கலைஞனின் கருத்துரிமையை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்?

இளையராஜா விவகாரத்தில் எழுத்தாளர் சோ.தர்மன் காட்டம்
இளையராஜா
இளையராஜா

இளையராஜாவின் கருத்துரிமையை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்? ராஜாவின் கருத்துக்களோடு முரண்படுபவர்களுக்கு அவரது இசையை ரசிக்காமல் கடத்துப் போகிற உரிமை மட்டுமே உண்டு என சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சோ.தர்மன்
சோ.தர்மன்

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். இதில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டி எழுதியது கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. வலதுசாரி சிந்தனையாளர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில் இடதுசாரி, திராவிடச் சிந்தனையாளர்கள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், இளையராஜா விவகாரத்தில் தன் கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சோ.தர்மன் இன்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

“ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதியதற்காக இசைஞானி இளையராஜாவை மோசமான முறையில் விமர்சித்து எழுதப்படும் விமர்சனங்களைப் பார்க்கிறேன். இந்த மோசமான விமர்சனங்களுக்குக் காரணம், தன்னை சந்தோஷப்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கவும், தான் மனச்சோர்வடையும்போது அதிலிருந்து தன்னை மீட்கவும் பாடல்களை உருவாக்கித் தரும் ஒரு இசையமைப்பாளராக மட்டுமே இளையராஜாவைப் பார்த்தவர்களின் புலம்பல்கள். இப்படிப்பட்டவர்களால்தான் அவருடைய இன்னொரு முகத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஒரு கலைஞனை, ஒரு படைப்பாளியை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து ரசித்தவர்கள்தான் இன்று அவருடைய சாதியைக்கூட விமர்சித்து பதிவிடுகிறார்கள். நீங்கள் ஆராதிக்கிற, நீங்கள் வழிபடுகின்ற, நீங்கள் கை தட்டி விசிலடிக்கின்ற ஒரு கூட்டத்தோடு ஒரு கலைஞன் சேராமல் மாறுபடுகிற, கருத்துச் சொல்கின்ற உரிமையை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்? அவருடைய கருத்தைச் சொல்லவும், பேசவும், எழுதவும் முழுச் சுதந்திரம் அவருக்குண்டு.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு கலைஞனின் அகந்தை என்பது அனைத்தையும் கடந்தது, எதையும் இறைஞ்சி நிற்கும் மனநிலையற்றது. அதிகாரத்தை விமர்சிப்பது,லாப நோக்கமற்றது. அந்த அகந்தையிலிருந்து வெளிவருவதுதான் உன்னத படைப்புக்கள். இசைஞானியின் இசையும் அவருடைய கருத்துக்களும் அப்படிப்பட்டதே! மகாகவி பாரதி எட்டயபுரம் மன்னரை நிராகரித்த பேரகந்தை தான் அவனுடைய கவிதைகள், பேச்சுக்கள், துணிச்சல்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரத்தின் ஆதரவில் இருப்பவர்கள், அதிகாரத்திற்குத் துதி பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒருக்காலும் படைப்பாளியாகவோ, கலைஞனாகவோ ஆக முடியாது. இட்டுக் கட்டிய அப்படிப்பட்டவர்களின் புகழை காலம் அழிக்கும் என்பதுதான் வரலாறு. ராஜா தன் உழைப்பாலும் ஞானத்தாலும் மட்டுமே உன்னத நிலையை அடைந்த சுயம்புவான கலைஞன்.

இறுதியாக ஒன்று! இளையராஜா விருது வாங்குவதற்காகவே இப்படி எழுதியிருக்கிறார் என்பது கீழ்த்தரமான விமர்சனம். இளையராஜா ‘பாரத ரத்னா’ விருது பெறத் தகுதியான கலைஞன் என்பதை மனச்சாட்சியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ராஜாவின் கருத்துக்களோடு முரண்படுபவர்களுக்கு அவருடைய இசையை ரசிக்காமல் கடந்து போகிற உரிமை மட்டுமே உண்டு” எனப் பதிவிட்டுள்ளார் சோ.தர்மன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in