ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தி பணமோசடி நடப்பது தொடர்பான வழக்கில், உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் அந்நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது .

ஃபேஸ்புக் தளத்தில் பயனர்களின் பாதுகாப்புக்கு அண்மைக்காலமாக பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. ஒருவரது அடையாளங்களை திருடி அவர் பெயரிலேயே புதிய கணக்கை ஆரம்பிப்பதும், நட்பு அழைப்புகள் விடுத்து பண மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு எதிராக உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய பதில் அளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுத்தது. ஆனால் உரிய பதில் அளிக்காததோடு, நீதிமன்றத்தின் நோட்டீஸையும் ஃபேஸ்புக் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. இதனால் நீதிபதிகள் விபின் சங்கி, ஆர்.சி.குல்பே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஃபேஸ்புக் நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்ததோடு அதற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் நேற்று(டிச.7) உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், பிப்.16-க்குள் பதிலளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு புதிய காலக்கெடுவும் விதித்தனர். முன்னதாக, ஃபேஸ்புக் தளத்தில் அதிகம் அரங்கேறும் அடையாளத் திருட்டு, பயனர்களின் புகைப்படங்களை ஆபசமாக சித்தரிப்பது, பணமோசடிக்கு உடந்தையாவது உள்ளிட்டவை குறித்து கேள்விகள் எழுப்பிய நீதிமன்றம், அவை தொடர்பான புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in