விஜய் சேதுபதியை வெறுப்பேற்றும் நெட்டிசன்கள்: ட்விட்டர் மறுமொழிக்கு பூட்டு!

விஜய் சேதுபதியை வெறுப்பேற்றும் நெட்டிசன்கள்: ட்விட்டர் மறுமொழிக்கு பூட்டு!

டிஎஸ்பி திரைப்படத்தை முன்வைத்து வெறுப்பேற்றும் நெட்டிசன்களை சமாளிக்க, தனது அண்மை இடுகைகளின் மறுமொழிக்கு ட்விட்டரில் பூட்டு இட்டுள்ளார் விஜய் சேதுபதி.

பொன்ராம் இயக்கத்தில் அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், இளவரசு, சிங்கம்புலி உள்ளிட்டோர் உடன் நடிக்க, மீண்டும் போலீஸ் உடுப்புடன் விஜய் சேதுபதி தோன்றிய திரைப்படம் டிஎஸ்பி. படத்தின் ஒன்லைன் சுவாரசியமாக இருந்தபோதும், புதிய மொந்தையில் பழைய கள்ளாக திரைக்கதை துவண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் வெற்றிப்படங்கள் தந்திருக்கும் பொன்ராம் உடனான கூட்டணி விஜய் சேதுபதியிடம் ஏனோ பலிக்கவில்லை. படம் குறித்த முதல் சுற்று விமர்சனங்கள் எதிர்மறையாகவே ஒலித்து வருகின்றன.

ரஜினி, விஜய், கமல் என பிரதான நாயகர்களுக்கு வில்லனாக தோன்றியதில் பெரும் வரவேற்பு பெற்ற விஜய் சேதுபதி, மீண்டும் நாயகனாக நடித்த டிஎஸ்பி அடிசறுக்கியிருக்கிறது. டிஎஸ்பி புரமோஷனுக்காக விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகள் வெளியாகி வந்த சூழலில் அவை கடந்த சில தினங்களாக நிறுத்தப்பட்டிருக்கிறன. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் விமர்சனங்கள் வரம்பு மீறவே, விஜய் சேதுபதி பக்கத்தின் அண்மை இடுகைகளில் எவரும் மறுமொழி பதிய முடியாதபடி பூட்டு போடப்பட்டிருக்கிறது.

ஆனபோதும், விஜய் சேதுபதியின் பழைய பதிவுகளாக தேடிச் சென்று நெட்டிசன்கள் தங்கள் சேட்டையை தொடர்கின்றனர். பட்டவர்த்தமான விமர்சனங்கள், நேரடி அறிவுரைகள், ஆளில்லா அரங்கின் புகைப்படங்கள் ஆகியவற்றை ரசிகர்கள் பதிந்து வருகின்றனர். இதையொட்டிய மீம்ஸ் பகிர்வுகளுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை. மொத்தத்தில், விஜய் சேதுபதி மீதான எதிர்பார்ப்புகளை டிஎஸ்பி பூர்த்தி செய்யவில்லை என்பதையே ரசிக மனநிலை எடுத்துக்காட்டுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in