பழிதீர்க்கும் அழகிய விழிகள்: 'பொன்னியின் செல்வனில்' மிரட்டப்போகும் நந்தினி!

பழிதீர்க்கும் அழகிய விழிகள்:  'பொன்னியின் செல்வனில்' மிரட்டப்போகும் நந்தினி!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பினை டிவிட்டரில் வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளரான மெட்ராஸ் டாக்கீஸ், "பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்!" என ஐஸ்வர்யா ராயை அட்டகாசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் மிகவும் அழுத்தமான, அழகான கதாப்பாத்திரம் நந்தினியினுடையது. இதில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதால் இப்போதே இந்த கேரக்டர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில், சோழ பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்ய கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமும், வந்தியத்தேவன் வேடத்தில் நடிகர் கார்த்தியும் நடிக்கும் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in