‘150 கோடி ட்விட்டர் கணக்குகளுக்கு வந்தது ஆபத்து!’

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி!
‘150 கோடி ட்விட்டர் கணக்குகளுக்கு வந்தது ஆபத்து!’

ட்விட்டரில் சுமார் 150 கோடி கணக்குகள் நிரந்தரமாக அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அதன் தலைவர் எலான் மஸ்க்.

ட்விட்டரை வாங்கியது முதலே நாளொரு அதிரடியும் பொழுதொரு பிரகடனமுமாக ட்விட்டர் தளத்தை அலற விட்டு வருகிறார் எலான் மஸ்க். ட்விட்டர் நிர்வாகத்தில் சீர்திருத்தம், பணியாளர்கள் களையெடுப்பு, பயனர்களுக்கான கட்டண திட்டங்கள் என அவரது நடவடிக்கைகளும் பரபரத்து வருகின்றன.

இந்த வகையில் புதிதாக எலான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ட்விட்டர் பயனர்களை அதிர வைத்திருக்கிறது. சுமார் 150 கோடி ட்விட்டர் கணக்குகளை நிரந்தரமாக நீக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டர் நிர்வாகத்தின் விதிமுறைகளை மீறும் பயனர்களை சஸ்பெண்ட் செய்வது மட்டுமே அதிகபட்ச நடவடிக்கையாக இதுவரை இருந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் கணக்குகளையே நிரந்தரமாக நீக்கும் எலானின் முடிவு பயனர்கள் மத்தியில் ஆச்சரியம் தந்துள்ளது.

இவை குறித்து விளக்கமளித்துள்ள எலான், ‘ஆண்டு கணக்கில் செயல்படாத, பதிவுகள் ஏதுமின்றி தூங்கும் ட்விட்டர் கணக்குகள் மட்டுமே இந்த வகையில் நிரந்தர நீக்கத்துக்கு ஆளாகும்’ என பயனர்களின் பதட்டம் தணித்திருக்கிறார். இது தவிர ’பயனர்கள் மத்தியிலான நேரடி தகவல் பரிமாற்றங்கள் அவற்றின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறியாக்கம் செய்யப்படும் என்றும், எந்த வகையிலும் ட்விட்டர் நிர்வாகம் பயனர்களின் ப்ரைவசியில் தலையிடாது’ எனவும் உறுதியளித்திருக்கிறார்.

இதற்கிடையே ட்விட்டரை வாங்கிய வகையில் சொத்துக்களை கரைத்த எலான் மஸ்க், உலகின் பெரும் பணக்காரர் வரிசையில் முதலிடத்திலிருந்து அண்மையில் இரண்டாம் இடத்துக்கு சறுக்கி உள்ளார். மேலும் எலான் மஸ்கின் பணிநீக்க நடவடிக்கைகளில் பெண் பணியாளர்கள் அதிகம் குறிவைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, ட்விட்டரின் 2 முன்னாள் பெண் பணியாளர்கள் எலான் மஸ்க் எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in