பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கலாமே?

பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கலாமே?

கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. முதல் அலை பெரிதும் பீதியைக் கிளப்பியது என்றால், 2-ம் அலை அதைவிடப் பெரிய பீதியைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்ற ஊகங்கள் பரவி வேறு வகையான பீதியைக் கிளப்பின. இப்போது உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தச் சூழலில், சிறார்களுக்கான பள்ளிகளைத் திறக்கலாமா வேண்டாமா? அலசுவோம்.

3-வது அலை வருமா வராதா என்பது குறித்து தெளிவாக யாரும் சொல்ல முடியாது. செப்டம்பர்-அக்டோபரில் வரும் என்றார்கள். இப்போது நவம்பரில் வரக்கூடும் என்கிறார்கள். அப்படியே 3-வது அலை வந்தாலும், அதன் பாதிப்பு அதிகம் இருக்குமா? இருக்காது என்றுதான் தோன்றுகிறது. எப்படி என்று பார்ப்போம்.

சீரோ-பிரிவலன்ஸ்

இந்திய மருத்துவ ஆய்வுக் குழு (Indian Council of Medical Research) ஐசிஎம்ஆர் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தியது. அதன் கணக்கெடுப்புகளில், குழந்தைகள் மத்தியிலும் சீரோ-பிரிவலன்ஸ் (sero-prevalence) அதிகமாக இருக்கிறது என்று கண்டறிந்தது. seroprevalence என்றால் என்ன? ஒரு நபர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால், அவருடைய உடலில் நோயெதிர்ப்புக் கூறுகள் உருவாகியிருக்கும். அதை ஆன்டிபாடி என்கிறோம். அவ்வாறு ஆன்டிபாடி இருந்தால், அது sero-positive. மேற்கண்ட seroprevalence கணக்கெடுப்பு என்பது, மக்கள் தொகையில் எத்தனை பேரிடம் கோவிட் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடி இருக்கிறது என்பதைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

ஜூன் மாத மதிப்பீட்டின்படி, தெற்கு டெல்லி பகுதியில் 74.7 சதவீதம் குழந்தைகளிடம் sero-positivity இருந்திருக்கிறது. கோரக்பூர் பகுதியில் 2-18 வயதுப் பிரிவினர் மத்தியில் 87.9 சதவீதம் பேரிடமும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் 90.3 சதவீதம் பேரிடமும் seroprevalence இருந்திருக்கிறது. இப்போது அனைத்திந்திய அளவில் பார்க்கையில் 6-9 வயதுப் பிரிவினரிடம் 57 சதவீதமும், 10-17 வயதுப் பிரிவினரிடம் 61.6சதவீதமும் seroprevalence இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, கோவிட் தடுப்பூசி போடாமலே குழந்தைகள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது. ஜூலை மாதக் கணக்கின்படி, மூன்றில் இரண்டு பகுதி மக்களிடம் (சில மாநிலங்களில் 75 சதவீதம்) கோவிட் நோயெதிர்ப்பு சக்தி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட எல்லாருமே மறந்துவிட்ட மக்கள்திரள் நோயெதிர்ப்பு சக்தி (herd immunity) உருவாகியிருக்கிறது என்று கருத இடமிருக்கிறது.

எத்தனை சதவீதம்பேர் கல்வியிலிருந்தே விலகிவிடுவார்கள் என்பது இன்னும் தெரியாது. ஏற்கெனவே, கணிசமான மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். திருப்பூர் போன்ற தொழில் துறை நகரங்களில் சம்பாதிக்கப் போய்விட்டார்கள்.

கல்வியிலிருந்து விலகத் தொடங்கியிருக்கும் குழந்தைகள்

எல்லா மாநிலங்களிலும் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தொற்று எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. தொற்றுக்கு ஆளானவர்களின் இறப்பு எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இச்சூழலில், 3-வது அலை வரக்கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் பள்ளிகளை இனியும் மூடி வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதற்கும் ஆதாரம் ஏதுமில்லை. சொல்லப்போனால், முதல் 2 அலைகளின்போதும் குழந்தைகளைக் கரோனா தாக்கியிருக்கிறது, ஆனால் பாதிப்பு அதிகமில்லை என்பதைத்தான் மேலே சொன்ன புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒன்றரை ஆண்டுகளாகக் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் முடங்கியிருக்கிறார்கள். தேர்வுகள் இல்லாமல் மேல் வகுப்புகளுக்குத் ‘தூக்கிப் போடப்’பட்டிருக்கிறார்கள். கல்வி-விளையாட்டு-கலந்துரையாடல்களில் பங்கேற்காமல் தனிமைப்பட்டுவிட்டார்கள். எத்தனை சதவீதம்பேர் கல்வியிலிருந்தே விலகிவிடுவார்கள் என்பது இன்னும் தெரியாது. ஏற்கெனவே கணிசமான மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். திருப்பூர் போன்ற தொழில் துறை நகரங்களில் சம்பாதிக்கப் போய்விட்டார்கள். அவ்வாறு கல்வியிலிருந்து துண்டிக்கப்பட இருப்பவர்கள் - கல்வி வாய்ப்பை இழக்கப் போகிறவர்கள் - நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினராக இருக்க மாட்டார்கள். கிராமப்புறத்தினர், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ஏதேனும் சிறுசிறு வேலைகளுக்குப் போய் சம்பாதிக்கப் பழகிவிட்டவர்களுக்கு காசுப் புழக்கம் என்னும் ருசி பழகிவிடும், அப்புறம் கல்வியில் நாட்டம் போய் விடும்.

வழக்கத்திலிருந்து மாறிய மாணவர்கள்

அது மட்டுமின்றி, ஆன்லைன் மூலம் படித்தாலும், குழந்தைகளின் கற்றல் திறன் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எழுத்து, பேச்சு, மனனம் செய்தல் எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் இல்லாமல் போனதால் வாழ்க்கை முறை மாறிவிட்டது. காலையில் நேரத்துக்கு விழித்தெழுகிற வழக்கம் போய்விட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கு போனில் வருகையைத் தெரிவித்துவிட்டு விளையாடப் போய்விடுகிறார்கள். மதிய நேரத்தில் உறங்கப் பழகிவிட்டார்கள். உணவுப் பழக்கம் மாறிவிட்டது. போனில் அல்லது லேப்டாப்பில் மணிக்கணக்காக நேரம் செலவழிப்பதால் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. இதுபோல பல பிரச்சினைகள் உள்ளன.

எனவே, பள்ளிகளை அனைத்து வகுப்பினருக்கும் திறப்பது குறித்து அரசுகள் யோசிக்க வேண்டும். பள்ளிகளை இனியும் மூடி வைத்திருக்க வேண்டியதில்லை, திறக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சௌம்யா சுவாமிநாதன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. அதுதவிர, குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து வருகிறது என்று பல மாதங்களாகச் சொல்லப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு, கரோனா தடுப்பூசி ஆய்வுகள் முடிவதற்கு முன்பே ஆகஸ்ட் 15-க்கு கரோனா தடுப்பூசியை ஆரம்பித்துவிடலாம் என்றெல்லாம் திட்டமிட்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து விஷயம் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

அண்மைச் செய்திகளின்படி, Zydus Cadila தயாரித்த ZyCoV-D என்னும் மருந்துக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இது தடுப்பூசி அல்ல, வாய்வழி மருந்து. எனவே குழந்தைகளுக்குக் கொடுப்பதும் எளிது. மூன்று டோஸ்களாகத் தரப்பட இருக்கிறது. Cadila Healthcare Ltd எனும் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.

இந்தத் தடுப்பு மருந்து விநியோகத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், ஒரே நிறுவனம் தயாரிப்பதற்குப் பதிலாக பல நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்கி, உற்பத்தியை அதிகரித்து, குறைந்த காலத்தில் அதிக குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து போடத் திட்டமிட வேண்டும். அதுதான் சரியான வழியாக இருக்குமே தவிர, காலவரையின்றி பள்ளிகளை மூடி வைத்திருப்பது தீர்வாகாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in