இணைய உலகம்

யூடியூப் சானல்களுக்கு அவல் தரும் சூர்யா
மோடியுடன் சூர்யா
மோடியுடன் சூர்யா

பாஜகவில் அடுத்தடுத்து இணையும் மாற்றுக் கட்சியினரில் ஒருவராகவே திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் சூர்யாவின் பாஜக பிரவேசமும் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டது. ஆனால், தனது அதிரடியான பேட்டிகளால் தற்போது அரசியல் வெளியில் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறார் சூர்யா. குறிப்பாக, ஸ்டாலின் குடும்பத்தை குறிவைத்து தாக்குவதிலும் சூர்யா திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

காட்சி ஊடகமான யூடியூப்பில் ஆழமும் செறிவுமான தேடல்களைவிட மேலோட்டமான அரசியல் அவல்களுக்கு அதிக வரவேற்புண்டு. மரபான ஊடகங்களின் தெளிவு, நிதானம், விழுமியம் உள்ளிட்டவற்றை ஓரமாய் வைத்துவிட்டு, பரபரப்பின் பெயரில் இறங்கி அடிப்பதில் பெரும் போட்டியே நடக்கும். யூடியூப் சேனல்களுக்கு அப்படி பேட்டியளிப்பதில் அவசியமான மிகச் சிலரின் வரிசையில் அண்மையில் இணைந்திருக்கிறார் சூர்யா சிவா.

தந்தையுடனான தனிப்பட்ட கசப்பாலும் சட்டப்பேரவை தேர்தலில் சீட் கிடைக்காத வெறுப்பினாலும் திமுகவை துறந்து பாஜகவில் ஐக்கியமானார் சூர்யா. அப்போது முதல், திமுகவின் உள்விவகாரங்களை அதிகம் அறிந்தவர் என்ற மோஸ்தரில் அரசியல் யூடியூப் சானல்களுக்கு அவலை அள்ளித் தருகிறார். அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல என்பதால் கட்சி தாவும் அரசியல்வாதிகள் முந்தைய கட்சியை சற்று சுதாரிப்புடனே தாக்குவார்கள். அதையெல்லாம் பார்க்காத சூர்யா, திமுகவின் உட்கட்சி விவகாரங்களை தொடர்ந்து அம்பலமாக்கி வருகிறார்.

கட்சியில் உதயநிதியின் தனி சாம்ராஜ்யம், ’மாப்பிள்ளை’ சபரீசனின் வணிக முகம், அதிகம் அறியப்படாத துர்கா ஸ்டாலினின் அரசியல் ஈடுபாடு, ஒதுக்கப்படும் கனிமொழி என சூர்யா அள்ளித்தெளிக்கும் கருத்துகள் திமுகவினரை அதிகம் சீண்டி வருகின்றன. சினிமா பேட்டிகளில் பயில்வான் ரங்கநாதன் கிளப்பும் பரபரப்புக்கு இணையாக சூர்யாவின் சில அரசியல் பேட்டிகள் பூர்த்தி செய்வதாகவும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார். திமுகவுக்கு நிகராக தங்களை நிறுத்தும் பிரயத்தனத்தில் தவிக்கும் பாஜகவினருக்கு சூர்யாவின் தடாலடிகள் உற்சாகமூட்டியும் வருகிறது.

சரளமான பேச்சு, கருத்துகளை சரமாக தொடுக்கும் உத்தி ஆகியவை சூர்யாவின் பிரபல்யத்துக்கு காரணமாகியும் வருகின்றன. கூடவே கைது, எதிர் வம்புகள் என எவற்றுக்கும் அஞ்சாத திராவிட முகாமுக்கே உரிய கெத்தும் பாஜகவுக்கு தாவிய சூர்யாவுக்கு எளிதில் வருகிறது. பாஜக - திமுக இடையிலான தேர்தல் கூட்டணி தவிர்த்த இதர திசைகளில் எல்லாம் இப்போதைக்கு சூர்யா பிரகாசித்தே வருகிறார்.

இன்ஸ்டாவை கலக்கும் ’வேற’ வேதிகா

17 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜூன் ஜோடியாக ‘மதராஸி’யில் அறிமுகமாக வேதிகாவுக்கு, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் காவியத்தலைவன், ராகவா லாரன்ஸின் காஞ்சனா வரிசை என குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கிட்டியபோதும், ரசிகர்களின் நெஞ்சைத் தைக்கும் தேவதைகளின் வரிசையில் துண்டுபோட திணறி வருகிறார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு என இதர தென்னக மொழிகளிலும் தடம் பதித்த வேதிகா, 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட்டிலும் பிரவேசித்தார். எனினும் வேதிகா எதிர்பார்த்த வேதியியல் மாற்றம் நிகழவில்லை. இதற்கிடையே, ஒரு மாதம் முன்னராக கரோனா தொற்றுக்கு ஆளான வேதிகா, அது குறித்த பதிவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிதாபத்தையும் அள்ளினார். ’உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்’ என்ற தலைப்பில் அவர் விடுத்த கரோனா விழிப்புணர்வு சமூக ஊடகங்களில் அதிகம் சிலாகிக்கப்பட்டது. பின்னர் பெருந்தொற்றிலிருந்து தான் குணமடைந்ததை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாவில் மையம் கொண்டார்.

இப்போது, அடுத்த சுற்று திரைவலத்துக்கு தான் தயாரானதை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சி அலையில் குதித்திருக்கிறார். அவற்றை பறைசாற்றும் படங்கள் மற்றும் வீடியோக்களை வரிசையாக இன்ஸ்டாவில் வலையேற்றி வருகிறார். அந்த வரிசையில் மாலத்தீவிலிருந்து அவர் வீசிய இன்ஸ்டா வெடிகுண்டுக்கு இதர சமூக ஊடகங்களும் அதிர்ந்தன. வேறான வேதிகாவின் முயற்சிகள் திரைவாய்ப்புகளாக வேகுமா?

சாவின் விளிம்பிலும் விழிப்புணர்வூட்டிய பானு!

முகநூல் பதிவர்கள் மத்தியில் ஒரு சிலரின் மறைவு பதிவுலகை உலுக்குவதுண்டு. பெருந்தொற்று பரவலின் மத்தியில், பழகியவர்கள் பலரை இழந்ததில் இம்மாதிரியான ஓலம் முகநூலில் அதிகம் எதிரொலித்தது. அண்மையில் புற்றுக்கு பலியான பானு இக்பால் என்ற பதிவரின் இழப்பு முகநூலில் சோகத்தையும், விழிப்புணர்வையும் ஒரு சேர எழுப்பியுள்ளது.

இலக்கிய ஆர்வலராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் அதிகம் அறியப்பட்டவர் பானு இக்பால். தனது முற்போக்கு கருத்துகளை நூல்களாகவும் வெளியுட்டுள்ளார். இளம்வயதில் திடீரென புற்றுநோயால் பீடிக்கப்பட்ட பானு இக்பால், அதற்கான சிகிச்சைகளுக்கு மத்தியிலும் எழுத்து மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை தொடர்ந்திருக்கிறார்.

மருத்துவ முயற்சிகளை மீறி மார்பக புற்றின் வீரியம் இதர உள்ளுறுப்புகளிலும் பரவியதில் சோர்ந்து போனார். சாவின் விளிம்பில் நின்றபோதும் புற்று பீடித்ததன் அனுபவங்களை சமூகத்துக்கு உதவும் வகையில் பதிவிட முடிவு செய்திருக்கிறார். அந்த வகையில், புற்றுக்கு எதிரான தனது போராட்டத்தையும், மருத்துவ அனுபவங்களையும் கட்டுரைகளாக்கி ‘மனப்பொழிவின் மாயவாசனை’ என்ற நூலாக வெளியிட்டார். தீவிரமான உடல்நோவின் மத்தியிலும் தனது அபிமானத்துக்குரிய அரசியல் மற்றும் சமூக ஆளுமைகளை சந்தித்து நூலை பிரபல்யப்படுத்தினார்.

புற்றுடனான போராட்ட அனுபவங்களை சக பெண்களுக்கான விழிப்புணர்வாக விதைத்து சென்றிருக்கும் பானு இக்பாலை, அவர் விரும்பியவாறே புற்றுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்பும் வகையில் சக பதிவர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தத்துவ முத்துக்கள்

1. ஏமாந்த தருணங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கெல்லாம் நாம் உண்மையாக இருந்த விநோதத்தை அறிந்து வியக்கலாம் @rasigan_vivasa

2. 'நானே இறங்கி வரேன்... உனக்கென்ன இவ்ளோ ஈகோ?' என்பதில் 'நானே' என்பதென்னவோ? @arattaigirl

3. வாழ்க்கையில் நாம் இடறும் முட்டாள்தனங்கள்கூட, பின்னாளில் ரசித்து சிரிக்கவும் நினைவுகூரப்படலாம். எனவே, எதற்காகவும் வருந்துவதில் பயனில்லை. @i_akaran

4. நிம்மதி நிறைந்த வாழ்க்கைக்கான மாமருந்துகளில் முக்கியமானது ஞாபக மறதி. ஏனெனில் சில நினைவுகள் நம்மை கொல்லவும் செய்யும். @mgspooja

5. குறைகள் மட்டுமே பெரிதாய் தெரிகிறதெனில், அங்கே நேசம் குறைவதாய் அறிக! @reena_off

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in