ட்விட்டர் தலைமை பதவியை துறக்கிறார் எலான் மஸ்க்?

எலானுக்கு எதிராக முடிந்த வாக்கெடுப்பு
ட்விட்டர் தலைமை பதவியை துறக்கிறார் எலான் மஸ்க்?

’ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் தான் தொடர்வதா வேண்டாமா’ என ட்விட்டர்வாசிகள் மத்தியில் எலான் மஸ்க் மேற்கொண்ட வாக்கெடுப்பு எதிர்பார்த்தது போலவே அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியது முதலே எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் அதிரடிகள் பலவும் ட்விட்டர் பயனர்களை எரிச்சலில் தள்ளி வருகிறது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதில், பணியில் நீடிக்கும் இதர ஊழியர்களையும் உளைச்சலில் ஆழ்த்தியுள்ளார் எலான் மஸ்க்.

இது தவிர அங்கீகார கணக்குகளுக்கு கட்டண நடைமுறை, நீக்கப்பட்ட பிரபல ’பிராப்ளம்’ பேர்வழிகளின் கணக்குகளுக்கு புத்துயிர், அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கியது உட்பட கருத்துரிமைக்கு தொடரும் வாய்ப்பூட்டு, இதர சமூக ஊடகங்களின் இணைப்புகளை ட்விட்டரில் பகிர தடை அறிவித்தது.. என அந்த அதிருப்தி பட்டியல் வெகுவாய் நீள்கிறது.

ட்விட்டர்வாசிகள் தங்கள் அதிருப்தியை நேரடியாகவும், எலான் மஸ்க் பாணியில் பகடியாகவும் பலமுறை ட்விட்டர் வாயிலாகவே தெரிவித்து வருகின்றனர். அவற்றை சட்டை செய்யாதிருந்த எலான் மஸ்க் திடீரென, ட்விட்டர் வாயிலாக ஒரு வாக்கெடுப்பை அறிவித்தார். இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் எலான் மஸ்க் கணக்கில் முளைத்த இந்த வாக்கெடுப்பில், ’ட்விட்டர் தலைமை பொறுப்பில் நான் தொடரட்டுமா வேண்டாமா?’ என்ற கேள்வியுடன், ’ஆம்/இல்லை’ என 2 வாய்ப்புகளையும் வழங்கியிருந்தார்.

எலான் அறிவித்த வாக்கெடுப்பு ட்விட்டரில் சூடு பிடித்ததில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் சுமார் 1.75 கோடி ட்விட்டர் பயனாளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்திருந்தனர். இந்த முடிவின்படி, சுமார் 57.5% பேர் எலான் பதவியிறங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மாறாக 42.5% பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். இதன்படி விரைவில் ட்விட்டர் தலைமை பதவியை எலான் துறப்பாரா அல்லது வழக்கமான அவரது திருவிளையாடலில் இந்த வாக்கெடுப்பும் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அக்டோபரில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியபோது அதன் தலைமை செயல் அலுவலராக இருந்த பராக் அகர்வால் உட்பட பலரையும் தூக்கியடித்தார். புதிய சிஇஓ நியமிக்கப்படும் வரை தானே தற்காலிக சிஇஓ என்றும் அறிவித்தார். ட்விட்டரின் பல நிர்வாக அடுக்குகளை கலைத்துவிட்டு, தானே நேரடியாக நிர்வகிக்க ஆரம்பித்தார். இதுவே ட்விட்டரின் பல்வேறு தடாலடி முடிவுகளுக்கும், அவற்றை பின்னர் திரும்பி பெறவும் காரணமானது. இந்த வாக்கெடுப்புக்கு தலை வணங்கி புதிய சிஇஓ அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது வழக்கபோல தனது வீம்புகளை தொடர்வாரா என்பதும் எலானுக்கு மட்டுமே வெளிச்சம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in