
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருநங்கைகள் பாதுகாப்பு தொடர்பாக தனி நபர் மசோதாவை 2015 ஏப்ரல் 24-ல் மாநிலங்களவையில் கொண்டுவந்தார். பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்த 27 ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்டது.
திருநங்கைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி வழங்க வகை செய்யும் அந்த மசோதா மக்களவையில் 2019 ஆகஸ்ட் மாதமும், மாநிலங்களவையில் நவம்பர் மாதமும் நிறைவேற்றப்பட்டது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் தனிநபர் மசோதா கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது பெரிய சாதனையாகப் பேசப்பட்டது. மாநிலங்களவையில் அந்த மசோதாவை திருச்சி சிவா கொண்டுவந்த நாள் இன்று. அதை குறிப்பிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவாக எழுதியிருக்கிறார் திருச்சி சிவா எம்பி.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
இன்றைய நாள்
நாடாளுமன்ற வரலாற்றைப்
பொன்னெழுத்து கொண்டு
பொறிக்க வேண்டிய பொன்னாள்.
ஐயொன்பது ஆண்டுகள்
அகன்ற இடைவெளியில்
தமிழன் ஒருவரின்
தனிநபர் மசோதா
வெற்றிபெற்ற நன்னாள்.
அலியென்றும், ஒம்போதென்றும்
பொட்டையென்றும் பொண்டுகனென்றும்
பலப்பலவாறு பரிகசிக்கப்பட்டவர்க்கு
திருநங்கை என்று
திருந்திய பெயர் சூட்டிய
திருக்குவளை மைந்தனின்
வழியொற்றி வந்த
திருச்சி கோட்டத்து
திராவிடச் சூரியன்
காவிரி தீரத்துக்
கரிகாற் பெருவளத்தான்
ஒற்றையாய் நின்று
ஓங்கி ஒலித்து
உறவற்ற மக்களுக்கு
உரிமை பெற்ற உன்னதநாள்.
ஒடுக்கப்பட்டோர்க்கும்
ஒதுக்கப்பட்டோர்க்கும்
ஒருபோதும் இன்னல்
வருவதாகாது என்று
சுற்றிச் சுழன்றடிக்கும்
சூறாவளிப் பேச்சால்
பெற்றுத் தந்தான் - அவர்களைப்
பெருமைப்படுத்தச் சட்டமொன்று.
கந்தகச் சாலையில்
கருகும் மக்களுக்கும்,
நாடோடியாய்த் திரியும்
நரிக்குறவ இனத்துக்கும்,
தேர்தல் பணியைச் சுமக்கும்
அறிவு புகட்டும் ஆசிரியர்க்கும்,
கையறு நிலையில் பரிதவிக்கும்
கைம்பெண்கள் உரிமைக்கும்,
ஒற்றை நிமிடத்தில்
தரணி வாழ் பெண்டிர்க்கும்...
எத்தனை...எத்தனை
எண்ணிப் பார்க்கிறேன்
எண்ண முடியவில்லை.
எண்ணும் எண்ணத்தை
என்னுள் ஆழ்த்திவிட்டேன்.
- இவ்வாறு திருச்சி சிவா எழுதியிருக்கும் பதிவைப் பல்வேறு தரப்பினர் வரவேற்றிருக்கின்றனர்.