இனி வெவ்வேறு நிறங்களில் டிக்: எலான் மஸ்க் புதிய தகவல்

இனி வெவ்வேறு நிறங்களில் டிக்: எலான் மஸ்க் புதிய தகவல்

ப்ளூ டிக் சர்ச்சைக்குப் பின்னர், புதிதாக வெவ்வேறு நிற டிக் அங்கீகாரம் அறிமுகப்படுத்தப்படும் என ட்விட்டரின் புது முதலாளி எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

44 பில்லியன் டாலருக்கு கடந்த மாதம் ட்விட்டரை வாங்கிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், அடுத்தடுத்து எடுத்துவந்த நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் நேர்ந்தன. மாதம் 7.99 டாலர் (இந்திய மதிப்பில் 645 ரூபாய்) கட்டணமாகச் செலுத்தினால், ப்ளூ டிக் எனும் சரிபார்ப்பு அம்சம் இல்லாமலேயே ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கலாம் என்று அவர் அறிவித்தார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தபோதும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

கட்டணத்துடன் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், டொனால்டு ட்ரம்ப் போன்ற ஆளுமைகள், முன்னணி தொழில் நிறுவனங்களின் பெயர்களில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டன. எலான் மஸ்க்குக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்துக்கும் போலி கணக்கு தொடங்கப்பட்டது. உடனடியாக போலி கணக்குகள் முடக்கப்பட்டன.

இதையடுத்து, ப்ளூ டிக் வழங்குவதை நிறுத்திவைத்தார் மஸ்க்.

ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ப்ளூ டிக் அறிமுகமாகவிருக்கிறது. இந்த முறை நீல நிறம் மட்டுமல்ல, தங்க நிறமும், சாம்பல் நிறமும் சேர்க்கப்படுவதுதான் இதில் விசேஷம்.

கிரிப்டோ கிங் என்பவரின் ட்வீட்டுக்குப் பதிலளித்திருக்கும் எலான் மஸ்க், நிறுவனங்களுக்குத் தங்க நிறத்தில் டிக் வழங்கப்படும் என்றும், அரசுகளின் ட்விட்டர் கணக்குகளுக்கு சாம்பல் நிற டிக் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிற கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படவிருக்கிறது. இதில் சாமானியர்கள், பிரபலங்கள் என எந்த வேறுபாடும் இல்லை என எலான் மஸ்க் விளக்கமளித்திருக்கிறார்.

இதுதொடர்பான விரிவான விவரம் அடுத்த வாரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in