஸ்லைக் பட்டனை ஒளித்துவைக்கும் யூட்யூப்

யூட்யூப் தளத்தில் வெறுப்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில், வீடியோ படைப்புகளின் கீழிருக்கும் டிஸ்லைக் பட்டனை ஒளித்துவைக்க முடிவெடுத்திருக்கிறது யூட்யூப் நிர்வாகம்.

சமூக ஊடகம் என்பது வெறுப்பாளர்களின் திட்டமிட்ட கும்பல் தாக்குதல்களின் கூடாரமாக மாறி வருகிறது. அனானிகளாக இயங்க முடிவதன் தொழில்நுட்ப வசதிகளால், இங்கே வெறுப்பை கக்குவதற்கென்றே வருபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அதிலும் ஒரு சாராருக்கு சாய்வாகவோ, குறிப்பிட்ட தரப்பை சாய்ப்பதற்காகவோ திட்டமிட்டு படையெடுப்பதும், வெறுப்பை கொட்டுவதும் அதிகமாகி வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்ல, படைப்பு சார்ந்த வீடியோ சுரங்கமான யூட்யூபிலும் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.

வெறுப்பாளர்கள் தங்களுக்கான பிரதான வடிகாலாக, குறிப்பிட்ட வீடியோவின் கீழிருக்கும் டிஸ்லைக் பட்டனை உபயோகிக்கின்றனர். பொதுவான பார்வையாளர்கள், டிஸ்லைக் எண்ணிக்கையை பார்த்ததும் இந்த வீடியோவை சுலபமாக தவிர்த்து விடுகின்றனர். இதனால், குறிப்பிட்ட வீடியோ படைப்பாளரின் ஆக்கமும், உழைப்பும் அர்த்தமின்றி போகிறது. வெறுப்பின் மையமாகவும், படைப்பின் சரிவாகவும் வாய்ப்பளிக்கும் இந்த டிஸ்லைக் பட்டனுக்கு முடிவுகட்ட யூட்யூப் முடிவெடுத்துள்ளது.

அதன்படி லைக்/டிஸ்லைக் பட்டன்கள் அப்படியே இருக்கும். இதில் டிஸ்லைக் எண்ணிக்கை, இனி வீடியோ படைப்பாளருக்கு மட்டுமே புலனாகும். பார்வையாளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் வகையில், வழக்கம் போல லைக்/டிஸ்லைக் செய்யலாம். ஆனால், டிஸ்லைக் எண்ணிக்கையை பார்க்க முடியாது.

இது, லைக்/டிஸ்லைக் அடிப்படையில் ஒரு வீடியோவின் தரத்தை கணிக்கும் பார்வையாளர்களுக்கும், நேரத்தையும் உழைப்பையும் கொட்டி வீடியோவை உருவாக்கும் படைப்பாளர்களுக்கும் சாதகமானது. முக்கியமாய் இந்த அப்டேட், யூட்யூப் மேடையை தங்களது திறமைக்கும், வருமானத்துக்கும் ஆதாரமாக கருதும், ஆரம்பநிலையிலிருக்கும் சிறு யூட்யூபர்களுக்கு பயனுள்ளதாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in