ட்விட்டருக்கான ‘வீடு திரும்பல்’: ட்ரம்ப் தயக்கத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் ‘உண்மை’

ட்விட்டருக்கான ‘வீடு திரும்பல்’: ட்ரம்ப் தயக்கத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் ‘உண்மை’

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தடைக்கு ஆளாகி இருந்த ட்விட்டர் கணக்கு புத்துயிர் பெற்ற பிறகும், ட்விட்டருக்கு திரும்பாது அவர் தயங்குவதன் பின்னணியில் ஓர் ‘உண்மை’ ஒளிந்திருக்கிறது.

பன்னாடுகளின் தலைவர்களும் தங்கள் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு சமூக ஊடகங்களையே பெரிதும் சார்ந்துள்ளனர். கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோரை தொடர்புகொள்வது, எதிர்தரப்புக்கு பதிலடி தருவது ஆகியவற்றையும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே சாதிக்கிறார்கள். இந்த வரிசையில் ட்ரம்ப் - பைடன் இடையிலான கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ட்விட்டர் சமூக வலைதளம் அமளிதுமளிக்கு ஆளானது.

தேர்தல் முடிவுகளில் தனக்கு பாதகம் என்பதை முன்கூட்டியே மோப்பமிட்ட ட்ரம்ப், தனது ட்விட்டர் பதிவுகளில் கட்டுப்பாடின்றி புரளிகளை கிளப்பினார். சுமார் 4 லட்சம் அமெரிக்கர்களை பலி கொண்ட கரோனா பெருந்தொற்றை அலட்சியப்படுத்தியது, அமெரிக்க தேர்தல் நடைமுறைகளை இழிவுபடுத்தியது, தனது ஆதரவாளர்களை கலவரத்துக்கு தூண்டியது என ட்ரம்பின் பதிவுகள் ட்விட்டர் நிர்வாகத்தின் கொள்கைகளை பெரிதும் சீண்டின. எனவே ட்ரம்ப் பதிவுகளுக்கு கீழாக ’இது தவறாக வழிநடத்தக்கூடிய இடுகை’ என்ற வாசகத்தை ட்விட்டர் நிர்வாகம் தானாக சேர்த்தது. ட்விட்டரின் இந்த அதிரடியை பேஸ்புக் நிர்வாகமும் பின்பற்றியது. ட்ரம்ப் - ட்விட்டர் இடையிலான தொடர் மோதலின் நிறைவாக 2021, ஜன.8 என்று ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தமாக முடக்கப்படுவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்தது.

ட்விட்டரில் புத்துயிர் பெற்ற ட்ரம்ப்
ட்விட்டரில் புத்துயிர் பெற்ற ட்ரம்ப்

அந்த ஆவேசத்தில், ’ட்விட்டருக்கு மாற்றான சமூக ஊடகத்தை கட்டமைக்கிறேன் பார்’ என்ற தனது முந்தைய சபதத்தை நிறைவேற்ற ட்ரம்ப் முடிவு செய்தார். அதன்படியே அவரது நிறுவனங்களில் ஒன்றான ’ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி க்ரூப்’ சார்பில் ‘ட்ரூத் சோஷியல்’ என்ற சமூக ஊடகம் தொடங்கப்பட்டது. ஆப்பிள் பயன்பாட்டாளர்களுக்கு 2021,பிப்ரவரியிலும், ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கு அதே ஆண்டின் அக்டோபரிலும் ’ட்ரூத் சோஷியல்’ அறிமுகமானது.

ஆனால் ஆரம்ப அமோகத்துக்கு அப்பால், பெரும் சமூக ஊடகங்களுக்கு மத்தியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள ட்ரூத் சோஷியல் இன்று வரை தடுமாறி வருகிறது. ட்ரம்ப், அவரது ஆதரவாளர்கள், அரசியல் களேபரங்களை வேடிக்கை பார்க்கும் அமெரிக்கர்கள் என உள்நாட்டுக்குள் அதற்கான வரவேற்பு சுருண்டது.

ட்விட்டரை கையகப்படுத்தும் முன்னரே, தடைசெய்யப்பட்ட பெருந்தலைகளின் கணக்குகளுக்கு புத்துயிர் தரப்படும் என ட்விட்டர்வாசிகள் மத்தியில் எலான் மஸ்க் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே ஒவ்வொரு பிரபலங்களின் கணக்காக மீட்டுவந்த ட்விட்டர் நிர்வாகம், ட்ரம்ப் கணக்கை மீட்கும் முடிவை மட்டும் எலான் மஸ்க் மேஜையில் வைத்தது. ட்விட்டர் நிர்வாகத்தில் எலான் மேற்கொண்டுவரும் அதிரடிகள் வெளியே சர்ச்சைக்கு ஆளானபோது, ட்ரம்ப் கணக்கின் மீது கடைக்கண் கொண்டார் எலான் மஸ்க். ட்ரம்ப் கணக்கின் புத்துயிர் தொடர்பாக ட்விட்டர் தளத்திலேயே ஒரு வாக்கெடுப்பும் நடத்தினார். சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பயனர்கள் அளித்த வாக்களிப்பின் நிறைவாக தலைதப்பியிருக்கிறார் ட்ரம்ப். அவரக்கு ஆதரவாக 51.8% பயனர்களும், எதிராக 48.2% பயனர்களும் வாக்களித்திருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக சில தினங்கள் முன்புதான் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனையொட்டி ட்விட்டர் வாக்கெடுப்பில் ட்ரம்புக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகளை எதிர்பார்திருந்த அவரது ஆதரவாளர்கள் ஏமாந்து போனார்கள். இந்த சூழலில் ட்விட்டருக்கான வீடு திரும்பல் குறித்து ட்ரம்பும் வாய் திறந்திருக்கிறார். எலான் மஸ்கை வாயார புகழ்ந்திருக்கும் ட்ரம்ப், ட்விட்டர் கணக்குக்கு திரும்புவதில் தனக்கான பிணக்காக ட்ரூத் சோஷியல் மீடியா இருப்பதை கோடிட்டு காட்டினார்.

ட்விட்டருக்கு எதிராக என்றே கச்சைக்கட்டி தொடங்கப்பட்ட ’ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தை நட்டாற்றில் விடவும் ட்ரம்ப் தயங்குகிறார். எலான் மஸ்க்கின் ட்விட்டர் நிர்வாக அதிரடிகள் மற்றும் விளம்பரதாரர்களின் அதிருப்திகளை மடைதிருப்பும் முயற்சிகளில் ஒன்றாகவே, ட்ரம்ப் வசம் ட்விட்டர் கரிசனம் திரும்பியிருப்பதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், ட்ரூத் சோஷியல் தொடங்கப்பட்டது முதலே எதிர்பார்த்திருந்த பாதக சூழலுக்கு இப்போதுதான் ட்விட்டர் ஆளாகி இருக்கிறது. எனவே ட்ரம்பின் ட்விட்டர் திரும்பல் இப்போதைக்கு வேண்டாம் என்பதே அதிகப்படி ஆதரவாளர்களின் அழுத்தமாக தொடர்கிறது.

ஆனால் அதிபர் தேர்தல் நெருங்குகையில் ட்ரூத் சோஷியலுக்கு அப்பால் ட்விட்டர் தளத்தில் களமாடுவதும் ட்ரம்புக்கு தவிர்க்க முடியாததாக மாறும். ட்ரூத் சோஷியலில் ட்ரம்பை பின்தொடர்வோர் 45 லட்சம் மட்டுமே. அதிலும் பெரும்பாலானோர் ஆதரவளார்கள் மற்றும் அவர்களின் போலி கணக்குகள் என்பதை ட்ரம்ப் முகாம் நன்கறியும். சுமார் எட்டரை கோடி ஃபாலோயர்ஸ் அடங்கிய ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு அவர்களுக்கு கற்பகத்தரு! ட்ரம்ப்பின் ட்விட்டர் மீண்ட ஒரே இரவில், அவரது ட்விட்டர் பின்தொடர்வோரில் மேலும் சில லட்சத்தினர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ட்ரம்புக்கு ட்விட்டரும் முக்கியம். ஆனால் ட்ரம்ப் இயல்புபடியே சற்று பிகு செய்தபிறகே மீள்பிரவேசம் செய்வார். அதுவரை ட்விட்டரின் சர்ச்சைகளை வேடிக்கை பார்ப்பதும், ட்ரூத் சோஷியலை வளர்த்தெடுப்பதையுமே ட்ரம்ப் முகாம் மும்முரமாக மேற்கொண்டிருக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in