தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்!- ஒரு நெகிழ்ச்சி பதிவு

தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்!- ஒரு நெகிழ்ச்சி பதிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் இன்று தொடங்கி நாளை வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கண்காட்சிக்கான படங்களை தேர்ந்தெடுக்கும், தயாரிக்கும் பொறுப்புக் குழுவில் எழுத்தாளர் தோழர் ஜா.மாதவராஜ் இடம் பெற்றிருந்தார். அந்த அனுபவம் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாக வரலாறு குறித்தும் அவரது முகநூல் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

மாதவராஜ்
மாதவராஜ்

அவரின் அந்த பதிவு... சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் ரெங்கசாமி மில்லில் உழைப்புச் சுரண்டலையும், பாலியல் சுரண்டலையும் தட்டிக் கேட்ட சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ராமையன், ரெங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் என்னும் நான்கு இளைஞர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களது கடைசி ஆசை கேட்கப்பட்டது. தங்கள் அருமைத் தலைவர்களும் தோழர்களுமான பி.ராமமூர்த்தியையும், ரமணியையும் பார்க்க வேண்டும் என்றனர். விடிந்தால் 1946 ஜனவரி 8-ம் தேதி. அவர்களுக்கு தூக்குத் தண்டனை. முந்தைய நாள் தோழர் பி.ராமமூர்த்தியும், ரமணியும் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். தலைவர்களால் அழுகையை அடக்க முடியவில்லை. அந்த நன்கு தோழர்களும், “தோழர், நீங்கள் அழக்கூடாது!” என்று சொல்லி ”லால் சலாம்” என முஷ்டி உயர்த்தி முழங்குகின்றனர். தங்கள் நால்வரையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும் என்கின்றனர். படிக்கும்போதே கண்ணீராய் பெருக்கெடுத்தது.

தூக்கு மேடையில் ஏறுவதற்கு முன்பு வரை, “செங்கொடி என்றதுமே ஒரு ஜீவன் பிறக்குதம்மா, நம் கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா, என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா?” என்று பாடிய பாலுவைப் பற்றி அதே சிறையில் இருந்த தோழர் நல்லக்கண்ணு விவரிக்கும் போது சிலிர்ப்பும், வெப்பமும் பற்றிக் கொண்டது.

மாரி, மணவாளன், பொதும்பு பொன்னுச்சாமி, சேலம் சிறையில் நடந்த ஜாலியன் வாலாபாக் என போராளிகள் காலந்தோறும் வந்து கொண்டே இருக்கிறார்கள். வெண்மணியின் நெருப்பு அணையக் கூடியதா? லீலாவதியின் ரத்தம் காய்ந்து போகக் கூடியதா? நியாயத்தின் பக்கம் நின்றதற்காக, மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக அதிகார வர்க்கத்தின் கொடூர வதைகளுக்கும், அரசு வன்முறைக்கும் ஆளான இப்படியொரு இயக்கம் வேறு எதுவும் இருக்க முடியுமா? குத்தகை நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு தடை விதித்து சுற்றிலும் துப்பாக்கிகளோடு போலீஸ் நிற்க, தன்னந்தனியாய் வயலுக்குள் இறங்கி ஏர் பிடித்து நின்ற கே.பி.ஜானகியம்மாளை எப்படி மறக்க முடியும்? மீறி மீறி எழும் போராட்டங்களையும், தொடரும் மக்களுக்கான இயக்கத்தையும் அறிய அறிய விம்மிப் போக வைத்தது.

காலந்தோறும் எழுந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இருந்த பார்வையும், தீர்க்கமும், உறுதியும் அசாதாரணமானவை. இன்றைக்கு மொழி வழி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணம் கம்யூனிஸ்ட் இயக்கமே. 1928லிருந்து 1968 வரையில் 40 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகள் விடாமல் நடத்திய இயக்கத்தால்தான் ‘தமிழ்நாடு’ உருவானது.

கடந்த காலத்திற்குள் அங்குமிங்குமாய் அலைந்து திரிந்துவிட்டு விடுபடாமல் இருக்கிறேன். அர்ப்பணிப்பு, நேர்மை, வீரம், தியாகம் நிறைந்த காலத்தின் பெரும் பரப்பு அலைக்கழிக்கிறது. மாபெரும் இதிகாசத்தின் பக்கங்களாய் அவை புரண்டு கொண்டிருக்கின்றன.

மதுரையில் வரும் மார்ச் 30-ம் தேதியிலிருந்து (இன்று) நான்கு நாட்கள் நடைபெற இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்கான கண்காட்சிக்கான படங்களை தயாரிக்கும் பொறுப்பை தோழர்கள் ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா என்னிடம் தந்திருந்தார்கள். அவர்களது ஆலோசனைகள், வழிகாட்டுதல்களோடு பணியில் இறங்கினாலும், அந்தக் காலத்தை அறிந்து கொள்வதற்காக கடந்த 20 நாட்களாக புத்தகங்களையும், தகவல்களையும், ஆவணங்களையும் தேடித்தேடி அறிந்து கொண்டதன் அதிர்வுகள் அடங்காமல் இருக்கின்றன. அவ்வப்போது தனித்தனியாய் கேட்ட, படித்த வரலாற்றை மொத்தமாய் அறிய நேரும் அனுபவம் கனமாய் இருக்கிறது.

கிடைத்த அவகாசம் கொஞ்சம்தான். நாங்கள் அறிந்ததும் மிகச் சொற்பமானவைதான். அதிலிருந்து சிதறிய சில துளிகளே ’தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்’ என்னும் கண்காட்சியாய் இருக்கப் போகிறது.

ஆனால் இந்த வரலாற்றை மிகச் சுருக்கமாகவேனும், ‘வீர சுதந்திரம் வேண்டி..’ புத்தகம் போல எளிமையாய் தரவுகளோடும், ஆவணங்களோடும், வாசிக்கும் மொழியோடும் தயாரித்து வெளியிட வேண்டும். அதுவே இப்போதைய வேட்கையாய் இருக்கிறது.

பார்ப்போம்!

தோழர் ஜா.மாதவராஜ்

Related Stories

No stories found.