வெறுப்பும் செருப்பும்: தமிழக அரசியலில் பாதுகை படும்பாடு!

வெறுப்பும் செருப்பும்: தமிழக அரசியலில் பாதுகை படும்பாடு!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையிலான ட்விட்டர் புகைச்சல் தற்போது எல்லை மீறியதாய் வெடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலான தரம் தாழ்ந்த விமர்சனங்கள், கண்ணியக் குறைவான வாதங்கள், தனிமனித தாக்குதல்கள் என சமூக ஊடக பதிவுகள் முகம் சுளிக்க வைக்கின்றன. செருப்பை முன்வைத்து தங்கள் வெறுப்பரசியலுக்கு கொடி பிடிக்கும் அரசியல்வாதிகளின் போக்கே இந்த வாரத்தின் சமூக வலைதளங்களின் சென்சேஷனாக மாறிப்போனது.

அதிரடி அண்ணாமலை

மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே தமிழக பாஜக வேறாக கூடு பாய்ந்திருக்கிறது. திராவிட மாடல் அரசியலை எதிர்த்து களமாடுவதன் பெயரில் அதே பாணியை கையிலெடுத்துள்ளார் அண்ணாமலை. ’இந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்னமும் தனது காக்கிச் சட்டை தொனியிலே அரசியலில் வலம் வருகிறார்’ என்ற அண்ணாமலைக்கு எதிரான விமர்சனங்களை நியாயப்படுத்தும் வகையிலே அவரது செயல்பாடும் அவ்வப்போது வெளிப்படுகிறது. அரசுத் துறைகளின் ஊழல்கள், அதிகார பீடங்களின் ஆதிக்கங்கள், அமைச்சர்களின் நிழல் நகர்வுகள் என பலவற்றையும் உடனுக்குடன் பொதுவெளியில் உடைத்துப் பேசுகிறார் அண்ணாமலை. அவர் விடுத்த சில குற்றச்சாட்டுகள் பூமராங்காகி மூக்குடைபட்ட போதும், அண்ணாமலையின் இந்த அஸ்திரங்கள் அவரது அரசியல் அனுபவத்தோடு ஒப்பிடுகையில் வியப்பூட்டுபவை.

அண்ணாமலை
அண்ணாமலைTwitter

ஆட்சியைப் பறிகொடுத்து மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் இடத்தை பிடிக்க முயலும் அண்ணாமலையின் வியூகம், அறிக்கை போர் என்றளவில் ஜெயிக்கவும் செய்கிறது. உட்கட்சி குடைச்சல்களால் அதிமுக துவண்டு போயிருப்பதும் தமிழக பாஜகவுக்கு பேருதவியாகி வருகிறது. இன்னொரு பக்கம் தமிழக பாஜகவில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகவும் மாநில அரசியலில் வேகம் காட்டி வருகிறார் அண்ணாமலை. அந்த வகையில் அவர் காட்டும் அதிரடி, கட்சியின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலையை தொண்டர்கள் கொண்டாடும் அளவுக்கு உயர்ந்தியிருக்கிறது. இப்படி எதிராளிகள் மற்றும் பங்காளிகளுடன் ஒரு சேர பலப்பிரயோகம் செய்து வருகிறார் அண்ணாமலை. அவரது துடிப்பும் வேகமும் தற்போது எல்லை மீறியிருப்பதுதான் தமிழக அரசியலில் சர்ச்சையை கூட்டியுள்ளன.

தேசியளவில் தெறிக்கவிடும் பிடிஆர்

கடந்த சில வாரங்களாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அனல் காட்டிவருகிறார் அண்ணாமலை. மதுரையில் அரங்கேறிய அமைச்சர் கார் மீதான காலணி வீச்சு இதன் மையமானது. அந்த ஒற்றைச் செருப்பு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ’சிண்ட்ரெல்லா’ கதையை நினைவூட்டினார் அமைச்சர். அதிலும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக தேசியக் கொடியை முன்னிறுத்தி நாடு தயாராகி வந்த தருணத்தில், அமைச்சரின் தேசியக் கொடி கட்டிய கார் மீதான பாஜவினரின் செருப்பு வீச்சு அவர்களுக்கு எதிராகவே திரும்பியது. அதற்கேற்ப கருத்துமோதல் சுக்கானை திமுக ஐடி விங் திறம்பட திருப்பியது. அன்றைய தினமே பாஜகவின் மதுரை மாநகர் மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் பாஜகவுக்கு குட்பை சொன்னதும் பாஜகவுக்கு எதிராக அவர் அளித்த பேட்டிகளும் அண்ணாமலையை வெறுப்பேற்றின.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசியலுக்கு அப்பாலும் பிடிஆரின் அரசியல் ஆகிருதி வளர்ந்ததும் தேசியளவில் பாஜகவின் கண்களை உறுத்தத் தொடங்கியது. தேசிய தொலைக்காட்சிகளில் பிடிஆர் அளித்த பேட்டிகள் வடக்கை உலுக்கின. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறை முடிவுகளை விமர்சித்தும், தமிழகத்தை வஞ்சிப்பதாக மத்திய அரசை தாக்கியும், தமிழக அரசின் செயல்பாடுகளுடன் மத்திய அரசை ஒப்பிட்டும் பிடிஆர் தொடுத்த விவாதங்கள் அங்கே அதிர்வலைகளை ஏற்படுத்தின.

நிதி மற்றும் பொருளாதார மேலாண்மையில் பிடிஆரின் சர்வதேச அனுபவமும், நெற்றியில் துலங்கும் மங்கல அடையாளங்களுடன் மேஜை மீது வீற்றிருந்த பெரியாருடன் திராவிட சித்தாந்தத்தை அவர் விளக்கிய விதமும் வடக்கிந்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. தனது கூரான வாதங்களால் நாடாளுமன்றத்தில் பாஜகவை சதா துவம்சம் செய்யும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியான மஹீவா மோத்ரா - பிடிஆர் இடையிலான ட்விட்டர் பாராட்டுகளும், பரஸ்பரம் பதிவுகளை ரீட்வீட் செய்துகொண்டதும்கூட இணையவெளியில் பாஜகவினரை வெறுப்பேற்றின.

ட்விட்டரில் பற்றிய தீ

இந்த சூழலில் ஊடகவியலாளர் கரண்தப்பாருக்கு பிடிஆர் அளித்த அண்மை பேட்டியை முன்வைத்து மீண்டும் இணையவுலகம் தீப்பிடித்தது. அதற்கடுத்த சில நாட்களிலேயே பிடிஆர் - அண்ணாமலை இடையிலான ட்விட்டர் யுத்தம் நேரடியாக வெடித்தது. கட்சி நிர்வாகியுடன் அண்ணாமலை பேசிய உரையாடல் ஒன்று இணையவெளியில் சுற்றுக்கு வந்ததும், அதற்கு முன்பின் முரணாக பொதுவெளியில் பதிலளித்து அண்ணாமலை குட்டுப்பட்டதும் நடந்தது. இதன் பின்னணியில் இணையத்தில் திமுக அணியை கட்டமைத்த பிடிஆர் இருப்பதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை தரப்பு, இணைய வழி பதிலடியின் பெயரில் சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தது.

அவற்றுக்கு தனது பாணியில் சுருக் நறுக் பதிவொன்றை ட்விட்டரில் வெளியிட்டார் பிடிஆர். அதன் தமிழாக்கம் அவரது முகநூல் பதிவிலும் வெளியானது. அண்ணாமலையின் பெயருக்கு பதிலாக ஆட்டுக்குட்டி எமோஜியை பதிவிட்டு, நான்கே பாயின்டுகள் மற்றும் அதன் கீழான குறிப்பில் அண்ணாமலை, எச்.ராஜா, தமிழக பாஜக ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக சதாய்க்கும் சாடலுடன் முடித்திருந்தார் பிடிஆர். இந்த பதிவு வெளியான ஒரு மணி நேரத்தில் அண்ணாமலையின் பதிலடி ட்விட்டரில் வெளியானது. ’தாத்தா மற்றும் தந்தையின் பிரபல்யத்தில் அரசியல் செய்பவர்’ என்பதில் தொடங்கிய அண்ணாமலையின் 4 பதிவுகளில் கடைசியாக வெளியானது தரத்திலும் கடையில் நின்றது. ’என்னுடைய செருப்புக்குகூட நீங்கள் பெறுமானம் இல்லை’ என்ற பிடிஆருக்கு எதிரான அண்ணாமலையின் பதிவு தமிழக அரசியலின் போக்கை விவாதங்களுக்கு ஆட்படுத்தியது.

வெறுப்பரசியலின் புதிய அத்தியாயம்

சில மாதங்களுக்கு முன்னதாக பொதுக்கூட்ட மேடையொன்றில் திமுகவுக்கு எதிராக, அணிந்திருந்த காலணியை உயர்த்திக் காட்டினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். அப்போது அதனை நியாயப்படுத்திய சீமானே, ’அநாகரிகம் கூடாது. தம்பி அண்ணாமலை அடக்கி வாசிக்க வேண்டும்’ என்று தற்போது கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு அண்ணாமலையின் பதிவு எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது. ஆனால், தனது தரப்பை நியாயப்படுத்தும் வகையில் சுடச்சுட செய்தியாளர் சந்திப்பை எதிர்கொண்ட அண்ணாமலை, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவதற்கு நானொன்றும் ஏயேசு கிறிஸ்து அல்ல’ என்று சீறினார்.

பிடிஆர் வாகனம் மீது வீசப்பட்ட காலணி
பிடிஆர் வாகனம் மீது வீசப்பட்ட காலணிTwitter

தேசியம், தெய்வீகம் என்ற பாஜகவின் நாடு தழுவிய வியூகம் தமிழகத்தில் எடுபடாததில், தொண்டர்களின் உணர்வுகளை ஆட்டுவிக்கும் வெறுப்பரசியலின் புதிய அத்தியாயமாய் செருப்பு அரசியலுக்கு பாஜக தாழ்ந்திருப்பதாக உபிக்கள் தாக்கி வருகிறார்கள். நவீன மாற்றங்களுக்கு ஏற்ப அரசியல் விமர்சனங்களும், கருத்து மோதல்களும் மாறுதல் பெற்று வருகையில், அரசியல்வாதிகள் இன்னமும் செருப்பை முன்வைத்து தங்கள் இழிவை வெளிப்படுத்துவதும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. ராமன் பாதுகையை வைத்து நாட்டை ஆண்ட பரதனின் புகழால் பாரதத்தின் பெருமை பேசுவோரும், வெறுப்பின் பெயரிலான செருப்பு அரசியலை முன்னெடுப்பது சரிதானா என்று நடுநிலை பதிவர்கள் இணையத்தில் புலம்பி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in