`அதிகாரிகளை உருவாக்கிய பள்ளி இப்படி மூடி கிடக்குதே?'‍- கண்கலங்கும் முன்னாள் மாணவர்

`அதிகாரிகளை உருவாக்கிய பள்ளி இப்படி மூடி கிடக்குதே?'‍- கண்கலங்கும் முன்னாள் மாணவர்
மூடப்பட்டு இருக்கும் அந்த பள்ளிக்கூடம்

எல்லோருக்குமே தான் படித்த ஆரம்பப்பள்ளி என்றால் அப்படி ஒரு பாசம் ஏற்படுவது இயல்புதான். நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் அப்படிப்பட்ட பாசத்தால் தான் படித்த ஆரம்பப் பள்ளி மூடப்பட்டு கிடப்பதை கண்டு வேதனையோடு தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரது பால்ய கால நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் அந்த பள்ளி மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வியுடனான அவரது அந்த பதிவு...

சி.காளிதாசன்

VIII-A, திரு அரங்கராஜன் நடுநிலைப்பள்ளி கழுக்காணிமுட்டம், மயிலாடுதுறை

இது தான் எங்களின் முதல் முகவரி.

ஒன்றாம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை A கிளாஸ் B கிளாஸ் என்ற பிரிவு இருக்கும். கிட்டதட்ட 1000 பேருக்கு மேல் கல்வி கற்க ஆரவாரத்துடன் கூடிக் கலையும் காலமது...

எங்கள் பள்ளியில் ஒருத்தன் பெயில் ஆனா வேற எந்த பள்ளியில போயும் பாஸ் ஆக மாட்டான் என நக்கல் செய்தவர்கள் உண்டு. பள்ளியை சுற்றி மிகப்பெரிய விளையாட்டு மைதானம்!

விளையாட்டு மைதானத்திற்குள் அழகிய அடர்ந்த நிழல்தரும் மரங்கள்!

மரங்களுக்கு கீழ் தான் வகுப்பு நடைபெறும். காலையிலும், மாலையிலும் பிரேயர் கட்டாயம் உண்டு.

கழுக்காணிமுட்டம், அப்பங்குளம் வேப்பங்குளம், காமராஜர் காலனி, இராதாநல்லூர், பிள்ளாலி, கோட்டூர், ஆலங்குடி, சாக்கியம்பள்ளி, பல்லவராயன்பேட்டை, நீடூர், திருஇந்தளூர் என பல கிராமங்களில் இருந்து நடந்தே மஞ்சப்பையையும், நரம்பு பையையும் மாட்டிக்கொண்டு நண்பர்களோடு பேசிக்கொண்டே நடந்தே வந்த நினைவுகள். அப்போது எங்களுக்குள் எந்தவித சாதிய பாகுபாடும் இல்லையே!!

அனைத்து ஆசிரியர்களும் தகுதியான ஆசிரியர்களே அனைவருக்கும் பட்ட பெயர் உண்டு. கண்ணன் (பெரியசார்)

தமிழய்யா, பாலுசார், டில்லிசார், ராமம் போட்டசார், சோழம்பேட்டைசார்,

வாண்டகைசார், அறிவியல்சார்,

பகவான்சார், செட்டியார் சார், தோட்டசார், கலியபெருமாள்சார்

கண்ணன் சார்..,

தமிழன் காளிதாசன்
தமிழன் காளிதாசன்

சாரதா டீச்சர், இந்திரா டீச்சர்

மலர்விழி டீச்சர், ஞானாம்பாள் டீச்சர்

உமா டீச்சர் என அனைவரும் எங்களை தொட்டு வளர்த்து படிக்க வைத்தவர்களே!! மறந்து போகவில்லை. சத்துணவு டீச்சர்,

சமையலர் குஜிலி அக்கா, இன்றுவரை அந்த பள்ளிக் கூடத்தின் சாம்பார் சோறுக்கு எங்களுக்கு ஈடு இணையே இல்லை. மாசத்தில் ஒருநாள் இட்லி தோசை கட்டி பள்ளிக் கூடத்துக்கு எடுத்து போவதை பெருமையாக கருதிய நாட்கள்

மறக்க முடியவில்லை...

மாமரம் புலியமரத்தில் கல் விட்டு அடித்தால் துரத்தி வந்து பிடிக்கும் அப்பங்குளம் அப்பு. அந்த அப்புவை கல்லால் அடித்து விட்டு ஓடிய நாட்கள் மறக்குமோ!! எதுத்த ஆத்தா கடை வத்தல், அக்கா கடை மாங்கா, வெள்ளரி பிஞ்சி, கடன் கேட்டு வாங்கி தின்னுட்டு கொல்ல வழியா மறைஞ்சி ஓடுனது மறக்க முடியுமா?

மிகப்பெரிய கல்வியாளர்கள்

ஆன்றோர்கள், சான்றோர்கள், அரசு அதிகாரிகள் என உருவாக்கிய பள்ளி இப்போ மூடிக் கிடக்கிறது, புல் முளைத்து காடு மண்டி கிடக்கிறது

பூட்டிய பள்ளியை கடக்கும்போது கண்ணீர் வருகிறது.

தருமத்துக்காக தொடங்கிய பள்ளி, அதன் உரிமையாளர்களின் சொந்த பிரச்சினையால், சொத்து பிரச்சினையால் மூடப்பட்டுள்ளது.

இருவரின் போட்டியால் மூடப்பட்ட பள்ளி மீண்டும் திறக்காதோ என்ற ஏக்கத்துடன்

முன்னாள் மாணவன்

தமிழன் காளிதாசன்

நாம் தமிழர் கட்சி

மயிலாடுதுறை

Related Stories

No stories found.