ட்விட்டருக்கு சமாதி?: எலானின் 2.0 திட்டமும், ஊழியர்களின் வாட்டமும்

ட்விட்டருக்கு சமாதி?: எலானின் 2.0 திட்டமும், ஊழியர்களின் வாட்டமும்

‘ஃபன் பண்ணுவோம் வாங்க. இனி உலகின் மகிழ்ச்சிகரமான இடமாக ட்விட்டர் இருக்கும்’ ட்விட்டரை வாங்கும் யோசனையில் இருந்தபோது தனது விசிறி ஒருவருக்கு எலான் மஸ்க் அளித்த பதில் இது. ஆனால் அந்த நிறுவனத்தை எலான் வாங்கியது முதலே ட்விட்டர் துக்க வீடாக காட்சியளிக்கிறது.

எலானின் புதிய சீரமைப்புக்கான திட்டங்கள், வறட்டு பிடிவாதங்களால் விரைவில் ட்விட்டரின் இயக்கமே கேள்விக்குறியாகும் என்று அதன் முன்னாள் ஊழியர்கள் எச்சரித்து வருகிறார்கள். ட்விட்டருக்கு எதிரான முழக்கங்கள் ட்விட்டரிலேயே டிரெண்டிங்கில் இடம்பெறும் விநோதமும் அரங்கேறுகிறது. அது மட்டுமன்றி ட்விட்டருக்கு எதிரான வசைகள், கிண்டல்கள் எல்லாவற்றையும் எலானே தனது பக்கத்தில் பகிர்ந்து எள்ளி நகையாடுகிறார். ட்விட்டருக்கு சமாதி கட்டியதை சித்தரிக்கும் மீம் அவற்றில் ஒன்று. மெய்யாலுமே கெத்தான மனிதர்போல என்று எலான் மஸ்கை வியந்து கடந்துவிட முடியாதபடி நடப்பு சூழல் மோசமாகி வருகிறது.

ட்விட்டரை வாங்கியது முதலே எலான் மூக்கால் அழுகிறார். ’நட்டத்தில் நிர்வாகம் நடக்கிறது, வெட்டி செலவுகள் செய்கிறார்கள், போலி கணக்குகள் வைத்திருக்கிறார்கள், உபரியாக ஆட்களை குவித்திருக்கிறார்கள்’ என்றெல்லாம் புலம்பிய கையோடு சீரமைப்பு என்ற சாட்டையை சொடுக்கினார். சுமார் 50% ஊழியர்களை அவராக வெளியேற்றினார். அது மட்டுமன்றி ’ட்விட்டர் 2.0’ புதிய திட்டங்களை வகுத்து அதில் உடன்படாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று ஓலை அனுப்பி வைத்தார். இந்த வகையில் வெளியேற்றப்பட்ட மற்றும் வெளியேறும் ட்விட்டர் ஊழியர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது.

குறைவான ஊழியர்கள், தினசரி வேலை நேரம் அதிகரிப்பு, ட்விட்டர் 2.0 என்ற பெயரில் புதிய இலக்குகளை நோக்கிய நெருக்கடிகள் இப்படி எலான் மஸ்க் விதிக்கும் கெடுபிடிகளில் வெறுத்துப்போய் ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள். சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்தில் உணவுக்கான செலவினத்தில்கூட எலான் கைவக்க, ட்விட்டர் ஊழியர்கள் நொந்து போனார்கள். கொத்துக்கொத்தாக ஆள் திரட்டிக்கொண்டு வெளியேறுவதை பார்த்த எலான் மஸ்க், தானாக கதவை அகல திறந்து வைத்து விரும்பியோர் வெளியேறலாம் என்று 3 மாத ஊதியத்தை கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். வெளியேறுவோர் ஏதாவது கோளாறு செய்துவிடுவார்கள் என்று சந்தேக வட்டத்தினரின் அலுவல் உபயோகத்தையும் முடக்கி வைத்திருக்கிறார். இந்த நடவடிக்கைகளுக்காக ட்விட்டர் அலுவலகங்களை 3 நாட்களுக்கு மூடவும் செய்திருக்கிறார்.

அப்படி வெளியேறிய ஊழியர்கள் எலான் மஸ்கை கரித்துக்கொட்டுகிறார்கள். ’தேர்ந்த வலதுசாரியான எலான் மஸ்க், சாமானியர்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதையும், முற்போக்காக சிந்திப்பதையும் வெறுக்கிறார். ட்விட்டரை அடியோடு புரட்டிப்போட விரும்புகிறார். முற்றிலும் வருமான நோக்கில் அதனை சந்தைப்படுத்த முடிவு செய்திருக்கிறார். மக்களால் கொண்டாடப்பட்ட ட்விட்டருக்கு எலான் மஸ்க் நிஜமாகவே சமாதி கட்டிவிட்டார்’ என்று வெதும்புகின்றனர்.

மேலும் ’ட்விட்டரின் தூண்களாக விளங்கிய ஊழியர்களை வெளியேற்றினால் விரைவில் ட்விட்டர் இயங்குதளம் ஸ்தம்பிக்கும். அப்போது இவர் என்ன செய்வார். பயனர்கள் எளிதில் இதர சமூக ஊடகங்களை நாடுவார்கள். நாங்கள் கட்டமைத்த ட்விட்டர் படிப்படியாக மூழ்கப்போகிறது’ என வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால் ’எலான் மஸ்க் எதையும் திட்டமின்றி செய்ய மாட்டார். ட்விட்டர் நிறுவனத்தை முழுதுமாக கட்டியெழுப்பவும், புதிய வண்ணத்தில் அதன் பயணத்தை தொடரவும் பல திட்டங்கள் வைத்திருக்கிறார். அதற்கு உடன்படாத ஊழியர்களையே அவர் வெளியேற்றி வருகிறார்’ என்கிறார்கள் எலான் ஆதரவாளர்கள்.

ட்விட்டரின் நடப்பு விவகாரம் அமெரிக்க ஆட்சியாளர்களையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. ட்விட்டரில் பணியிழந்த ஊழியர்கள் மட்டுமன்றி, ட்விட்டர் பயனர்களின் தரவுகள் குறித்தும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த தரவுகளை கைப்பற்றுவோர் அதனடிப்படையில் அமெரிக்காவின் பொருளாதார சந்தை முதல், தேர்தல் பிரச்சாரம் வரை மக்களை திசை திருப்ப முடியும். எனவே ட்விட்டர் விவகாரத்தில் தனியாக குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என சில செனட்டர்கள் வற்புறுத்தி வருகிறார்கல்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என உலகின் தலை சிறந்த நிறுவனங்களை நிர்வகித்தவாறு, சர்வதேச அளவில் பெரும் பணக்காரராகவும், அரை நூற்றாண்டு அட்வான்ஸாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவராகவும் இதுவரை தன்னை முன்னிறுத்தி வரும் எலான் மஸ்க் அத்தனை எளிதில் சறுக்கக்கூடியவரா என்ன? எலான் மஸ்க் மண்டைக்குள் என்ன ஓடுகிறது என்பதுதான் இப்போதைய பில்லியன் டாலர் கேள்வி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in