இணைய உலகம்

காதல் எனப்படுவது யாதெனில்...
இணைய உலகம்

யூடியூபில் வித்தியாசமாய் வீடியோ வெளியிடும் முயற்சியில் சக யூடியூபர்களுக்கு கன்டென்ட் வாரி வழங்கும் வள்ளல்கள் உண்டு. அவர்களில், அண்மையில் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களுக்கு அதிகம் இரையாகி வரும் ‘ராஜன் வகையறா’ சானல் தனி ரகம்.

’காதல்னா என்னன்னா...’ என்று 80, 90-களின் வாலிப நெஞ்சங்களை புல்லரிக்க வைத்த சினிமா வசனங்கள் மற்றும் ’தபூ சங்கர்’ கவிதை பாதிப்பிலான பிதற்றல்களை கலந்தடித்து வெப் சீரிஸ் முதல் ஷார்ட்ஸ் வரை இந்த சானலில் வெளியிடுகிறார்கள். காதலை விதந்தோதும் முயற்சியிலான சகல கிறுக்கத்தனங்களும் சேர்ந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக சிலாகிக்கப்பட்டும் வருகின்றன.

பொறியியல் பட்டதாரியான தெக்கத்தி இளைஞன் பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறான். உணவு விநியோக நிறுவனத்தின் சிப்பந்தியாக அலையும் அவன் வாழ்க்கையில் காதலி, பெஸ்டி என்றெல்லாம் பெண்கள் குறுக்கிடுகிறார்கள். இவர்களிடம் காதல் என்னும் வஸ்து மாட்டிக்கொள்வதும், அதன் பெயரில் பார்வையாளர்களை படுத்தியெடுப்பதுதான் ராஜன் வகையறாவின் ஹைலைட். வீடியோவில் இடம்பெறும் காதலர்களின் உளறல்கள் உருக்கமாக இருந்தாலும், பார்வையாளர்களை சிரித்தபடி ரசிக்கச் செய்வன. இவர்களின் காதல் பித்தேறிய காட்சிகளை கருவாகக் கொண்டு ’எம்டி ஹேண்ட்’ அஜித் போன்றவர்கள் வெளியிட்ட ட்ரோல் வீடியோக்களும் யூடியூபில் ஹிட்டடித்து வருகின்றன.

அண்மை வீடியோவில் இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல்களால் மனம் வெதும்பிய ஸ்விக்கி இளைஞன், கோபித்துக்கொண்டு சென்னையை விட்டே வெளியேறுவதாக பதிவு செய்திருந்தார்கள். இதனை காமெடியாக ரசிப்பவர்களுக்கு அப்பால் உண்மையென்று நம்பி ஆறுதல் தெரிவிப்போரும் யூடியூப் உலகத்தில் இருக்கிறார்கள். காதலின் பெயரிலான இந்த காமெடி கொண்டாட்டங்கள் நிஜவுலகின் ரணகளங்களில் இருந்து பார்வையாளர்களை சற்றே விடுவிக்கவும் செய்கின்றன.

சாக்லேட் பையன்களும் பூமர்களும்!

சமூக ஊடகங்களில் எழுந்தடங்கும் அலைகளையும் அவற்றின் திசை மற்றும் வேகத்தையும் கணிப்பது கடினம். அப்போதைக்கான விவகாரங்கள் மட்டுமன்றி எப்போதோ நிகழ்ந்தவைகூட திடீரென ட்ரெண்டிங்கில் தலைகாட்டுவதுண்டு. அப்படி அண்மையில் முகநூலில் விவாத அலையைக் கிளப்பியது, சாக்லேட் பாய்ஸை சதாய்க்கும் விவாதம்.

சேனல்களில் வெளியாகும் பிரபல டாக்‌ஷோ நிகழ்ச்சிகளில் இயக்குநர் கரு.பழனியப்பன் ’ஜீ தமிழ்’ சேனலில் தொகுத்து வழங்கும் ’தமிழா... தமிழா’வும் ஒன்று. ’மென்மையான ’சாக்லேட்’ பையன்களிடமிருந்து கரடுமுரடான ’ரக்ட்’ பையன்களிடம் தாவும் நவீன இளம்பெண்களின் ஈர்ப்பு குறித்த 2019, செப்டம்பர் ’தமிழா தமிழா’ விவாதம் எப்படியோ முகநூலில் முளைத்து ட்ரெண்டிங்கில் முன்னேறியது. முகநூல் முக்கியஸ்தர்கள் இரு பிரிவாக பிரிந்ததில் விவாதங்கள் சூடுபிடித்தன.

வழக்கமாக அரசியல், சினிமா, சமூக பிரச்சினைகள் என ரத்தக்களரியாகும் முகநூல் விவாதங்களுக்கு மாற்றாக, சாக்லேட் பையன்கள் சார்பிலான வாதங்கள் அதிகம் கவனம் ஈர்த்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விவாத அலைவரிசைப்படியே, பெண்களில் பெரும்பாலானோர் முரட்டு ஆண்கள் பக்கமும், ஆண்களின் கணிசமானோர் சாக்லேட் பையன்கள் சார்பாகவும் நின்று வாதங்களை அடுக்கினர்.

இதில் கவனிக்கத்தக்க அம்சமாக, சாக்லேட் பையன்கள் சார்பாக விவாதம் செய்தவர்களில் பலரும் ’பையன் பருவ’த்தை பரிதாபமாய் தொலைத்த ஏக்க பூமர்களாக இருந்ததும் உப விவாதப் பொருளானது. மேலும், மீம்ஸ்களிலும் இந்த விவாதமே கொடிகட்டிப் பறந்தது.

மோடியைக் கலங்கடித்த கருப்பு!

விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ் முன்னெடுத்த போராட்டம், அதை விமர்சித்த மோடியால் அதிகமானோரை சென்றடைந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு ஆடை அணிந்திருந்ததை ஒரு வாரம் கழித்து விமர்சித்திருந்தார் மோடி. காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு ஆடை அணிந்து 'பிளாக் மேஜிக்' செய்வதாக தன் பாணியில் மோடி தாக்கியிருந்தார். ’கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருகாலும் மக்கள் ஆதரவைப் பெற மாட்டார்கள்’ என்றெல்லாம் தனது கருப்புக்கு எதிரான உரையில் வெளுத்திருந்தார் மோடி. இதற்கு இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிட தமிழகமே அதிகம் எதிர்வினையாற்றத் தொடங்கியது. மோடியின் தமிழக வருகையின் போதெல்லாம் கருப்புக் கொடி பிடித்தது மட்டுமன்றி கருப்பு பலூன்களை பறக்க விட்டும், கருப்பு ஆடை அணிந்துமாக போராட்ட முகம் கண்ட திராவிட தமிழர்கள் இந்த பதிலடியில் மும்முரமானார்கள்.

திமுகவினர் மட்டுமன்றி அதன் தோழமை கட்சிகளும் இதில் வேகம் காட்டினார்கள். வாழ்நாள் முழுக்க கருப்பாடை அணிந்து கொள்கை பரப்பிய பெரியாரை நினைவுகூர்ந்த ப.சிதம்பரம், மோடியின் கூற்றுக்கு மாறாக கருப்பு பெரியாருக்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை விளக்கி ட்வீட் செய்தார். ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்பி-க்கள் தங்களது ட்விட்டுகள் மூலம் சமூக ஊடகங்களில் கருப்பு அலையை முன்னெடுத்தனர். அங்கே தொடங்கி மோடி ஆதரவாளர்களுக்கும் கருப்பு தமிழர்களுக்கும் இடையே ட்விட்டரில் பற்றிக்கொண்டது. இதில் கருப்பை வெறுத்த மோடியை தாக்கும் நோக்கில் அவர் கருப்பாடை அணிந்து உலவிய படங்கள் அதிகம் பதியப்பட்டன.

மோடி கூறியதற்காக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் தங்களது சமூக ஊடகங்களின் முகப்புப் படமாக தேசியக்கொடியை வைத்தனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் கணக்கும் தேசிய கொடிக்கு மாறியது. ஆனால், தனது கருப்பாடை அணிந்த முகப்பு படத்தை ரஜினி மாற்ற மறந்திருந்தார். புளூசட்டை மாறன் உள்ளிட்டோர் இதனையும் குறிப்பிட்டு மோடி மற்றும் ரஜினியை ஒருசேர வாரினார்கள். மேலும், அமித்ஷா, அண்ணாமலையில் தொடங்கி, அம்பானி, அதானி வரை மோடி முகாமின் பிரபலங்களை கருப்பு ஆடையில் கண்டெடுத்தும் பகிர்ந்து வருகிறார்கள்.

தத்துவ முத்துக்கள்

1. பைகளை நிறைப்பது மட்டுமே நோக்கமெனில், வைரங்கள் எதற்கு? கற்கள் போதுமே... @sThivagaran

2. உண்மைகள் தெரிந்திருந்தபோதும், அவை தெரியாது போல காட்டிக்கொள்வதற்கு பெரும் திறமை தேவையாகிறது @ssuba_18

3. சாவியில்லாமல் பூட்டிக்கொள்ளும் பூட்டுகள் சட்டென்று வசீகரிக்கின்றன. அமுக்குப்பூட்டுகளைப் போல் யாவையும் தனக்குள்ளேயே வைத்து அழுத்திப் பூட்டிக்கொள்ளும் மனங்கள் ஒருபோதும் சாவியைத் தேடுவதில்லை. @narsimp

4. தமிழகத்தில் கஞ்சா மட்டுமே போதைப்பொருள்; டாஸ்மாக்கில் விற்பவை அனைத்தும் ஊட்டச்சத்துக்கான டானிக் வகையறாக்கள் போல... @talksstweet

5. பிறர்க்கின்னா மும்பையில் செய்யின், தமக்கின்னா பிஹாரில் தானே வரும் #பாஜக பரிதாபங்கள் @urs_venba

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in