தீபாவளி சிந்தனை: சிறுவியாபாரிகளின் வாழ்வில் தீபம் ஏற்றுவோம்!

தீபாவளி சிந்தனை:
சிறுவியாபாரிகளின் வாழ்வில் தீபம் ஏற்றுவோம்!
படம்: க.ஸ்ரீபரத்

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இப்படி ஒரு பதிவு எழுதியிருந்தார் - “இத்தனை ஆண்டுகள் ஃபேஸ்புக்கில் எழுதியதன் பயன் என்ன... ஒன்றுமே இல்லை, ஜீரோதான்.”

அது அவரது கருத்து. ஃபேஸ்புக்கினால் நான் திருந்தியிருக்கிறேன், பல பிரச்சினைகளில் என் புரிதல் மேம்பட்டிருக்கிறது, என்னால் பலருக்கும் பயன் கிடைத்திருக்கிறது என்று அவருடைய பதிவில் பதில்கள் தந்தேன். சமூகம் என்பது உங்களையும் என்னையும் சேர்த்ததுதான். நம்மில் ஏற்படும் மாற்றமும் சமூக மாற்றம்தான் என்றேன்.

அப்போதுதான், 4 நாட்கள் முன்னால் மெமரீஸில் வந்த ஒரு பதிவின் விஷயத்தையும் சொல்ல நினைத்தேன். அந்தப் பதிவில் இருந்த ஒரு பத்தி இது:

“ஷாஜகான்.. எப்படி இருக்கீங்க? உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்த மெஸேஜ்... கஷ்டப்படுற குடும்பம் ஒண்ணு. தீபாவளி நேரத்துல அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். கோஆப்டெக்ஸ்லே வாங்கி, கையோடு கொடுத்துட்டும் வந்துட்டேன். நீங்க சொல்லலேன்னா, நான் வெளிக்கடையிலேதான் வாங்கியிருப்பேன். மிக்க நன்றி. இன்னிக்கு அந்தத் துணிகளைக் கொடுக்கும்போது கடவுளுக்கு அவ்வளவு நன்றி சொன்னேன்... நம்மை அவர் எவ்வளவு நல்லா வச்சிருக்கார்... கண்ணிலே தண்ணியோட, முகத்திலே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோட அவங்க அதை வாங்கிக் கண்ணிலே ஒத்திக்கிட்டபோது மனசு கனத்துப் போச்சுங்க.”

மேலே இருக்கிற தோழியின் செய்தி, இன்பாக்ஸில் வந்தது.

அதற்குச் சில நாட்களுக்கு முன்னால், தீபாவளியை ஒட்டி பதிவு எழுதியிருக்கிறேன். தீபாவளி நேரத்தில் பெரிய கடைகளுக்குப் போய் துணிகளை வாங்குவதைவிட, கோஆப்டெக்ஸ் அல்லது கைத்தறிக் கடைகளில் வாங்கினால் நெசவாளர்கள் பயன்பெறுவார்கள். நமக்காக மட்டும் வாங்காமல், அக்கம் பக்கத்தில் தேவை உள்ளவர்களைப் பார்த்து அவர்களுக்கும் வாங்கித் தரலாம் என்று அதில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவுக்கான எதிர்வினைதான் இது.

பதிவைப் பார்த்து தூண்டப்பட்டு செயலாற்றுகிறவர்கள் இவரைப்போல எத்தனையோ பேர் இருக்கலாம். ‘ஆமா... இவரு எழுதித்தான் எல்லாரும் திருந்தப் போறாங்களாக்கும்’ என்று நமட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களும் இருப்பார்கள். அவர்களையும் சேர்த்ததே சமூகம். எல்லாருக்கும் சேர்த்துத்தான் எழுதுகிறேன். நல்லதுன்னா ஏத்துக்குங்க, கெட்டதுன்னா விட்டுடுங்க!

கரோனா எல்லாருக்குமே பொருளாதார ரீதியாக அடி கொடுத்திருக்கிறது. நமக்கும் அடி விழுந்திருந்தாலும், நம்மைச் சுற்றிலும் நம்மிலும் பெரிய அடி வாங்கியவர்கள் இருக்கலாம். முடிந்தால் அவர்களுக்கும் உதவலாம்.

இதோ மீண்டும் தீபாவளி வருகிறது. பட்டாசுகள் வாங்குகிறோமோ இல்லையோ, புதுத்துணிகள் வாங்கப்போகிறோம். கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது துணிகள் வாங்கப்போகிறோம். நமக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காக வாங்கப்போகிறோம். கடைகளில் ஸ்வீட் வாங்கப்போகிறோம், வாங்கி மற்றவர்களுக்கு அனுப்பப்போகிறோம். ஆன்லைனில் ஆர்டர் போட்டு ஊர்களுக்கு டெலிவரி செய்ய வைக்கப்போகிறோம்.

இதையெல்லாம் செய்வதற்கு முன்னால் ஒரு நிமிடம் யோசிக்கலாம்.

பிராண்ட்களின் பின்னாலும், மிகப் பெரிய செயின் ஸ்டோர்களின் பின்னாலும்தான் போக வேண்டுமா? புடவைகள் முதல் சுடிதார்கள் வரை, கடலை மிட்டாய் முதல் முதல் முறுக்கு மிக்சர் வரை, சமையல் எண்ணெய் முதல் ஹேர் ஆயில் வரை, மஞ்சள் தூள் மிளகாய் தூள் முதல் ஊறுகாய் வரை... எத்தனையோ ஆயிரம்பேர் சிறுதொழில் செய்கிறார்கள். ஃபேஸ்புக்கிலேயே கரோனா நேரத்தில் நம்முடனேயே இருக்கிற பலநூறு பேர் சுயதொழில் ஆரம்பித்திருக்கிறார்கள். தரமான பொருட்களை, துல்லியமாக டெலிவரி செய்கிறார்கள். அவர்களிடம் வாங்கலாம், அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கலாம். பெரிய பெரிய துணிக்கடல்களில் நாம் வாங்காவிட்டால் அந்தக் கடைகளுக்கு நஷ்டம் ஏதும் ஆகிவிடாது. ஆனால் அக்கம்பக்கத்தில் இருக்கிற சின்ன கடைகளில் வாங்குவது அவர்களை உயிர்த்திருக்கச் செய்யும். சுயதொழில் செய்பவர்களிடம் வாங்குவது நட்பையும் வலுப்படுத்தும்.

கரோனா எல்லாருக்குமே பொருளாதார ரீதியாக அடி கொடுத்திருக்கிறது. நமக்கும் அடி விழுந்திருந்தாலும், நம்மைச் சுற்றிலும் நம்மிலும் பெரிய அடி வாங்கியவர்கள் இருக்கலாம். முடிந்தால் அவர்களுக்கும் உதவலாம்.

மடத்துக்குளம் போன்ற சின்னச் சின்ன ஊர்களிலும்கூட, பிரம்மாண்ட டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வந்துகொண்டிருக்கிற காலம் இது. அங்கே நாம் வாங்குவது நமக்குத் தேவையானவற்றை மட்டும் அல்ல. நம் கண்ணில் படுகின்ற பொருட்களையும் சேர்த்து வாங்குகிறோம். நம் கண்ணில் பட வேண்டும் என்பதற்காகவே அவை விரிக்கப்படுகின்றன. நாமாகப் போய் அந்த வலையில் விழுகிறோம்.

சின்ன மீன்கள் எல்லாம் விழுங்கப்பட்டு சுறாக்களும் திமிங்கலங்களும் மட்டுமே இருந்தால் நன்றாகவா இருக்கும்? சிறுதொழில்கள், சுயதொழில்களுக்கு ஆதரவளிப்போம், அவர்களை வாழவைப்போம்.

போகும் வழியெலாம் அன்பை விதைப்போம்

எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்!

- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர், ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in