8 ஆண்டுகள் கழித்து வேலை மறுப்பு: இன்ஸ்டாகிராமில் வைரலான பதிவு!

8 ஆண்டுகள் கழித்து வேலை மறுப்பு: இன்ஸ்டாகிராமில் வைரலான பதிவு!
ஜோ ஜான்சன்

வேலைக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. கிட்டத்தட்ட எல்லோருமே ஒரு முறையேனும் வேலை தொடர்பாக நிராகரிப்பை எதிர்கொண்டிருப்போம். ஆனால், “உங்களுக்கு வேலை தர விருப்பமில்லை” என்று, விண்ணப்பித்து 8 ஆண்டுகள் கழித்து பதில் அனுப்புவதெல்லாம் அநியாயம்.

பிரபல வேலைவாய்ப்பு தளமான ‘லிங்க்ட் இன்’ மூலமாக, இந்த தகவல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ஜான்சன் என்ற பெண்ணுக்கு நேற்று (அக்.19) கிடைத்தது. 2013 ஜூலை 16 அன்று, ”அன்பு ஐயா/ அம்மா, உங்கள் நிறுவனத்தில் தற்போது வேலையிடம் காலியாக இருப்பின் அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்” என்று, கேன்டர்பரி நகரத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றுக்கு லிங்க்ட் இன் மூகமாக ஜோ கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு எந்த பதிலும் வராததால், ’காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடீ!’ என்று முடிவெடுத்தவர், சுயதொழில் செய்யத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு வேலை நிராகரிப்பு பதில் வந்துசேர்ந்தது. ஒரு பக்கம் கடுப்பு, இன்னொரு பக்கம் சிரிப்பு என இன்ஸ்டாகிராமில் நடந்த கதையை ஜோ பதிவிட்டார்.

தான் நடத்திவரும் அழகு சாதன நிறுவனத்தின் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே, வேலை நிராகரிப்பு பதிவை பதிவேற்றியதுதான் ஹைலைட். கூடவே “கேலிக்கூத்தாக இருக்கிறது! 2013-ல் வேலை கிடைக்குமா என நான் விசாரித்ததற்கு, லிங்க்ட் இன் தளத்தில் இப்போது நோட்டிஃபிகேஷன், ‘விருப்பமில்லை’ என்று வந்துள்ளது... ஹாஹாஹா. பதிலே சொல்லாமல் இருப்பதற்கு இப்படி சொன்னதும் நல்லதே. அது அது எப்படி நடக்கனுமோ அப்படியே நடப்பதில் மகிழ்ச்சி” என்றும் எழுதியிருந்தார் ஜோ.

இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகள் தாமதமாக பதிலளித்தது மட்டுமில்லாமல், கொஞ்சமும் கரிசனம் இன்றி ’வேலை தர விருப்பமில்லை!’ என்று அதிகாரத்துடன் அனுப்பிய பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதேபோல, நிறுவனங்களையும் வேலை தேடுபவர்களையும் இணையத்தில் இணைக்கும் மிகப் பெரிய பாலமாக லிங்க்ட் இன் இணையதளம் திகழ்ந்து வருகிறது. இன்றைய தேதியில் 200 நாடுகளைச் சேர்ந்த 74 கோடி உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இதன் வழியே நிச்சயமாக வேலை கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையை இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிறுவனங்களின் பொறுப்பற்றதன்மையை கேள்வி கேட்பது யார் என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in