இணைய உலகம்

மாற்றுப்பாலினத்தோர் குரலாகும் திவ்யா பாரதி
இணைய உலகம்

சமூக ஊடகங்களில் தம் அடையாளங்களை மறைத்துக்கொண்டு அனானிகளாக வலம்வருவோரே அதிகம். வெளிப்படையாளர்களாக காட்டிக்கொள்வோர் மத்தியிலும், பொதுவெளியில் தாங்கள் விரும்பும் பிம்பத்தை கட்டமைக்கும் வியூகமே ஒளிந்திருக்கும். இவர்களுக்கு மத்தியில் மிகச் சிலரே சமூக ஊடகங்களில் சுயத்தோடு உலவி வருகின்றனர். அவர்களில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், சுயாதீன ஆவணப்பட படைப்பாளியுமான திவ்யா பாரதியும் ஒருவர்.

பொதுவெளியில் மறுக்கப்படும் மற்றும் மறைக்கப்படும் மாற்றுப்பாலினத்தோர் குறித்த விழிப்புணர்வை, அவர்களுக்கான அரசியல் மற்றும் சமூக அக்கறை கலந்து இவர் முகநூலில் வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கையையும் அதையொட்டியே தீர்மானித்திருக்கும் இவர், முகமூடிகளோடு முகநூலில் தடுமாறுவோருக்கு பாடமாகவும் மாறியுள்ளார்.

பாலியல் சார்ந்த ஐயங்கள் என்பவைக்கு அப்பால் மாற்றுப் பாலினத்தோர் குறித்த புரிதல்கள் அற்ற சமூகத்தில் திவ்யா பாரதியின் பதிவுகள் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை. தடுமாற்றத்துக்கு ஆளாகும் மாறுபட்ட பாலீர்ப்பு குறித்த புரிதல்கள் இல்லாத சமூகத்தில் திவ்யா பாரதி முன்வைக்கும் கருத்துக்களும், பேசு பொருள்களும் பொதுவெளிக்குப் புதுசு.

திவ்யா பாரதி
திவ்யா பாரதி

முக நூலுக்கு அப்பால் ’ரெட் பலூன்’ என்ற யூடியூப் சானலை உருவாக்கி அதிலும் தனது வாழ்க்கை மற்றும் கருத்துகளை பதிவிட்டு வரும் திவ்யா பாரதி, மாற்றுப்பாலினத்தோர் உரிமைகள், பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதுடன் அவர்களுக்கும் பொதுசமூகத்தினருக்கும் இடையிலான பள்ளத்தை தூர்ப்பதிலும் முன்னேறி வருகிறார்.

ஜூனில் மாற்றுப்பாலினத்தோர் கூட்டிய சென்னை பேரணி, தனது பிரியத்துக்குரிய காதல் துணை குறித்தான பதிவுகள், புதிய படைப்பான ’ஜில்லு’ குறித்த அறிவிப்பு என அண்மைக்காலமாக முகநூல் பதிவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார் திவ்யா பாரதி.

ட்விட் உலகை கலங்கடித்த பிடிஆர்

இந்த வாரம் சமூக ஊடகங்களின் விவாதங்களில் அதிகப்படியான விளிப்புகளுக்கும், விதந்தோதல்களுக்கும் ஆளாகியிருக்கிறார் தமிழக நிதியமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அமைச்சர் வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசியதில் முதல் சுற்று களேபரம் முளைத்தது.

திமுக தொண்டர்கள் கொதித்தபோதும், ‘பிண அரசியலை தவிர்க்கிறேன்’ என்று அப்போதைக்கு விலகிச் சென்றார் அமைச்சர். ஆனால், நள்ளிரவே பாஜகவின் மதுரை மாநகர் மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன், அமைச்சரைச் சந்தித்து மன்னிப்புக் கோரியதும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ததுமான செய்திகள் மதுரைக்கு அப்பாலும் அரசியலை உலுக்கின. அதற்கடுத்த நாளில் ஒற்றைச் செருப்பு படத்தை ட்விட்டரில் பிரசுரித்து பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்த ‘சின்ட்ரெல்லா’ பதிவும் ட்விட்டரை கலக்கியது. இப்படி தெற்கே அலைபாரித்த அமைச்சர் புகழ், அடுத்த சுற்றில் வடக்கே மையம் கொண்டது.

வடக்கத்திய தொலைக்காட்சிகளின் நேரடி விவாதங்களில் பங்கேற்பதற்கு என்றே கட்சிகள் தோறும் பிரபலங்கள் உண்டு. அனுபவம் வாய்ந்த இந்த நிலைய வித்துவான்கள் முன்பாக தெற்கின் குரல் பெரும்பாலும் தணிந்தே ஒலிக்கும். அப்படி தேசிய தொலைக்காட்சி ஒன்றின் லைவ் விவாதத்தில் தன்னை பங்கேற்க அழைத்தவர்களுக்கு அந்த அபிப்பிராயத்தை மாற்றியமைத்தார் பழனிவேல் தியாகராஜன்.

மக்களுக்கான இலவசங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் கேள்விகள் முதல் குஜராத் அரசியலை முன்னிறுத்தி இலவசங்களுக்கு எதிராக முழக்கமிட்ட பிரதமர் மோடி வரை பலதையும் முன்வைத்து அந்த தொலைக்காட்சி விவாதம் சென்றது. இதில் பழனிவேல் தியாகராஜனை குறிவைத்து தமிழக திராவிட கட்சிகளின் இலவச அரசியல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் சீண்டலுக்கு ஆளாயின. இதையொட்டிய நீளமான கேள்வியை முன்வைத்த நெறியாளர் மற்றும் சக விருந்தினர்களின் வாயடைக்கும் வகையில் சீற்றமாக பதிலளித்தார் பழனிவேல் தியாகராஜன். அதிரடியான அவரது பதிலும் அதை மிஞ்சிய உடல்மொழியும் தேசம் முழுமைக்குமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையொட்டிய மீம் வீடியோக்களும் உற்சாகமாக பரப்பப்பட்டன.

கூடவே, மனிதவளத்தின் மீதான அரசுகளின் பொறுப்பான முதலீடாகப் பார்க்கப்படும் இலவசங்கள் குறித்தும், மத்தியிலும் மாநிலத்திலுமாக நிதியமைச்சர் பொறுப்புகளை வகிக்கும் 2 தமிழர்கள் இடையிலான வேறுபாடுகளை அவர்கள் சார்ந்த கொள்கைகள் மற்றும் கட்சிகள் தீர்மானிப்பதும் தொடர் விவாதங்களை உருவாக்கி வருகின்றன.

தொடரும் சர்ச்சை: அங்கம் மறைத்த ஆபரணங்கள்

சந்தையில் தமக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் மாடல்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் அவ்வப்போது ஏந்தும் அஸ்திரங்களாக அவர்களின் தேகங்களே அமைவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றை தரிசிப்பதற்கான கலைக்கண் பார்வையும் கோரப்படும்.

பெண்களுக்கு நிகராக பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் அண்மையில் பாலிவுட்டின் ரன்வீர் சிங் முதல் கோலிவுட்டின் விஷ்ணு விஷால் வரை, அப்பட்டமாய் தேகத்தை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளானார்கள். இன்ஸ்டாகிராமை கலக்கும் இந்த வரிசையில், தற்போது பெண்களின் முறையாக மலையாளக் கரையிலிருந்து ஒருவர் களமிறங்கி இருக்கிறார்.

ஜானகி சுதீர்
ஜானகி சுதீர்

கேரள நடிகையும், மாடலுமான ஜானகி சுதீர், கேரள பாரம்பரிய முண்டு அணிந்து மேலாடைக்கு பதில் தங்க ஆபரணங்களை தரித்து போட்டோ ஷூட் நடத்தினார். இன்ஸ்டாகிராம் வாயிலாக அவை இணையத்தில் வைரலானதும் ‘வரம்பு மீறாதும் எனது உடலமைப்புக்கு பொருந்திய வகையிலும் காட்சியளிப்பதில் கவனமாக இருக்கிறேன்’ என்று ஜானகி சமாளித்தார். ஆனபோதும் சர்ச்சைகள் துரத்தவே, சுதந்திர தினத்தை முன்னிட்டு முழுநீள ஆடையுடன் தேசிய கொடியேந்தி கணவருடன் காட்சியளிக்கும் படங்களை பகிர்ந்து மடைமாற்றினார்.

அரைகுறை படங்களை வெளியிட்டு விளம்பரம் சேர்ப்பது ஜானகி சுதீருக்கு புதிதல்ல என்பதாலும், அம்மிணியின் இன்ஸ்டா கணக்கில் பின்தொடர்வோர் எண்ணிக்கை கூடி வருகிறது.

தத்துவ முத்துக்கள்

1 .பொய் மட்டுமல்ல உண்மை பேசினாலும் உறவுகள் உடைந்து போகும் தருணங்களில் மௌனமே சிறந்த ஆயுதம் @BkkFazul

2. உறவொன்றை தக்க வைத்துக்கொள்ளவதற்கான மெனக்கிடலை எப்போது தொடங்குகிறோமோ அப்போதே அந்த உறவின் பிடியை இழக்க ஆரம்பித்துவிடுகிறோம்! @Kavithadurai9

3. வாழ்க்கைத் துணையிடம் தொடக்கத்தில் காட்டும் நெருக்கத்தில் பாதியாவது அதன் பிறகான வாழ்க்கையில் கொடுத்துப் பாருங்க... இல்லற வாழ்க்கை இனிக்கும் @Drshalini_R

4. கொடுத்த பணியை 'பொறுப்பாக' செய்வதற்கும் 'பெருமைக்காக' செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இறுதியில் கிடைக்கும் வெற்றி - தோல்வியும் அந்த வித்தியாசத்தில் அடங்கும் @sasitwittz

5. இழப்பின் வலியை முழுமையாக உணர்ந்தவர்கள் எந்தவொரு உறவையும் தக்க வைத்துக்கொள்ள விரும்புவதில்லை @THANIMAI_TWEET

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in