அஜித் ரசிகர்களை மிஞ்சும் அல்லு அர்ஜூன் விசிறிகள்

புஷ்பா-2 அப்டேட் அலப்பறைகள்
அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்

தங்கள் ’தல’யின் அடுத்த படத்துக்கான அப்டேட் கோருவதில் அஜித் ரசிகர்கள் ஜித்தர்கள். கரோனா முடக்க காலத்திலும் வலிமை திரைப்படத்துக்கான அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் நடத்திய அலப்பறைகளால் இணையம் திமிலோகப்பட்டது. ஆனால் தற்போது தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவரது அடுத்த படத்துக்கான அப்டேட் கேட்டு இணையம் மட்டுமன்றி நிஜ உலகிலும் போராட்ட களம் கண்டிருக்கிறார்கள்.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், டோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் இளசுகளை கட்டிப்போட்டிருப்பவர். கடந்த வருடம் இறுதியில் வெளியான இவரது புஷ்பா திரைப்படம் பான் இந்தியா வெற்றியை பெற்றதில் அல்லு அர்ஜுன் தனது திரைப்பயணத்தின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். அதற்கு வாய்ப்பளித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் அதே திரைப்படக்குழு முடிவு செய்தது. இவ்வாறாக ’புஷ்பா தி ரைஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘புஷ்பா தி ரூல்’ படத்துக்கு பூஜை போடப்பட்டது.

புஷ்பா-1 திரைப்படத்தை வெகுவாக கொண்டாடி அதன் வெற்றிக்கு வித்திட்ட அல்லு அர்ஜுன் ரசிகர்கள், புஷ்பா-2 திரைப்படம் குறிந்து அறிந்துகொள்ள ஆர்வமானார்கள். ஆனால் அல்லு அர்ஜூன் தொடங்கி, இயக்குநர் சுகுமார், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் என பலதரப்பிலும் நீடித்த மௌனமே நிலவுகிறது. இது அல்லு ரசிகர்கள் அல்லாட விட்டதில், முதல் கட்டமாக இணைய வழி போராட்டத்தை தொடங்கினார்கள்.

’வலிமை’ திரைப்படத்துக்கான அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள், சமூக ஊடகங்களில் உலவும் சர்வதேச பிரபலங்கள் பலரையும் டேக் செய்தது தற்போது டோலிவுட்டிலும் நடந்தது. இணையவெளி போராட்டத்தோடு நின்றுவிடாது நிஜ உலகுக்கும் களம் கண்டதில் அல்லு ரசிகர்கள் வித்தியாசம் காட்டி இருக்கிறார்கள். பல்வேறு ஊர்களில் பேனர் கட்டி, பூஜை நடத்தி, தேங்காய் உடைத்து, பச்சை குத்தி, கோஷமிட்டு.. பலவிதமாய் ‘அப்டேட் கோரும்’ போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்தார்கள்.

அப்போதும் புஷ்பா-2 படக்குழு அசைந்துகொடுக்காது போகவே, அடுத்த கட்டமாக போராட்ட களத்துக்கான பூகோள எல்லைகளை அகல விரித்திருக்கிறார்கள். கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா என தென்னகத்திலும், இந்தியாவுக்கு அப்பால் ஐக்கிய அரபு நாடுகளிலும் ஆர்ப்பாட்டம் செய்து அவை தொடர்பான களநிலவரங்களை சமூக ஊடகங்களில் பதிந்து வருகிறார்கள். இந்த வகையில் அஜித் ரசிகர்களை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மிஞ்சி விட்டதாகவும் பொதுவான திரைப்பட ரசிகக் கண்மணிகள் விதந்தோதி வருகிறார்கள்.

அப்டேட் அலப்பறைகளின் அடுத்தகட்டமாக அல்லு ரசிகர்கள் என்ன செய்வார்களோ என்று டோலிவுட் ‘அல்லு’ விட்டிருப்பதும் நிதர்சனம். ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறி வருவதில், புஷ்பா படக்குழுவின் நோக்கமும் ஒருவாறாக நிறைவேறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in