புகழ் வெளிச்சத்துக்கு வந்த இரும்புக் கை மாயாவி

புகழ் வெளிச்சத்துக்கு வந்த 
இரும்புக் கை மாயாவி

இரும்புக் கை மாயாவி - இந்தப் பெயர் எத்தனை பேரின் பால்ய நாட்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது! எத்தனை பேரின் கற்பனைகளை வளர்த்தெடுத்திருக்கிறது! எத்தனைச் சித்திரக்காரர்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கிறது! கறுப்பு வெள்ளைச் சட்டகங்களில், பெரும்பாலும் இருள் பின்னணியுடன் உருவாக்கப்பட்ட இரும்புக் கை மாயாவி காமிக்ஸ் கதைகள் தமிழிலும் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இரும்புக் கரத்தால் மின்சார இணைப்பைத் தொடுவதன் மூலம் மாயத்தன்மையைப் பெறும் காமிக்ஸ் நாயகன் பெரிய அளவில் கவனம் பெற்றது, 1963 செப்டம்பர் 28-ல் வெளியான ‘தி ப்ரெய்ன்’ (The Brain) எனும் காமிக்ஸ் மூலம்தான். இன்று ஆங்கிலப் பதிப்பின் 58-வது ஆண்டு தினமாகும். அந்தக் கதையை, அக்டோபர் 1982-ல் ‘கொலைகாரக் குள்ளநரி’ எனும் பெயரில் தமிழில் வெளியிட்டனர் முத்து காமிக்ஸ் குழுமத்தினர்.

சௌந்தரபாண்டியன், அமரர் காமராஜுலு ஆகியோரால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு, தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டாரான அமரர் முல்லை தங்கராசனால் செம்மைப்படுத்தப்பட்டு தமிழுக்கு அறிமுகமானது முத்து காமிக்ஸ். இது நடந்தது 1972 ஜனவரி மாதத்தில்.

முத்து காமிக்ஸின் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்களுக்கு இந்தக் 'கொலைகாரக் குள்ளநரி' என்ற இரும்புக் கை மாயாவியின் கதையும், அதனுடைய முக்கியத்துவமும் தெரியும்.

1982-ல் முத்து காமிக்ஸ் இதழ் வெளிவருவது தற்காலிகமாகத் தடைபட்டது (அப்போதுதான் முல்லை தங்கராசனின் ‘முத்து காமிக்ஸ்’ வாரமலர் வரத் தொடங்கியது). அதன் பின்னர், 2 ஆண்டுகள் கழித்து 1984-ல் தான் மறுபடியும் முத்து காமிக்ஸ் (‘களிமண் மனிதர்கள்’ என்ற வேறொரு இரும்புக் கை மாயாவியின் கதையுடன் 138-வது வெளியீடாக) வெளிவரத் தொடங்கியது.

‘கொலைகாரக் குள்ளநரி’ கதையானது இரும்புக் கை மாயாவியின் 4-வது சாகசமாகும். தமிழில் வெவ்வேறு வரிசையில் வெளியாகி இருந்தாலும், இதுதான் மாயாவியின் வரிசைக்கிரம சாகச விவரம்:

1. நியூயார்க்கில் மாயாவி

2. யார் அந்த மாயாவி?

3. ஆழ்கடலில் மாயாவி

4. கொலைகாரக் குள்ளநரி

முன்குறிப்பு:

வேதாளர் கதைகளைப் போல, இரும்புக் கை மாயாவியின் கதைகளையும் அவை ஒரிஜினலாக வெளியான கால வரிசையில் படித்தால், அக்கதைகளின் மீதான லயிப்பின் அளவு இன்னமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு கதையின் முடிவிலும் மாயாவியின் குணாதிசயம் முதல் அவரது விசேட சக்திகள் வரை அனைத்துமே உயர்ந்துகொண்டேயிருக்கும்.

இரும்புக் கை மாயாவி: ஓர் அறிமுகம்

விஞ்ஞானி பாரிங்கரின் உதவியாளரான லூயி கிராண்டேல், ஒரு விபத்தில் தனது வலக்கையை இழந்து, எஃகினால் செய்யப்பட்ட செயற்கைக் கரம் ஒன்றைப் பொருத்திக்கொள்கிறார். இன்னொரு பரிசோதனையின்போது பரிசோதனைக் கூடமே விபத்துக்குள்ளாக, அந்த விபத்தில் கிராண்டேல் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்கிறது. அதில் யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய விளைவு உண்டாகிறது. கிராண்டேலின் முழு உடலும் மாயமாக மறைந்து, அவருடைய உலோகக் கை மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. இந்த விபத்தால் மனக் குழப்பம் அடைந்த கிராண்டேல், தனக்குக் கிடைத்த சக்தியின் மதிப்பை உணராமல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார். பின்னர் தெளிவுபெற்று, பிரிட்டிஷ் உளவுத் துறையான நிழற்படையில் சேர்ந்து மிகச் சிறந்த உளவாளியாகிறார்.

கதைச் சுருக்கம்

‘கொலைகாரக் குள்ளநரி’யின் கதை, இரும்புக் கை மாயாவியைப் பற்றிய ஒட்டுமொத்தச் சித்திரத்தை நமக்குத் தரும். பொதுமக்களின் பார்வையில் விரோதியாகவே பார்க்கப்பட்டுவந்த மாயாவி, வழக்கம்போல பொதுமக்களால் துரத்தப்படும்போது ஒருவரைச் சந்திக்கிறார். அந்த நபர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இறக்கும் முன் அவர் மாயாவியிடம் உலகை எதிர்நோக்கி இருக்கும் ஓர் அபாயத்தைப் பற்றிச் சொல்லி, ஒரு தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இத்தகவலைச் சொல்லச் சொல்கிறார். மாயாவி தொடர்பு கொள்வது நிழற்படையை. 60-களின் ட்ரெண்டின்படி உலகை அழிக்க நினைக்கும் ஒரு கொடூர விஞ்ஞானியைப் பற்றிச் சொல்லும் தலைவர் மாயாவியின் சக்தியைப் பயன்படுத்தி அவனைத் தடுத்தால், மாயாவி தன்னை மீட்டெடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிப்பதாகச் சொல்கிறார்.

உலகம் தன்னை வேட்டையாடாமல் இருக்க, இதுதான் வழி என்பதைப் புரிந்துகொண்டு மாயாவியும் நிழற்படையில் ஐக்கியமாகிறார். இந்தக் கதை ஏன் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இந்தக் கதையில்தான் பிரிட்டனின் உளவு ஸ்தாபனமான நிழற்படை நமக்கு அறிமுகமாகிறது.

நிழற்படை நமக்கு அறிமுகமாகும் தருணங்கள், மாயாவியின் செயல்திறனைக் கண்டறிய வைக்கப்படும் சோதனை, மாயாவி முதன்முறையாக நிழற்படைத் தலைவரைச் சந்திப்பது, தலைவர் என்று மட்டுமே நமக்கு அறிமுகமாகியிருக்கும் நிழற்படைத் தலைவர் தன்னுடைய பெயரைச் சொல்வது, ‘டாக்டர் நோ’ ஜேம்ஸ் பாண்ட் படத்தைப்போலவே, மாயாவியும் ஒரு சுரங்கப்பாதை வழியாகத் தப்பித்துச் சென்று தண்ணீரில் ஒரு விலங்குடன் மோதுவது என்று பல சுவையான சம்பவங்களைக் கொண்ட கதை இது.

ஆங்கிலத்தில் இந்தக் கதை வெளியான விவரங்கள்:

Story Title: The Brain

Author: Tom Tully

Artist: Jesus Blasco

Story Appeared in: Valiant & Knock Out Weekly as a series with 2 Pages per week

Starting Date : 28-09-1963 (Valiant & Knockout Issue No. 52)

Ending Date : 04-04-1964 (Valiant & Knockout Issue No.792)

No. Of weeks : 28 Weeks

Total Number of Pages : 54 pages

இக்கதையைப் படிக்கும்போது காலகட்டம் (60-களின் மத்திம காலம்), தளம் (வார இதழ்), வகைமை (தொடர்கதை), அமைப்பு (ஒவ்வொரு வாரமும் 2 பக்கங்கள்), யாருக்கானது (பிரிட்டனின் பதின்ம வயதினர்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு படிக்க வேண்டியது அவசியமாகிறது.

எப்போது வாசித்தாலும், நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் இரும்புக் கை மாயாவியின் சாகசக் கதைகளை, இன்று நினைவுகூர்வது பொருத்தமானது; இனிமையானது. இன்றும் காமிக்ஸ் புத்தகங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் ஆர்வலர்கள் இரும்புக் கை மாயாவி புத்தகத்தை எடுத்து ஒருமுறை வாசித்துவிடுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in