இது தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை - ஆதங்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்

இது தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை  - ஆதங்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்

சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும், ஆசிரியர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் இறங்கி இருப்பதும் ஆசிரியர்களின் பிரச்சினை மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்காலத்தோடு, தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினையும்கூட என்று கவலையோடு கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சதீஷ் குமார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவு:

ஆசிரியர்களுக்குப் பயந்து மாணவர்கள் படிக்கத் தொடங்கியதும், பட்டம் வாங்கி பார்புகழ உயர்ந்ததெல்லாம் கடந்த கால வரலாறு. இன்று மாணவர்களுக்குப் பயந்து ஆசிரியர்கள் தங்களது கற்பித்தலை நிகழ்த்த வேண்டிய நிலைக்கு மாற்றியிருக்கிறது கல்விமுறை அல்லது கற்றல் முறை.

'ஆல் பாஸ்' நடைமுறை தொடங்கியதிலிருந்தே ஆசிரியர்கள் பெயில் ஆகத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்து வெளியேறும் பல லட்சம் மாணவர்களில் மருத்துவ மாணவர்களை இன்னும் சல்லடை போட்டுத் தேட வேண்டியிருப்பதற்கும், தரமான பாடத்திட்டம், தரமான கல்வி இருந்தும் தகுதித் தேர்வுகளுக்கோ நுழைவுத்தேர்வுகளுக்கோ தனியே பயிற்சி மையங்களை தேடிக்கொண்டிருப்பதற்கும் காரணம் 'ஆல் பாஸ்' தான்.

ஆசிரியர் சதீஷ் குமார்
ஆசிரியர் சதீஷ் குமார்

இதுவரை தமிழகப் பள்ளிகளில் நடக்காத சம்பவங்கள், அரங்கேறாத வன்முறைகள் இப்போது நடைபெறுவது எப்படி? தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தடுமாறிப் படித்தாலும் 9-ம் வகுப்பிற்குள் நல்ல முறையில் தயாராகி, பெரும்பாலும் 10-ம் வகுப்பில் தன்னைக் கற்றலுக்கு முழுமையாகத் தயாராக்கி, பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி அடைகின்றனர் மாணவர்கள்.

அங்கு ஒரு தேக்கம் ஏற்பட்டால் , மறுமுறை முயன்று மீண்டும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும், தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவோ அல்லது திருந்திக்கொள்ளவோ ஒரு தருணம் அமையும்.

திருந்திக்கொள்ள முடியாத அல்லது திருந்தத் தயாராக இல்லாத மாணவர்கள் அதற்குமேல் கல்வி நிலையங்களை எட்டிப்பார்க்க இயலாது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் பொதுத்தேர்வுகளிலும் ஆல் பாஸை கரோனா அமல்படுத்திவிட்டது.

ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. தன்னிடம் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி அடைவதைத் தவிர, ஓர் ஆசிரியருக்கு வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப்போகிறது?

ஆனால் உரிய கற்றல் அடைவுகளோடு இல்லாத ஒருவன், ஒரே தர நிலையில் பிற மாணவர்களோடு இணைவதென்பது, ஒரு குடத்துப் பாலில் ஒரு துளி விஷம் கலப்பதற்கு ஒப்பாகும் என்பதை உணராத வரை, உங்களுக்குக் கல்வியின் ஆன்மா புரியாது. பயிர்களோடு சேர்ந்து சில களைகளும் வளர்வதைப் போல, எவ்வித தடங்கலுமின்றி மேல்நிலை வகுப்புக்களுக்குள் நல்லொழுக்கமில்லாத சில மாணவர்களும் வந்துவிட்டனர்.

அத்தோடு அலைபேசியே கல்விக்கு இடையூறு என்ற நாம் அதனையே இன்றைக்குக் கற்றல் உபகரணமாக்கி, 24 மணிநேர இணையதள வக்கிரங்களை அவர்களின் உள்ளங்கைகளுக்குள் திணித்துவிட்டோம். சமூகவலைதளங்களின் பிடிக்குள் சிக்கிய மாணவர்களில் சிலர் தாயாகப் பார்க்க வேண்டிய ஆசிரியைகளை வேறாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். தந்தையாகக் கருத வேண்டிய கண்டிக்கும் ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

வளர்ந்துவிட்ட மாணவிகளுக்கு ஓவர் கோட் அணிந்தால் பாதுகாப்பு உணர்வு இருக்கும் என சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் ஓவர்கோட் அணிவதே பாதுகாப்பாக இருக்குமோ என யோசிக்க வைத்திருக்கிறது இன்றைய சூழல்.

ஆசிரியர்களிடம் பிரம்பைப் பிடுங்கிவிட்டு, மாணவர்களிடம் கத்தியைக் கொடுத்துவிட்டதைப் போல இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கிறது
இந்தச் சமூகம். இன்றைய மாணவர்கள் உடல்வயதில் சிறியவர்களாக இருந்தாலும் மனவயதில் மிகப் பெரியவர்களாக அனைத்தையும் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் இது ஆசிரியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. மாணவர்களின் எதிர்காலம், இந்த தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினையும்கூட.

ஆசிரியர்களைக் குற்றவாளிகளாகக் காட்ட முயற்சிக்கும் வரை, மாணவர் சமூகம் மாண்பு அடையாது. ஆசிரியர்கள் அத்தனை பேரும் புனிதர்கள் என பாராட்டுப் பத்திரம் வாசிக்கச் சொல்லவில்லை. இங்கும் மதம், இனம், சாதி எனச் சாயங்களைப் பூசிக்கொண்டு திரியும் சாக்கடைகளும் உண்டு. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது தயவின்றி நடவடிக்கை எடுங்கள்.

ஆனால் உங்களது கற்றல் சீர்திருத்தத்தை ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரத்தின்மீது கைவிலங்கிட்டு கல்வியைச் சிறையிலடைத்துவிடாதீர்கள்.

Related Stories

No stories found.