இது எங்க கிராமம்

ஒரு பத்திரிகையாளரின் ரசனைப் பதிவு
 இது எங்க கிராமம்

என்னதான் மிகப் பெரிய நகரங்களில் வசித்தாலும், தன்னுடைய பிறந்த ஊர் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப் பதிந்திருக்கும். “சொர்க்கமே என்றாலும்... அது நம்மூரப் போல வருமா..?” என்று இசைஞானியே இனிமையாகப் பாடி வைத்திருக்கிறார். அப்படி தனது சொந்த ஊரைப் பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார் காரைக்காலைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தம்பி மாரிமுத்து. தனக்கேயுரிய மொழிநடையில் அவர் எழுதியிருக்கும் ரசனைப் பதிவு இதுதான்...

இது எங்க கிராமம் - மேலக்காசாக்குடி

மேலக்காசாக்குடி கிராமத்தின் சனி மூலையில் அழகு நாச்சியம்மன் கோயில் இருக்கிறது. பசிய வயல் நடுவே கோபுரம் குமிழாய் நிற்கும். இக்கோயிலிலிருந்து தெற்கில் அரை பர்லாங்கு தூரத்தில் ஆச்சி குளம். இக்குளத்தில் யாரும் இறங்கக்கூடாது. குளத்தில் பூத்த தாமரைப்பூ, இலைகளை ஆய்ந்துவிடக்கூடாது. குளம் நிறைய விரால், குரவை, கெண்டை, செந்நெல் மீன்கள் சலசலக்கும்.

குளக்கரைக்கு ஒருத்தரும் தூண்டிலோடு வந்துவிடக் கூடாது. சிண்டன் மகன் வீமன் மாதிரி வருவான். தூண்டிலையம், மீன்களையும் பிடுங்கிக் கொள்வான். அவனது கணக்கில் சிபாரிசு ஏறாது. முதலாளி மகனோ, மிராசுதார் மகனோ எதையும் சட்டை பண்ணமாட்டான்.

சிண்டன் ஆச்சி குளத்தின் இரும்புக் கவசம் மாதிரி. ஆச்சி குளம், அதனைச் சுற்றியிருக்கிற பல நூறு ஏக்கர் விளைநிலங்களுக்கும் சிண்டனே தலையாரி! சிண்டன் செத்த பிறகு அவனது மகனையே தலையாரியாக்கினர். இவனது பெயர் யாருக்கும் தெரியாது. இவனை 'சிண்டன் மகன்' என்பார்கள். அவ்வளவுதான்! 'அப்பனைப் போல இவனும்' விறைப்பு, சிரைப்பாய் இருப்பான்.

சிண்டன் மகன் மீனைப் பறித்துக் கொண்டால் அவனை எதுவுமே செய்ய முடியாது. ‘பய மொவன மிரட்டி வைப்போம்’ என போலீசில் பிராது கொடுக்கவும் முடியாது. புகார் கொடுக்கப் போனால், 'கொத்தால் பிள்ளை' சிண்டன் மகனுக்குத்தான் வக்காலத்து வாங்குவார். கோடையில் மீன் பிடித்ததும், கொத்தால் பிள்ளைக்கு வாய்க்கு வக்கணையாக விரால், குரவை மீன்கள் போகும். அதையும் சிண்டன் மகன்தான் கொண்டு போய் கொடுப்பான்.

நாலு பேராக சேர்ந்து சிண்டன் மகனை அடிக்க திட்டமெல்லாம் நடக்கும். பொழுது விடிந்தால், திட்டம் மாறிவிடும். சிண்டன் மகன் பெரிய பராக்கிரமசாலி இல்லை! அவனது அர்பணிப்பு 'ஊரார் ஓமலிப்பை' நீர்க்கச் செய்து விடும்.

ஆடு, மாடு குளத்தில் இறங்கினாலும் அவற்றைப் பிடித்து வாடியில் விட்டு விடுவான். காரணம், ஆச்சிகுளம் காவலில் அவனுக்குத் தரப்பட்டால் நாட்டாண்மை. குளத்தில் தாமரை இலை பறிக்க, மொட்டு ஆயவு, மீன் பிடிக்க வருடக் குத்தகை அறிவிப்பார்கள். அவற்றை ராப்பகலாக காவல் காப்பதே சிண்டன் வகையறாவின் கடமை. அதற்காக அக்குடும்பத்துக்கு 'நீராணிக்க மானியம்' கொடுப்பார்கள்.

மேலகாசாக்குடி கிராமத்தில் குற்றங்களுக்கும் பஞ்சமிருக்காது. பாலா திசைகளிலும் நிறைய குளங்களுண்டு. உடையார் குளம், தாமரை குளம், வண்ணான் குளம், மூங்கில்குளம், மரைக்கார் குளம், கல்லறை குட்டை, பிள்ளை குளம் இப்படி குளங்கள் இருக்கும். அத்தனையும் அல்லிக்கொடிகள் நிறைந்திருக்கும். ஆச்சிகுளம் ஒன்றில்தான் தாமரைப்பூ இருக்கும்.

தொப்பிக்காரர் வயலைத்தாண்டி, வடிவாய்க்கால் கரை இருக்கும். அங்கிருந்து கண்ணி வழியே நடக்க வேண்டும். வழியில் ஒரு கவனையைத் தாண்ட வேண்டும். வயல்வெளி, வடிவாய்க்காலைத் தாண்டி நடந்தால் பனங்கரை வரும். தர்ப்பைக்காடு, காஞ்சிறு செடி அடர்ந்த வரப்பைத் தாண்டினால், கருவேலக்காடு குதிர்ந்திருக்கும்.

காட்டில் கருவப்பூச்சி ஒற்றினால் அரிக்கும். சொறிந்தால் தடிக்கும். குளித்தாலும் அரிப்பு நிற்காது. உடம்பில் சாம்பலைத் தடவினால் பூச்சியின் ரோமம் நழுவும். இத்தனையையும் கடந்த பின்னரே ஆச்சி குளத்தைப் பார்க்க முடியும்.

ஆச்சி குளம் அவ்வளவு பெரிதாய் இருக்காது. சுற்றிலும் மரங்களுடன் திடல் விரிந்திருக்கும். மரநிழலில் மாடுகள் படுத்து அசைபோடும். தாமரை செடி படர்ந்த குளத்தில் கொக்கு, உள்ளான், நாரைகள் மேயும். மாடு மேய்க்கிறபோது, எங்களுக்கு தாகமெடுத்தால் உள்ளங்கைகளே அட்சய பாத்திரம்.

குளத்தோரம் கால்வைத்தால் களிமண் நெகிழும். தள்ளி கால் வைத்தால், ஊமச்சிகள், கிளிஞ்சல்கள் கால்களைக் கிழிக்கும். அசந்தால், நத்தை ஓடு மாங்காய் பிளப்பதைப் போல் காலை பதம் பார்க்கும். முழங்காலளவு சேற்றில் இறங்கி, குனிந்து வாயால் ஊத வேண்டும்.

மூக்கு நீரில் அமிழாமல், முகத்தை வைத்து, வாயால் நீருறிஞ்சுவது ஒரு கலை! குலத்து நீரில் தாமரை மணம் கமழும். குளிர்நீர் ஓர் பேரமுதம். அசடுகள் நகர்ந்த நீர்ப்பரப்பில் வாயை வைத்து நீரருந்துதல் பேரானந்தம்!

பசிக்கு பயத்தங்காய்களைப் பறித்து பல்லால் உருவுவோம். தொண்டை வறண்டால் ஆடு, மாடுகளை விட்டு விட்டுப் போக முடியாது. எல்லாம் அடுகடையாக நரிப்பயிர் வயலில் இறங்கி விடும். தண்ணீருக்காக வீட்டுக்குப் போகாதபோது, அவசரத்துக்கு ஆச்சி குளமே எங்களின் அமுத பாத்திரம்!

தம்பி மாரிமுத்து
தம்பி மாரிமுத்து

ஆச்சி குளத்தைத் தாண்டி 'அய்நாச்சியம்மன்' கோயில் இருக்கும். அழகுநாச்சியம்மன் கோயிலைத்தான் அப்படி அழைப்பார்கள். குளத்தை பாசிக் குத்தகை விடுவார்கள். அதில் கிடைக்கிற மீன்களை கோயில் திருவிழாவுக்கு கொடுப்பார்கள். கோடைத் திருவிழாவில் வயல்வெளியில் ஒரே வெளிச்சமாக இருக்கும்.

அறுவடை செய்த வயல்கள் திருவிழாக் கோலம் பூணும். சர்பத், பாட்டுப் புத்தகம், உப்புக்கடலை, பட்டாணி, மல்லாக்கொட்டை கடைகள் இருக்கும். வயல்வெளியில் குடை ராட்டினங்கள் சுற்றும். சின்னஞ் சிறுசுகள் இருட்டில் ஒன்றுக்கொன்று கடலை மிட்டாய்களை பரிமாறிக் கொள்ளும். தொலைவில் இளவட்டங்கள் கோழிக்கறி, பன்ரொட்டியோடு பனங்கள் குடிப்பார்கள்.

கோயிலைச் சுற்றிலும் அதிஷ்ட சீட்டு கிழிக்கிற காலண்டர்கள் தொங்கும். ரெண்டு காசு கொடுத்தால், காலண்டரில் தொங்குகிற எந்தச் சீட்டையும் கிழிக்கலாம். அதில் பெரும்பாலும் ஜோக்கர்தான் இருக்கும். அதையும் மீறி பணம் போட்ட படம் இருந்தால், கால் ரூபாவோ, எட்டணாவோ, ரெண்டு ரூபாவோ, அஞ்சு ரூபாவோ கொடுப்பார்கள். அந்த காசுக்கும் சீட்டுக் கிழித்து வெறுங்கையுடன் திரும்புவோம்.

சமீபத்தில் ஊருக்குப் போனபோது ஆச்சிகுளத்தை பார்த்தேன். சுத்தமாக வற்றி, மொத்தக் குளமும் களிப்பு தெரிந்தது. கரையில் ஓரிரண்டு ஜேசிபி எந்திரங்களை கழற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சிண்டன் மகன் என்றோ செத்துவிட்டானாம். அவன் செத்தது முதல் ஆச்சி குளத்தின் களையே போய்விட்டது. ‘பாசிக்குத்தகை’ கைமாறி விட்டதாம். குளத்தில் யார், யாரோ இறங்கி பூப்பறிப்பது, மீன் பிடிப்பதாக சொன்னார்கள்.
ஆடி மாதத்தில் குளக்கரைக்குப் போனபோது யாரும் தடுக்காததே ஒரு குறையாய் தெரிந்தது. நீர் நிரம்பிய குளத்தில் ஓரிரு தாமரைக் கிழங்குகள் முளை விட்டிருந்தன. இந்த தாமரைக்கிழங்குகள் கொடியாகி, மொட்டு வெடித்து, பூவை விரிக்கும். அன்றொருநாள் குளக்கரையில் பார்த்த பறவைக்கூட்டம் இல்லை. மரங்கள் அகற்றப்பட்டு, எல்லைக் கற்களை ஊன்றி இருந்தார்கள்.


மனித சஞ்சாரமும் மாற்றத்துக்குரியதுதான்! புலம் பெயர்தலும், குடிபுகலும் உலகத்து உயிர்களின் வரம்! உலகம் முழுக்க இப்படித்தான் குளங்கள் ஏரியாக, கடல்களாக விரிந்து கிடக்கின்றன. இவைகளை சுற்றித்தான் மானுடத்தின் வாழ்க்கை பின்னிப் பிணைந்து கிடக்கிறது போலும்!

Related Stories

No stories found.