வசீகர விஜய்: சமூக ஊடகங்களில் சிலாகிப்பு

வசீகர விஜய்: சமூக ஊடகங்களில் சிலாகிப்பு

பனையூரில் ரசிகர்களை சந்திக்க வந்த விஜய் குறித்தான சிலாகிப்புகள் இன்றைய தினம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

உள்ளாட்சி தேர்தல் வெற்றிகள், விஜய் திரைப்படம் தெலுங்கு வெளியீட்டில் சிக்கல், ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பேராவா உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, ரசிகர்களுடன் நேரடி சந்திப்பு படலத்தை தொடர்ந்து வருகிறார் நடிகர் விஜய். கரோனா பரவல் காரணமாக ரசிகர்களை சந்திப்பதில் விழுந்த இடைவெளியை தூர்க்கும் வகையிலும், விஜய்யின் தற்போதைய ரசிகர்களுடனான சந்திப்பு நடந்து வருகிறது.

பனையூர் அலுவலகத்தில் வைத்து முதல் கட்டமாக புதுக்கோட்டை, நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அடுத்த கட்டமாக இன்றைய(டிச.13) தினம் திண்டுக்கல், அரியலூர், கடலூர், செங்கல்பட்டு மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்களுடன் நேரடி சந்திப்பு, பிரியாணி பரிமாறல், புகைப்படம் எடுத்துக்கொள்வது, நிர்வாகிகளுடன் அளவளாவல் என அங்கே நேரம் கழித்தார் விஜய்.

ரசிகர்களுடனான விஜய்யின் சந்திப்பை முன்வைத்து பனையூர் மட்டுமன்றி, சமூக ஊடகங்களும் திமிலோகப்பட்டு வருகின்றன. நரை பாவிய குறுந்தாடி, கழுத்திலும் நெற்றியிலும் புரளும் கேசம்(விக்?), எளிமையான கருப்பு உடுப்பு ஆகியவற்றோடு தனக்கே உரிய வசீக புன்னகையோடு தென்பட்ட விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

ரசிகர்களுடனான புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வில், ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் தடுமாறவே, அவரை அலேக்காக தூக்கியபடி காட்சியளிக்கும் விஜய் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in