வலிமை சேர்க்கும் வன்னி அரசு!

சமூக ஊடக உடலோம்பலில் புது வரவு
வலிமை சேர்க்கும் வன்னி அரசு!

உடற்பயிற்சி வீடியோக்களை பொதுவெளியில் பகிரும் அரசியல்வாதிகளின் பட்டியலில் அண்மை வரவாக விசிக துணை பொதுச் செயலாளரான வன்னி அரசும் இணைந்திருக்கிறார்.

கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கவும், தங்கள் கருத்துக்களை பொதுவில் சேர்க்கவும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பங்கெடுத்து வருகிறார்கள். தங்கள் மீதான நன்மதிப்பை உயர்த்தும் வகையிலும், கட்சியின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் வகையிலும் இவர்கள் புதுமையான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதுண்டு. அவற்றில் ஒன்றாக உடலோம்பலுக்கான பயிற்சிகள், தற்காப்பு கலைகள், மாரத்தான் ஓட்டங்கள் உள்ளிட்டவற்றை பிரமுகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது யோகாசனம், நடைப்பயிற்சி, தியானம், மயில்கள் பேணுதல் உள்ளிட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி கூடத்திலும், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சியையும் அடிக்கடி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்கே பயணப்பட்டாலும் காலைவேளையில் மெதுஓட்டம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கிமீ கணக்கில் நெடுந்தூரம் சைக்கிள் ஓட்டுவதுடன், வீட்டில் இருந்தபடி இளைஞர்களுக்கு அவசியமான உடற்பயிற்சிகளை வீடியோ வாயிலாக பயிற்றுவிக்கவும் செய்வார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

உடலோம்பலுக்கான இந்த பொதுவெளி பதிவுகள் விஐபிக்களை பின்தொடரும் இளம் தலைமுறையினருக்கு பெரும் உந்துதலாகவும் அமைகின்றன. இளைஞர்களையும் பொதுமக்களையும் அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிக்கு தூண்டுகோலாகவும் அமைகின்றன. அதே வேளையில் வசவாளர்கள் அதிகம் உலவும் சமூக ஊடகங்களில், இந்த உடலோம்பல் பதிவுகள் பகடிக்கும் ஆளாவதுண்டு. ஆனால் தங்கள் நல்ல நோக்கத்துக்காக அவற்றை விஐபிக்கள் பொருட்படுத்தாது கடந்து செல்கிறார்கள்.

நாம் தமிழர் சீமான்
நாம் தமிழர் சீமான்

பொதுவெளியில் அதிகம் கேலிக்கு ஆளாகும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைவருக்கும் முன்னோடியாக இந்த உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தவர். வசவாளர்களை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதற்கும் இவரே முன்மாதிரி. இப்படி அதிகரிக்கும் உடலோம்பல் பதிவுகளின் வரிசையில் அண்மை வரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசும் இணைந்திருக்கிறார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தங்கள் இயக்கத்தின் கருத்துக்களை பதிவிடுவது, தான் பங்கேற்றும் கூட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்வதுடன், அடிமட்டத் தொண்டர்களுக்கு நிகராக சமூக ஊடக சர்ச்சைகளிலும் களமிறங்குவதில் வன்னி அரசு கவனம் ஈர்த்து வருகிறார். இவர் நேற்றைய தினம்(டிச.2) வலிமை என்ற தலைப்பிட்டு தனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். பின்னணியில் சார்பட்டா பரம்பரை திரைப்பத்தின் ’நீயே ஒளி..’ பாடல் ஒலிக்க, கடற்கரையில் ஓட்டம், உடற்பயிற்சி கூடத்தில் பல்வேறு தேகப்பியாசங்கள் என தம் கட்டுகிறார் வன்னி அரசு. சமூக ஊடக மரபுப்படி வன்னி அரசு வீடியோவின் கீழ் வசவாளர்களும், வாழ்த்தாளர்களும் வழக்கம்போல கமெண்ட் இட்டு வருகின்றனர்.

அரசியில் கட்சிகளின் தலைவர்கள் வரிசையில் அடுத்த கட்டத்தில் இருப்போரும் இப்படி உடலோம்பலை காட்சிப்படுத்துவதும், கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு உத்வேகம் தருவதும் வரவேற்புக்குரிய மாற்றங்களாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in