யார் இந்த அன்வர் ராஜா?

யார் இந்த அன்வர் ராஜா?

அன்வர் ராஜா. அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவர். கடந்த சில மாதங்களாக அதிமுகவில் நிலவிக்கொண்டிருக்கும் சர்ச்சைகளின் மையப்புள்ளி. இன்று அதிமுகவிலிருந்து திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

யார் இந்த அன்வர் ராஜா?

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. அவருக்கு, 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் முதன்முறையாக வாய்ப்பளித்தார் எம்ஜிஆர். அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த தேர்தல் அதுதான். திமுக ஆதரவு அலை வீசிய அந்த உள்ளாட்சித் தேர்தலில், மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் அன்வர் ராஜா.

பின்னர், மதுரையில் நடந்த எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்துப் பேசவைத்த எம்ஜிஆர், அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த குழுக்களுள் ஒன்றான 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவையும் சேர்த்துக்கொண்டார். அவர்களில் 13 பேர் அமைச்சர்கள். அமைச்சர்கள் அல்லாத இருவர், அன்வர் ராஜாவும் ஜெயலலிதாவும் மட்டுமே.

எம்ஜிஆரின் மறைவுப் பிறகு அதிமுக உடைந்தபோது ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்ற அன்வர் ராஜா, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் சேர்ந்துகொண்டார். அந்த நாள் தொடங்கி, வென்றாலும் தோற்றாலும் அதிமுகவே என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் அன்வர் ராஜா. அதிமுகவில் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்து மக்களின் பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜாவுக்கு, 2001 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது. தொழிலாளர் நலத் துறை அமைச்சராகச் செயல்பட்டார். அப்போது அமைச்சரவையை அடிக்கடி மாற்றுவது ஜெயலலிதாவின் பாணி. அதன்காரணமாக திடீரென அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, பிறகு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி பலத்த விமர்சனங்களைச் சந்தித்த காலகட்டத்தில், பாஜகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களுள் ஒருவராக அன்வர் ராஜா இருந்தார்.

குறிப்பாக, முத்தலாக் மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்தபோது அதை மக்களவையில் ஆதரித்துப் பேசினார் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார். அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய போது, ரவீந்திரநாத்தின் நிலைப்பாடு அதிமுகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல என்று சொன்ன அன்வர் ராஜா, இளம் எம்பியான ரவீந்திரநாத் அவசரத்தில் வாய்தவறி ஆதரவளித்துவிட்டாரே தவிர, அதிமுகவின் நிலைப்பாடு முத்தலாக் மசோதாவுக்கு எதிரானது என்று அழுத்தந்திருத்தமாகப் பேசினார். ஒருகட்டத்தில், கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான முடிவை எடுத்த ரவீந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அன்வர் ராஜா. ஆனால், அப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனாலும் அதிமுகவிலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, திடீரென அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்றார். சசிகலாவுக்கு ஆதரவான வார்த்தைகளையும் வெளிப்படுத்தினார். அந்தச் சமயத்தில்தான், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விளித்து யாரோ ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா பேசியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாகவும், அன்வர் ராஜாவைத் தாக்கப் பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்திகளில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்று சொன்ன அன்வர் ராஜா, தனக்கு சசிகலா எப்போதுமே சின்னம்மாதான் என்றும் அவரது கால்களில் விழுந்துகிடந்தவர்கள்தானே இன்றுள்ள அதிமுக தலைவர்கள் அத்தனை பேரும் என்றும் பேசி பரபரப்பைக் கிளப்பினார்.

அன்வர் ராஜாவின் சமீபத்திய நகர்வுகளை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் எப்படி அணுகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தநிலையில், தற்போது அன்வர் ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறது அதிமுக தலைமை.

இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அதிமுக தொடங்கப்பட்ட 1972 முதல் தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்துவரக்கூடிய மூத்த உறுப்பினர்களுக்கு, அதிமுக பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்போவதாக அதிமுக அறிவித்திருந்தது. அந்த மூத்த அதிமுக உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்தே தற்போது நீக்கப்பட்டிருப்பது வியப்பையும் வினாவையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in